வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகனைப்பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளாவுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில், ராம்கர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்று, நீராடுவதற்காக, தனது வயதான தாயை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, மனைவி, குழந்தைகளுடன் சென்ற மகனை, அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் – திட்டித் தீர்க்கிறார்கள்.
மூன்று நாள்களாக வீட்டில் இருந்த சோற்றையும், தண்ணீரையும் குடித்து உயிர் வாழ்ந்து, உணவு தீர்ந்ததும், பசி தாங்க முடியாமல் கதறியிருக்கிறார்.
வீட்டின் கதவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடைத்து வீட்டுக்குள் சென்று அந்த மூதாட்டியை மீட்டனர். அப்போது, அவர் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக் கடித்துச் சாப்பிட முயன்றிருந்திருக்கிறார். அவருக்கு உடனடியாக அக்கம் பக்கத்தினர் உணவளித்துள்ளனர்.
அவரது மகள் அருகில் வாழ்ந்து வரும் நிலையில், தனது சகோதரர் தன்னிடம் தாயை விட்டுச் செல்லாமல், வீட்டுக்குள் பூட்டி விட்டுச் சென்றிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறையினர், அந்த மகனை எச்சரித்து அனுப்பினார்களாம். (எப்படி இருக்கிறது?)
பக்தி என்பது அடிப்படை மனிதாபிமானத்தையும் கூட கருத்தில் கொள்ளாமல் மனிதனை மரக் கட்டையாக்கி விடுகிறது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுப் போதுமானதாகும்.
வயதான தாய் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பகுத்தறிவு முனை மழுங்குவதும், மனிதாபிமானம் செத்துப் போவதும், பக்தி என்னும் போதை மூளையை செயல்பட விடாமல் தடுப்பதும் எத்தகைய அவலம்! அவலம்!!
தான் செய்த பாவங்கள் கும்பமேளாவுக்குச் சென்று முழுக்குப் போடுவதால் பஞ்சாய்ப் பறந்து போகும் என்று நினைத்து வயதான தாயைத் தவிக்கவிட்டு தனிமைப்படுத்தி, உணவுக்குக் கூட சரிவர ஏற்பாடு செய்யாமல் செல்வது என்பது – அவர்கள் நம்பும் பாவத்திலும் மகா பாவம் அல்லவா!
இந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள என்ன பரிகாரம் தேடப் போகிறார்களாம்? கடவுளுக்கும் பக்திக்கும் பயனுண்டு என்றால் கோயிலைச் சுற்றி எத்தனைப் பிச்சைக்காரர்கள் மிகப் பரிதாபமாகக் கையேந்திக் கெஞ்சுகிறார்கள். கோயிலைச் சுற்றியுள்ள இவர்களின் வறுமையைப் போக்க வக்கில்லாத அந்தக் கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்ட சிலைகளை சர்வசக்தி வாய்ந்த கடவுள் என்று நம்புவது எத்தகைய மூடத்தனம்!
வடலூர் வள்ளலார் இராமலிங்கரும் பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்தவர்தான்; ஆனால் மூடப் பக்தியாக இருக்கவில்லை. பிணிகளுள் மிகக் கொடுமையானது பசிப்பிணியே! அதனைப் போக்குவதுதான் மனிதனாகப் பிறந்த ஒருவரின் கடமை என்று கருதினார்.
அவர் அன்று ஏற்றி வைத்த நெருப்பு – அடுப்பு இன்றுவரை அணையவில்லை – அதற்கான ஏற்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தில் கடவுளுக்குச் சொத்து தேவைப்படுகிறது. ஆறு காலப் படையல் தேவைப்படுகிறது. டன் டன்னாக தங்கக் கட்டிகள் கடவுளுக்குச் சொந்தம் என்று வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுகிறது.
இவற்றால் கோயில் கர்ப்பக்கிரகத்தில் அடித்து வைக்கப்பட்டுள்ள ஓர் அஃறிணைப் பொருளான சாமி சிலைக்கு என்ன பயன்? காணிக்கையாகக் கொட்டிக் குவிக்கின்ற மனிதர்களுக்குத்தான் என்ன பயன்? மனிதன் தன்னிடம் உள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தட்டும்!