நீங்கள் இயக்கத்திற்கு எப்போது வந்தீர்கள்?
“மரியாதைக்குரிய கூட்டத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி அவர்களே…” என்கிற ஆசிரியரின் வார்த்தையைக் கேட்டவுடன் இயக்கத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டத்தில் தலைமையேற்ற நேரத்தில் கூட, நான் பெரியார் கொள்கையில் இல்லை. எனினும் நிகழ்ச்சிகளுக்கு மகளிரைத் தலைமையேற்க செய்ய வேண்டும் என்கிற ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இணையரும், நானும் கோபிசெட்டிப்பாளையம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்தோம். அந்த நேரத்தில் தான் என்னைத் தலைமை தாங்க சொன்னார்கள். முதலில் நான் மறுத்துவிட்டேன். காரணம் நான் கடவுள் நம்பிக்கை உள்ள பெண். அதுவும் சிறீ ராமஜெயத்தைத் தினமும் எழுதி வந்தவர். அப்படியிருக்க பெரியார் நிகழ்ச்சிக்கும், எனக்கும் என்ன தொடர்பு என்கிற ரீதியில் மறுத்துவிட்டேன்.
பிறகு எப்படி ஏற்றீர்கள்?
எனது இணையர் ஜெயராமன், “இந்தக் கூட்டத்திற்கு மட்டும் நீங்கள் தலைமை ஏற்கவும், பிறகு கொள்கையை ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம்”, எனக் கூறினார். இப்போது கோவையில் வசிக்கும் பொறியாளர் பரமசிவம் அவர்கள்தான் அப்போது ஈரோடு மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர். அவர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் அது. அவரும், செய்தியாளர் சீனிவாசன், கோபி, கருப்பண்ணன் உள்ளிட்ட தோழர்களும் வலியுறுத்தியதால் இறுதியில் ஒப்புக் கொண்டேன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு
உங்களின் சிந்தனை மாற்றம் எப்படி இருந்தது?
நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள், சென்றேன், தலைமையுரை ஆற்ற சொன்னார்கள். எனக்குப் பேச்சு அனுபவம் கிடையாது. இதற்கிடையில் கோபியில் பெரியார் பெருந்தொண்டர் வெங்கிட்டு அவர்கள் சில குறிப்புத் தந்தார்கள். அதை வைத்துப் பேசினேன். “சீதையைச் சந்தேகப்பட்ட இராமன் ஒரு பேடி” என்கிற ரீதியில் பேசிவிட்டேன். அன்று முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன். மேடையிலேயே கை, கால்கள் வியர்த்துவிட்டது.
அதேநேரம் நிகழ்ச்சி முடிந்து வரும்போது, ஆசிரியரிடம் என்னை அறிமுகம் செய்தார்கள். தலைமை ஏற்றதற்குப் பாராட்டுத் தெரிவித்து, ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்கு வாழ்த்தும் கூறினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நானும், இணையர் ஜெயராமன் அவர்களும் திருமணம் செய்ததைப் பெற்றோர்கள் ஏற்கவில்லை. அதனால் ஆதரவற்ற நிலை மற்றும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.
அப்படியிருக்கு ஒரு பெரும் நிகழ்ச்சியில் ஒரு மகளிரைத் தலைமையேற்க வைத்து, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதையும் வரவேற்று, அதற்கும் வாழ்த்துக் கூறுவார்களா என எண்ணி வியந்தேன். இந்த இயக்கம் தான் நமக்கு வேண்டும் என்று அன்று எடுத்த முடிவு தான்
இன்றுவரை தொடர்கிறது!
இந்த நிகழ்ச்சிக்கு முன்பு,
பெரியார் குறித்து அறிந்திருந்தீர்களா?
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை எனது சொந்த ஊர். இப்போது எனக்கு 67 வயதாகிறது. நான் 6 ஆம் வகுப்புப் படிக்கும் போது எங்கள் ஊருக்குப் பெரியார் வந்திருந்தார். நிலக்கோட்டையில் வழக்குரைஞர் கிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டம் அது. அந்த வழக்குரைஞரும், எனது தந்தையாரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் எங்களையும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திடலில் அந்தக் கூட்டம் நடைபெற்றது. கோயிலைப் பார்த்து, “இது ஒரு குட்டிச்சுவர்” எனப் பெரியார் பேசினார். அதுதான் இயல்பாக நான் பங்கேற்ற கூட்டம்.
மற்றபடி பெரியார் கூட்டங்களில் எங்கள் குடும்பத்தார் யாரும் கலந்து கொண்டதில்லை.
உங்கள் இணையர் குறித்துக் கூறுங்கள்?
நாங்கள் இருவரும் பி.எஸ்.என்.எல். பயிற்சிக்காக சென்னை மீனம்பாக்கம் அருகிலுள்ள தொலைத் தொடர்பு பயிற்சிக்கூடம் சென்ற போது, 1978 இல் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். பிறகு காதலித்து, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் ஏற்காத நிலையில் ஈரோட்டில் தந்தை பெரியார் சிலை முன்பு மாலை மாற்றி, பதிவுத் திருமணம் செய்தோம். திருமணத்தில் தாலி கட்டாததால் அன்று முழுவதும் அழுது கொண்டிருந்தேன். பின்னாளில் இப்படி அழுதிருக்கிறோமே என நினைத்து வெட்கப்பட்டேன். சுயமரியாதைத் திருமணம் செய்து, பெரியார் கொள்கையைப் பின்பற்றியதால் நாங்கள் குறைந்துவிடவில்லை; வெற்றியே பெற்றிருக்கிறோம்!
