மத்தியப் பிரதேசம் ஜபல்பூரின் பனாகர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ரைபுரா பகுதியில் உள்ள கல்மாபதி தேவி கோயிலில் ‘‘சிறீமத் பாகவத பிரசங்கம்’’ நடத்தப்பட்டது.
பிப்ரவரி 24 முதல் தொடங்கிய இந்தக் காலட்சேபம் நிகழ்ச்சியில், மறுநாள் (25.02.2025) கல்லூரி மாணவி யும், புராணக்கதைகளை சொல் நயத்துடன் கூறும் ராதா ஸ்வரூப் தேவிகா கிஷோரி என்ற பெயரில் அறியப்படும் தேவிகா படேலை காலட்சேபம் நடத்திட அழைத்திருந்தனர்.
இதுவரை எல்லா அழைப்பிதழ்களிலும் அவர் ராதாஸ்வரூப் கிஷோரி என்றே இருந்ததால் எல்லோரும் அவரை பார்ப்பனர் என்றே நினைத்து பகவத் கீதையைப் படிக்க அவரை அனுமதித்தனர்
இந்த நிலையில் அவரது கோவில் பிரசங்கத்தின் இந்த நிகழ்ச்சிக்கு தேவிகா படேல் என்று ஜாதிப்பெயரோடு அழைப்பிதழ் அச்சடிக்கப் பட்டது.
இதனை அடுத்து அன்று மாலை அவர் பிரசங்கம் செய்ய மேடை ஏறியபோது, அங்கிருந்த பார்ப்பனர்கள் ‘‘நீ சூத்திரப் பெண், எப்படி மேடை ஏறலாம்?’’ என்று கேட்டு அவரைத் தள்ளிவிட்டனர். அவர் அமர்ந்திருந்த இருக்கையில் எண்ணெய் ஊற்றிவிட்டனர்.
மேலும், அந்தக் கும்பல் ‘‘காலட்சேபம் நடந்த வேண்டு மெனில், பிராமணர் குடும்பத்தில் பிறந்திருக்கவேண்டும் அவர்கள்தான் மேடை ஏறி இருக்கையில் அமர்ந்து பிரசங்கம் செய்யமுடியும்
உன்னைப் போன்ற சூத்திரப் பெண் தரையில் உட்கார்ந்து கேட்கவேண்டுமே தவிர, பார்ப்பனர்கள் அடங்கிய மேடையில் ஏறி தீட்டாக்கக்கூடாது’’ என்று கூறி அவரை அவமானப்படுத்தி விரட்டினர்
ஸநாதன தர்மத்தின்படி இருக்கையில் அமர்ந்து காலட்சேபம் செய்ய புராணங்களின் அறிவு மட்டுமின்றி ‘‘பிராமண’’ ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினர். கோவில் நிர்வாகம் இது தொடர்பாக எந்தக் கருத்தும் கூறவில்லை.
தேவிகா படேல் பொதுமேடையில் பார்ப்பனர்களால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வு மாவட்டம் முழுவதும் பரவிய உடன் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது, மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூக அமைப்புகளோடு சேர்ந்து தேவிகா படேலுக்கு ஆதரவாக ஜபல்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய உறுப்பினரும், வழக்குரைஞருமான இந்திர குமார் படேல் இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்து, மனுவாதி மனப்பான்மை கொண்டவர்களால் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டதாகவும், அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் மகாசங்கம் மற்றும் எஸ்டி, எஸ்சி, ஓபிசி முன்னணி ஆகியவை பனாகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜபல்பூர் ‘‘பிராமண’’ அமைப்பின் தலைவர் ராம் துபே, தெரிவித்ததாவது, ‘‘ஸநாதன பாரம்பரியம் மற்றும் புராணங்களின்படி,பிரசங்கம் செய்யும் உரிமை ‘‘பிராமணர்’’களுக்கு மட்டுமே உண்டு, அவர்களின் பிறப்பே அதற்குத்தான், இங்கு பிராமணர்கள் அல்லாதோர் ஏன் வரவேண்டும்?
அவர் மேடை ஏறியது தவறு; ஸநாதனவிதிகளை மீறும் போது உண்மையான ஸநாதனிகளுக்குக் கோபம் வரத்தான் செய்யும், தவறு அந்தப்பெண்ணின் மீது இருக்கும் போது, தேவையில்லாமல் ‘‘பிராமணர்’’களை குற்றவாளியாக்க முயல்வது தேவையற்றது’’ என்றார்.
இந்த விவகாரத்தில் ஜபல்பூர் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர் கூறும் போது ‘‘பிராமண’’ சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் கதை வாசிப்பதை எதிர்த்ததாகவும், அதனால் இந்த சர்ச்சை உருவானதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இரு சமூகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மற்றும் சமரசத்துடன் இந்த விவகாரத்தை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
‘எப்படி இருக்கிறது – ஸநாதனமும் – பார்ப்பனீயமும், ‘‘ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம்!’’ என்று சொல்கிறார்களே, அந்த ஹிந்து ராஜ்ஜியம் இத்தகைய ஸநாதன அடிப்படையில் தானே நடக்கும். ஹிந்துக்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும், பார்ப்பனரல்லாதார் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? உரிமைக்காக கிளர்ந்து எழ வேண்டாமா?
காவல்துறை அதிகாரி சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசுவது கட்டப் பஞ்சாயத்து வெட்கக் கேடு!