தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள்!
தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக் கொடுக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால், உங்களைப் புறக்கணிக்கக்கூடிய, எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு!
தாம்பரம், பிப்.26 ஒன்றிய பா.ஜ.க. அரசே, உன்னு டைய அதிகாரத்தைக் காட்டி, எதையாவது திணித்தால், தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள். தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக் கொடுக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால், உங்களைப் புறக்கணிக்கக்கூடிய, எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு. எல்லாக் கட்சிகளும் ஓரணியாக இருக்கிறார்கள். உன்னு டைய பி.ஜே.பி.யைத் தவிர என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
கடந்த 23.2.2025 அன்று மாலை சென்னை தாம்ப ரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து – திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய, திராவிடர் கழகம் நடத்துகின்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை குறுகிய காலத்தில் அறிவித்தாலும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று திரட்டிய இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வரவேற்புரையாற்றிய தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் அன்பிற்குரிய செயல்வீரர் ப.முத்தையன் அவர்களே,
இவ்வார்ப்பாட்டத்தினை தொடங்கி வைத்த கழகப் பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே,
இங்கே சிறப்பாக உரையாற்றிய கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே,
போராட்டமா? என்றைக்கும்
தயார், தயார்!
அனைத்துக் கட்சி, இயக்கங்கள், தோழமைக் கட்சி களின் சார்பாக கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றிய அருமைத் தோழர்களே, இங்கே குழுமியிருக்கக்கூடிய தோழர்களே, போராட்ட உணர்வுகளுக்கெல்லாம் என்றைக்கும் தயார், தயார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சியோடு இருக்கக்கூடிய சான்றோர்ப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது ஒரு பெரிய பிரச்சாரக் கூட்டமாகவும் அமைந்திருக்கிறது.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்தத் தாம்பரத்தில் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கின்றது.
டில்லியில் உத்தரவு போட்டால்,
அதை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
இங்கே அருமையான கருத்துகளைத் தோழர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த கருத்துகளையெல்லாம் ஒன்றிய அரசினர் பொருட்படுத்துவதே இல்லை. சிந்திக்கக் கூடிய திறன் இருந்தால், நாட்டு மக்களுடைய எதிர்காலத்தை நினைத்திருந்தால், இப்படியெல்லாம் ஒன்றிய அரசு செய்கிறதே என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பா.ஜ.க. வினர் சிந்தித்திருப்பார்கள். ஆனால், அவர்க ளுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. டில்லியில் உத்தரவு போட்டால், அதை நாம் கடைப்பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, டில்லியினுடைய பார்வை, தங்கள்மீது படவேண்டுமானால், நல்ல அடி மைகள் என்று காட்டிக் கொள்ளவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிலேதான், இங்கே அருள்மொழி அவர்கள் சொன்னதைப்போல, பா.ஜ.க.வினர் இருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை என்பது டில்லி ஒன்றிய அரசுக்குக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
தமிழ்நாட்டைப்பற்றி அலட்சியமாகப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஹிந்தியைத் திணித்து தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிவிடுவோம் என்று சில கூலிகளையும், மற்றவர்களையும் அனுப்புகிறார்கள்.அதற்கு ஒருவிதமான ஆதரவும் கிடையாது.
ஹிந்தித் திணிப்புப் பிரச்சினையில் யாராவது காவிக் கட்சியை ஆதரித்திருக்கிறார்களா?
ஒரே ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம்; எதிர்க்கட்சி, அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க. மற்றும் சில அமைப்புகளும் இருக்கின்றன.
இதில், அந்த அணியில் இருக்கக்கூடிய கட்சிகள் உள்பட, இந்தப் பிரச்சினையில், ஹிந்தித் திணிப்புப் பிரச்சினையில் யாராவது பி.ஜே.பி. என்று சொல்லக்கூடிய காவிக் கட்சியை ஆதரித்திருக்கிறார்களா? என்று தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
‘‘ஹிந்தியை நாங்கள் வரவேற்கிறோம்’’ என்று சொல்லக்கூடிய துணிச்சல் உண்டா?
உங்களோடு தேர்தலில் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியிலிருந்து இன்னும் விலகாமல் – ஒத்தையா, இரட்டையா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதவைத் திறக்கலாமா? அந்தக் கதவைத் திறக்கலாமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் உள்பட, ‘‘ஹிந்தியை நாங்கள் வரவேற்கிறோம்” என்று சொல்லக்கூடிய துணிச்சல் உண்டா? என்றால், கிடையாது.