எங்களுக்கு 3 பிள்ளைகள். ஒருவர் சந்திரபோஸ் அம்பேத்கர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். மருத்துவக் கல்லூரிப் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.
அவரது இணையர் ஆர்த்தி மயக்கவியல் மருத்துவராக, சென்னை அய்ஸ்வர்யா மருத்துவமனையில் பணியாற்றுகிறார். மகள் கனிமொழி மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். அவரின் இணையர் மதிக்கண்ணன் தர்மபுரியில் பல்நோக்கு மருத்துவமனை வைத்துள்ளார்.
பெண்ணாகரம் அரசு மருத்துவமனையிலும் பணிபுரிந்து வருகிறார். கடைசி மகன் திராவிடன் அம்பேத்கர் பெங்களூருவில் மருத்துவராகப் பணி செய்கிறார். அவரின் இணையர் கீர்த்தி உயிரி தொழில் நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்று பணி செய்கிறார்.
இயக்கத்தில் தாங்கள் வகித்த பொறுப்புகள் குறித்துக் கூறுங்கள்?
முதன்முதலில் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டேன். பிறகு இரண்டு முறையும் அதே பொறுப்பில் நீடித்து வந்தேன். பிறகு பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளராக ஆசிரியர் அறிவித்தார்கள். தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகச் செயல் தலைவராகச் சில ஆண்டுகள் இருந்தேன். 2017 ஆம் ஆண்டு பணி ஓய்விற்குப் பிறகு, மாநில மகளிரணி பாசறை அமைப்பாளராக இருந்து, 2019 முதல் மாநில மகளிரணிச் செயலாளராக இருந்து வருகிறேன்.
தங்களின் இயக்கப் பணிகள் குறித்து
நினைவு கூருங்கள்?
1981 தொடங்கி இன்று வரையிலும் அத்தனை நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும், மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். பகுத்தறிவாளர் கழக மாநாட்டையும், தோழர்களுடன் இணைந்து நடத்தியுள்ளேன். இயக்கம் சார்பாக நடைபெற்ற வெளிநாட்டு கருத்தரங்குகள், மாநாடுகளிலும் இணையரோடு பங்கேற்றுள்ளேன்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவராக இருந்த போதே, தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி மகளிரணி சார்பாக நடைபெற்ற சுற்றுப் பயணத்தில் மாநிலம் முழுவதும் கலந்து கொண்டேன்.
அன்னத் தாயம்மாள், திருவாரூர் இராஜலட்சுமி, திருமகள், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், க.பார்வதி உள்ளிட்ட மூத்த மகளிர் தோழர் களோடு பயணம் செய்ததை என்னால் மறக்க இயலாது. அதேபோன்று மருத்துவர் பிறைநுதல் செல்வி, தஞ்சை கலைச்செல்வி, திருவாரூர் செந்தமிழ்ச்செல்வி, வேலூர் தேன்மொழி, டெய்சி மணியம்மை, சென்னை உமா ஆகிய தோழர்களுடனும் நிறைய பயணம் செய்துள்ளேன். துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனியும், நானும் 2019 ஆம் ஆண்டு 54 கழக மாவட்டங்களுக்குச் சென்று வந்தோம்.
பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மாநில மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம். தவிர தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பெண் சிசுக் கொலையைக் கண்டித்து, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பாகப் பேராசிரியர் பர்வீன் அவர்களோடு, கிராமங்கள் தோறும் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். அந்நிகழ்வுகளில் மகளிர் தோழர்கள் மட்டுமே பெரும்பாலும் பயணம் செய்தோம்.
ஆசிரியர் குறித்த தங்கள் எண்ணங்ளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?
“அதிசயத் தலைவர்” என்கிற தலைப்பில் ஆசிரியர் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். ஆசிரியர் அவர்களுடன் வாகனத்தில் செல்லும் வாய்ப்பை நானும், இணையரும் பெற்றுள்ளோம். ஆசிரியர் அவர்கள் எப்போதுமே ஒரு தகவல் களஞ்சியம்தான்! ஒரு ஊர் என்றால் அதன் வரலாறு, சாலைகள் குறித்த தகவல்கள், அவ்வூரில் நமது இயக்கத் தோழர்களின் விவரங்கள் என அனைத்தும் கூறுவார்கள்.
2012ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ஜாதிக் கலவரம் நடந்தது. அந்த நேரத்தில் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி செய்து பாதுகாப்பாய் இருங்கள் எனக் கூறினார். கிராமங்களில் எரிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்ற போது, மகளிர் கண்ணீர் விட்டு அழுதனர். ஆசிரியர் அவர்களும் கண்கலங்கியதைப் பார்க்க முடிந்தது.
“பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகமும், ஒடுக்கப்பட்ட சமூகமும் சகோதரர்கள் போல வாழ வேண்டும். ஏனென்றால் வேலைக்கு செல்லும் இடங்களில் உழைத்து விட்டு ஒருவருக்கு அருகில் ஒருவர் உறங்குகின்ற உழைப்புச் சமூகம் இருவரும்,” எனத் தர்மபுரி கூட்டத்தில் பேசினார்கள். இதுபோன்ற ஆசிரியரின் நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறினால், அது புத்தகமாய் விரியும். மொத்தத்தில் எங்களின் பொது வாழ்க்கைக்கு கி.வீரமணி அய்யா- மோகனா அம்மா, கவிஞர் கலி.பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோர் தான் வழிகாட்டி” எனத் தமிழ்ச்செல்வி கூறினார்.