சில இயக்கங்கள் தலைவர்களின் செல்வாக்கால் தோன்றி வாழும். அவை அத்தலைவர்களின் செல்வாக்கு குன்றினாலோ. அவர் மறைந்தாலோ தாமும் மறைந்துவிடும். சில இயக்கங்கள் தொண்டர்களின் தொண்டால் தோன்றி தலைமைச் சிக்கலால் தடுமாறி சிதைந்துவிடும். சில நல்ல வழிகாட்டுதல் இல்லாமையால் கட்டுப்பாடு குலைந்து சிதறியதும் உண்டு.
நீதிக்கட்சியாக இருந்த தொடக்க காலத்தில் தொண்டர்களின்றி அது தவித்ததுண்டு. அதுவே பிறகு தலைமையற்றுத் தடுமாறியதுண்டு. பெரியார் கைக்கு வந்தபின் தலைமையும் தொண்டர்களும் வாய்க்கப்பெற்று திராவிட இயக்கம் வலுத்து ஓங்கியது. அண்ணா காலத்தில் தி.மு.க.வாகி தலைமையும் தொண்டும் தனிப்பெருஞ்சிறப்புடன் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில்போல் பல்கிப் பல்லாற்றலானும் சிறப்புடன் செழித்தது. மூன்றாவதாகக் கலைஞரின் கைக்கு வந்த பின் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஆக மூவரும் ஒருவராய் இருந்து நடத்த ‘முக்கூற்று ஒருமை’ வடிவம் பெற்றுத் தன்னிகரற்று எண்ணற்ற விழுதுகளால் படர்ந்தும் கவ்வி எடுக்க முடியாதபடி வேர் இறுக்கிப் படர்ந்தும் அங்கிங்கெணாதபடி கண்ணுக்கெட்டிய வரையில் எல்லாத் துறைகளிலும் வேர்களைப் பரப்பி தி.மு.க. எனும் பெயரில் திராவிட இயக்கம் நன்கு வளர்ந்து ஓங்கி உயர்ந்து வாழ்கிறது.
ஸ்டாலின் அவர்களை யாம் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் அங்கு மாணவராகத் துலங்கிய காலம் முதல் இன்று தி.மு.க.வின் பொருளாளராகவும், தி.மு.க. இளைஞரணியின் செயலாளராகவும் திகழும் வரை அவரை அருகிலிருந்தும் எட்டி நின்றும் நோக்கி, ஆராய்ந்து முடிவு செய்து கூறுவது யாதெனில், தி.மு.க.வுக்கு பெறலறும் பேறாக வாய்த்துள்ள முதன்மை இலங்கும் நற்றொண்டர் என்று அவரை யாம் முழுமனத்துடன் முழங்குகிறோம்.
பாசறைக் கூட்டங்களில் இளைஞர்களோடு நாள் முழுவதும். இரண்டு நாள், மூன்று நாள் என்று கூடிப் பழகி உருவாக்கியுள்ள இளைஞரணிக்கு ஈடாக இன்னொரு அணியை எடுத்துக்காட்டிட முடியுமா? இளைஞரணித் தம்பிகள் போல் வேறு எந்த அணியிலேனும் இயக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள் உண்டா?
இயக்கத்தைப் பற்றி தெரியாத வர்களே இல்லை எனும்படி இளைஞர் படையினர் அனைவருக்கும் அறிவும் பயிற்சியும் தந்து கடமை. கண்ணியம். கட்டுப்பாடு ஆகியவற்றில் தேர்ந்த ஒரு வலுவான பெரும் பகுதியைத் தி.மு.க.வில் உருவாக்கியுள்ள இந்த ஒன்றே போதும். இவரை நற்றொண்டர் என்றும், வன்தொண்டர் என்றும், முதன்மைத் தொண்டர் என்றும் இன்னும் இவற்றுக்கு மேலாகவும் கூறிப் போற்றி மகிழ்ந்து மனமார வாழ்த்துகிறோம்.
– முனைவர் மா.நன்னன்