மருத்துவத் துறையில் இன்று மாரடைப்பு போன்ற நோய்கள் அதிகரித்து வரும் போக்கையும் வயது குறைவானவர்களுக்கு பாதிக்கப்படும் சூழலையும் காண்கிறோம் . இதன் காரணங்களை புரிந்து கொள்வதும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதும் நோய் ஏற்பட்டவுடன் அதனை கண்டுபிடிக்கும் முறைகளை பற்றிய விழிப்புணர்வும் அவசியமாகும் .
இந்த விஷயத்தில் சரியான புரிதல் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தவிர்த்து நல்ல ஆற்றலுடன் செயல்படும் திறனை பாதுகாத்துக்கொள்ள இயலும்.
அதேரோஸ்கிளெரோசிஸ் atherosclerosis என்னும் உயிர்க் கொல்லி நோயே heart attack எனப்படும் மாரடைப்பு ( coronary artery disease) நோயின் தொடக்கப் புள்ளியாகும். பல காரணங்கள் இருப்பினும் மனிதர்க்கு இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்:
1. புகை பழக்கம்
2. நீரிழிவு நோய்
3. இரத்த அழுத்தம்
4. மரபணு சார்ந்த குடும்ப ரீதியாக ஏற்படுதல்
இத்தகைய காரணங்கள் ஏதுமின்றி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அய்ந்து சதவிகிதத்திற்கும் குறைவே . இதில் சிறு வயதினர்க்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் நீரிழிவு நோயும் புகைப் பழக்கமும் தான். தாய் தந்தையர்க்கு மற்றும் சகோதரர்களுக்கு இதய நோய் இருந்தால் ஒருவர்க்கு அதே பிரச்சினை இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.
இதய நோய் அறிகுறிகள்
இதய நோய் இருப்பதனை கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் பல உள்ளன . அவற்றுள் முக்கியமானவை 1.ECG 2.Echo 3.Troponin இரத்தப் பரிசோதனை 4.ட்ரெட்மில் டெஸ்ட் 5.ஆஞ்சியோகிராம்.
ஒரு நபருக்கு இருதயதில் அடைப்பு இருந்தால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகள்
1.நெஞ்சுவலி- தோள்பட்டை மற்றும் இடது கையில் பரவுதல்
2. மூச்சு வாங்குதல் – நடக்கும் பொழுதும் மாடி ஏறும் பொழுதும்
3. அஜீரணம் போன்ற வயிற்று எரிச்சல்.
4. அதீத சோர்வு.
பல நோயாளிகள் இருதயம் சார்ந்த நெஞ்செரிச்சலினை acidity என்று நினைத்துக் கொண்டு அதற்கு மாத்திரைகள் உட்கொண்டு கால தாமதமாக இருதய மருத்துவரிடம் மாரடைப்பு ஏற்பட்டு வருவதுண்டு. அதே போல் மூச்சு வாங்குதல் இருப்பின் நுரையீரல் மருத்துவரிடம் சென்று சரி ஆகாததால்- பின்னர் ecg echo பரிசோதனையின் மூலம் இதயக் கோளாறு இருப்பதனையும் கண்டுபிடிப்பதுண்டு.
மேற்சொன்ன அறிகுறிகள் இருப்பின் – இதய மருத்துவரை அணுகி இசிஜி மற்றும் எக்கோ டெஸ்டினை செய்து கொள்ள வேண்டும் . முடிவின் அடிப்படையில் மருத்துவர் மேலும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் படி கூறலாம்.
ஆஞ்சியோகிராம் டெஸ்ட்
இதயத்தில் அடைப்பு இருந்தாலும் இசிஜி echo வில் சிலருக்கு எவ்வித மாற்றங்களும் இருக்காது. நோயாளியின் இதய நிலையை (Risk factors) மனதில் கொண்டு மருத்துவர் – ட்ரெட்மில் test அல்லது ஆஞ்சியோகிராம் டெஸ்டினை பரிந்துரைக்கலாம். இருதய அடைப்புகளை பொறுத்த வரை ஆஞ்சியோகிராம் டெஸ்ட் தான் முழுமையான தீர்ப்பினை அளிக்கக்கூடியது.
இவ்வாறான பரிசோதனைகளின் மூலம் இருதய அடைப்பு கண்டறியப்பட்டால் – அடைப்பின் சதவிகிதத்திற்கும் தன்மைக்கும் தகுந்தவாறு மாத்திரைகளோ, அஞ்சியோ பிளாஸ்டி எனப்படும் ஸ்டென்ட் சிகிச்சையோ அல்லது பைபாஸ் சர்ஜரி எனப்படும் அறுவை சிகிச்சையினையோ மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
இத்தகைய இதய நோய்கள் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நெறி முறைகளில் சிலவற்றை காண்போம்
1. உடற்பயிற்சி – நாள்தோறும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நடைப் பயிற்சி அவசியம்.
2. இரத்த அழுத்தம் உடையவர்கள் உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் . தவறாமல் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
3. சர்க்கரை நோயுடையவர்கள் தங்களது இரத்த சர்க்கரை அளவினை மூன்று மாதத்திற்கொருமுறை பரிசோதித்து சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
4. புகைப்பழக்கத்தினை கைவிட வேண்டும்.
5. உணவில் காய் கறிகளை அதிகம் உட்கொண்டு கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
6. உடல் பருமன் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7. சரியான அளவு தூக்கம் தேவை.
தவறான புரிதல்கள் மக்களிடம் நிரம்பிக்கிடக்கின்றன
அவற்றுள் ஒன்று மாத்திரைகளை பல ஆண்டுகளாக உட்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்பது – இது முற்றிலும் தவறு. இதய நோய், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தரப்படும் மருந்துகள் பல ஆண்டுகளுக்கு உட்கொண்டாலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை இல்லாதவாறு தயாரிக்கப்படுகின்றன. இதனை உறுதி செய்ய பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரே புழக்கத்திற்கு வருகின்றன.
மருத்துவர்கள் நாள்தோறும் பார்க்கக்கூடிய மிக சிக்கலான நிலையில் இருக்கும் நோயாளிகளில் பலர் இவ்வாறாக மாத்திரைகளை சரியாக உண்ணாமல் இருப்பவர்களே.
அனைவருக்கும் மாத்திரைகளிலேயே இதய கோளாறினை சரி செய்ய இயலாது. அடைப்பின் அளவை பொருத்தே சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
அறுவை சிகிச்சை சிறு வயதிலேயே செய்து கொண்டால் பழைய நிலைமைக்கு திரும்புவது கடினம் என்ற எண்ணம் மக்களிடையே பரவி உள்ளது . தற்போது சிகிச்சைகளின் தரம் உயர்ந்திருப்பதால் அறுவை சிகிசைக்கு பின்னரும் சிறப்பாக செயல்பட இயலும் . மேலும் வாழ்க்கையின் தரம் உயரும் . பல ஆண்டுகளுக்கு பிரச்சினைகள் வராமல் காப்பாற்றும்.