முத்தமிழறிஞர் கலைஞர். அவர்களால் இந்த கல்லக்குடி தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்கப்பட்ட போது, நான் சிறுவனாக அந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன்.
ஏற்கெனவே, நுழைவாயிலில் பெரியார் நினைவு என்பது மிக சிறியதாகவும் சமத்துவபுரம், கல்லக்குடி என்பது மட்டும் பெரியதாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டி எழுதியிருந்தேன்.
இன்றளவிலும், அதனை மாற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இன்று, நான் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கடக்கும் போது அதன் நுழைவாயிலில் இருக்கும் தந்தை பெரியார் சிலை கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதையும் நுழைவாயிலுக்கு மற்றொரு புறம் பிள்ளையாருக்குக் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் காண நேர்ந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டும், எந்த பெரியார் நினைவு சமத்துவபுரங்களிலும் எந்தவொரு வழிபாட்டுத்தலங்களும் அமைக்கக் கூடாதென்ற அரசாணை மீறப்பட்டுள்ளது.
கல்லக்குடியில் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கட்டப்படும் பிள்ளையார் கோயிலை, அறிவியல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் சிற்றரங்கமாக மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.
– முரளிகிருஷ்ணன், சின்னதுரை