சென்னை, மார்ச் 1- மாம்பலம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2 கோயில்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மக்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்களில் நீர்நிலைகளைத் தூர்வாருதல், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்தி, தடுப்புச் சுவர் மற்றும் கம்பிவேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 117ஆவது வார்டு, தியாகராய சாலையில் உள்ள மாம்பலம் கால்வாயின் கரையில் நீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து 48 ஆண்டுகளாக ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோயில் ஆகியவை செயல்பட்டு வந்தன.
மழைக் காலங்களில் நீர்வரத்து அதிகமாகும் போதெல்லாம் இப்பகுதிகளில் நீர் சரியாக செல்ல முடியாமல் வெளியேறி, சுற்றியுள்ள குடியிருப்புகளான திரு.வி.க. குடியிருப்பு, கிரியப்பா சாலை, நக்கீரன் குடியிருப்பு, எம்.கே.ராதா நகர், எஸ்.எஸ்.புரம், பத்ரிகரை உள்ளிட்ட 20 குடியிருப்புப் பகுதிகளில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவ்விரு கோயில்களையும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (28.2.2025) அகற்றினர். இதனைத் தொடர்ந்து இப்பகுதி மாம்பலம் கால்வாயை தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, தடுப்புச் சுவர் அமைத்தும், அதன் மேல் குப்பை மற்றும் கழிவுகள் போடாத வகையில் கம்பிவேலி அமைத்தும் வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.