‘ஹிந்திக்கு இங்கே இடமில்லை’ என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்!
அந்தக் கட்சியை சேர்ந்த சில பேர் சொல்கிறார்கள்; அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; ‘புண்ணாக்குகள்’ அவர்கள். என்னடா, இவர் புண்ணாக்கு என்று கடுமையாக சொல்கிறாரே என்று யாரும் நினைக்கவேண்டாம். ‘புண்’ நாக்கு – அவர்கள் பேசினால், நல்ல வார்த்தைகளையே பேசமாட்டார்கள். அந்த ‘புண்’ நாக்குகளைத் தவிர, ‘நன்’ நாக்குகள் அனைவரும் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘ஹிந்திக்கு இங்கே இடமில்லை’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, ஏதோ ஒன்றியத்தில் ஆட்சியில் நாங்கள் இருக்கின்றோம் என்று சொல்லுகிறீர்களே, நீங்கள் என்ன பெரும்பான்மை பெற்றா ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கின்றீர்கள்? இல்லையே!
உங்கள் பதவி நாற்காலி ஆடாமல் இருப்பதற்காக நிதியைப் பயன்படுத்துகிறீர்கள்.
இதுவரையில், மக்களுடைய வரிப் பணத்தைக் மாநிலங்களுக்குத் தர வேண்டியதைக் கொடுப்பதற்காக -நியாயமான காரணங்கள், நிதி ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன.
தங்களுடைய ஆட்சி நாற்காலிக்கு யார் முட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் நிதி!
ஆனால், இப்போது மோடி தலைமையில் நடை பெறுகின்ற ஒன்றிய ஆட்சியில், யாருக்கு அதிகமான நிதியை ஒதுக்குகிறார்கள் என்றால், தங்களுடைய ஆட்சி நாற்காலிக்கு யார் முட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான்.
பீகாருக்கும், ஆந்திராவுக்கும் அதிக நிதியை ஒதுக்குகிறார்கள். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நிதியை அள்ளிக் கொடுங்கள்; ஆனால், அதேநேரத்தில் தமிழ்நாட்டிற்குக் கிள்ளியும் கொடுக்கமாட்டோம் என்று சொல்வதற்கு உங்களுக்குச் சட்டப்படி உரிமை உண்டா? என்பதுதான் எங்களுடைய கேள்வி.
யாருடைய பணம்?
மக்களுடைய வரிப் பணம். அந்த மக்களுடைய வரிப் பணத்தை நீங்களாகவே பெற்று விட்டீர்களா?
எல்லா மாநிலங்களிலிருந்தும் வரக்கூடிய வரியைத்தானே நீங்கள் பெறுகிறீர்கள்?
தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டிய ரூ.2,152 கோடியைத் தராமல், ஏதோ சக்கரவர்த்திகள் ஒன்றியத்தில் அமர்ந்திருப்பதுபோன்றும், மாநில அரசுகளை கப்பம் கட்டுகின்ற சிற்றரசுகள் போன்றும் நினைக்கிறீர்களா?
இதோ இந்திய அரசமைப்புச் சட்டம். இதன்மீதுதான் நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
எதேச்சதிகார ஆட்சி என்று நீங்கள் பிரகடனப்படுத்தவில்லை – நடைமுறையில் அப்படித்தான் செயல்படுகிறீர்கள்!
உங்கள் ஆட்சியை எதேச்சதிகார ஆட்சி என்று நீங்கள் பிரகடனப்படுத்தவில்லை. ஆனால், நடைமுறையில் அதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கின்றீர்கள்.
இந்த அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் நீங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் முதலில் இருப்பது என்ன?
“Sovereign Socialist Secular Democratic Republic”
அய்ந்து அம்சங்கள்.
இறையாண்மை உள்ள, சமதர்மம் மிக்க, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்றெல்லாம் சொல்கிறீர்களே, அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமானதாகும்.
இது வெறும் மொழிப் பிரச்சினை மட்டுமல்ல நண்பர்களே, இது மிக முக்கியமான மாநில உரிமை களைப் பறிக்கும் முயற்சி!
அதுமட்டுமல்ல, மக்களையெல்லாம் பேதப்படுத்து கிறது.
திணிப்பு என்று சொன்னால்,
எதையும் நாம் எதிர்த்துத்தான் தீரவேண்டும்!
எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்த மொழியின்மீதும் வெறுப்பு கிடையாது. ஆனால், திணிப்பு என்று சொன்னால், எதையும் நாம் எதிர்த்துத்தான் தீரவேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் மிக எளிமையாக ஓர் உதாரணம் சொல்வார்.
‘‘ஒருவர் திருமணம் செய்த பிறகு, மனைவியை நாள்தோறும் அடித்து, உதைத்துவிட்டு, என்னிடம் ஆசையாக இரு; என்னிடம் ஆசையாக இரு என்று சொன்னால், மனைவிக்கு ஆசை வருமா?’’ என்பார்.
அதுபோல, நீ உன்னுடைய அதிகாரத்தைக் காட்டி, எதையாவது திணித்தால், தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள்.
தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக் கொடுக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால், உங்களைப் புறக்கணிக்கக்கூடிய, எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஆற்றல் தமிழ்நாட்டிற்கு உண்டு.
எல்லாக் கட்சிகளும் ஓரணியாக இருக்கிறார்கள். உன்னுடைய பி.ஜே.பி.யைத் தவிர. அதிலும் பி.ஜே.பி.யிலும் பல அணிகள் உண்டு. நீங்கள் எந்த அணி யென்றே உங்களுக்குத் தெரியாது.
ஆகவேதான், இந்த சுவரெழுத்தைப் படிக்கத் தவ றக்கூடாது. இன்னொன்றை சொல்கிறேன் நண்பர்களே, அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒன்றிய கல்வி அமைச்சர் உள்பட மற்றவர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
எதற்காக ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் என்று இங்கே உரையாற்றிய அத்துணை பேரும் தெளிவாக விளக்கினார்கள்.
சமஸ்கிருத கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
தமிழ்நாட்டில் ஏன் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்? ஏன் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் வடமொழிக் கலாச்சாரத்தை, சமஸ்கிருத கலாச்சாரத்தைப் புகுத்த வேண்டும் என்பதற்காக, முதல் அடியாக நுழைவு வாயிலாக ஹிந்தியை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.
1937 ஆம் ஆண்டிலேயே ஹிந்தியை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்!
இதனைக் கண்டறிந்தவர் தந்தை பெரியார்.
எப்பொழுது?
நம்மில் பலர் பிறக்காத காலத்தில், பலர் குழந்தைகளாக இருந்த காலகட்டத்தில். 1937 இல் ‘‘ஹிந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா? நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!’’ என்று குரல் கொடுத்த காலகட்டம் அது.
போராட்ட வீராங்கனைகளாக தியாகம் செய்த தாய்மார்களைப்பற்றிச் சொன்னார்கள்; ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தவர்களைப்பற்றிச் சொன்னார்கள்; இறந்தவர்களுடைய உணர்வுகள் என்ன? என்பதைப்பற்றி தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
வெறும் ஹிந்தித் திணிப்பை மட்டும் நாம் எதிர்க்கவில்லை. ஹிந்தியை ஒரு முலாம் பூசி வைத்தி ருக்கிறார்கள். அந்த முலாமை கொஞ்சம் விலக்கினால், சமஸ்கிருதம்தான்.
வேதக் கலாச்சாரம் மட்டுமல்ல;
பேதக் கலாச்சாரம் அது!
சமஸ்கிருதத்தை நாம் ஏன் எதற்காக எதிர்க்கின்றோம் என்று சொன்னால், மொழியைப் பேதப்படுத்துவது – நீங்கள் அதில் வேதம் இருக்கிறது என்று சொல்லலாம்; ஆனால், சமஸ்கிருத கலாச்சாரம் என்று சொல்லும்பொழுது, அது வெறும் ஆரியக் கலாச்சாரம் என்பதைவிட, இன்னும் ஆழமாக, பச்சையாக மக்களுக்கு விளக்கிச் சொல்லவேண்டுமானால், அதனுடைய ஆபத்தைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், வேதக் கலாச்சாரம் மட்டுமல்ல நண்பர்களே, அது அடிப்படையில் பேதக் கலாச்சாரம்.
அரசமைப்புச் சட்டத்திற்குள்ளே நுழைத்து உள்ளே வைத்துவிட்டார்கள்.
‘‘ஹிந்தி அப்பிசியல் லாங்வேஜ்’’ என்று சொல்லு கின்ற நேரத்தில், அங்கேயே ஒரு பேதக் கோட்டைப் போட்டிருக்கிறார்கள். (தொடரும்)