சிதம்பரத்தில் 15.2.2025 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 5 (அ): பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை.
போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில், சித்தர் போகரின் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னர் அவர் வழி வந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.
திருமலை நாயக்க மன்னர் ஆட்சியில் படைத்தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்னும் பார்ப்பனர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தபோது, கோவிலில் பூசை செய்தவர்கள் சூத்திரர்கள் என்பதால், ‘‘அவர்களிடம் பிராமணனாகிய நான் பிரசாதம் வாங்க முடியாது’’ என்று கூறி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் பூசை செய்யும் பணியிலிருந்து நீக்கி, கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து அய்ந்து பார்ப்ப னர்களைக் கொண்டு வந்து அர்ச்சகர்களாக நியமித்தான் என்று பழனி கோவில் தலப் புராணமே கூறுகிறது.
ஆகமங்கள்பற்றியும், மரபுகள்பற்றியும் உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். அந்த வகையில், பார்க்கப் போனாலும், பழனியாண்டவர் கோவிலிலிருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி, போகர் வழிவந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை பழனியில் 27.2.2025 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்களிடையே தமிழர் தலைவர் முன்மொழிந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பொது மக்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்று வழி மொழிந்தனர்.