சென்னை,பிப்.26- மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (25.2.2025) ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும், பேரணி நடத்தியும் மாணவர் அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்தன.
இதன் ஒருபகுதியாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் அமுதரசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய மாணவர் சங்கம், மதிமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம், சமூக நீதி மாணவர் இயக்கம், முற்போக்கு மாணவர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்று மும்மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது, ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
முன்னதாக சைதாப்பேட்டையில் பஜார் சாலை, ஜோன்ஸ் சாலை வழியாக பேரணியாக சென்ற மாணவ அமைப்பினர், துணை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடையாறு பிஎஸ்என்எல் அலுவலகம், திருவொற்றியூர் அஞ்சல் நிலையம், தண்டையார்பேட்டை அஞ்சல் நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் பல இடங்களில் மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Comment