சென்னை,பிப்.26- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் தற்போதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகத்தில் ஹிந்தி பெயர் பலகை அழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் பெரியார் கலை கல்லூரி மாணவர்களும் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் நேற்று (25.2.2025) போராட்டம் நடத்தினர்.
ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் ஒன்றிய பாஜக அரசு திணிக்க முயற்சிக்கிறது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாள்தோறும் தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் பொள்ளாச்சி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், பாவூர் சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஹிந்தி மொழியிலான பெயர் பலகைகள் தார்பூசி அழிக்கப் பட்டன.
இது தொடர்பாக போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சென்னை ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் பிஎஸ்என் அலுவலகம் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வைக்கப் பட்டிருந்த பெயர் பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்டன.
தமிழ் வாழ்க! ‘ஹிந்தி மொழித் திணிப்பு ஒழிக!’ என்ற முழக்கங்களுடன் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதேபோல கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மும்மொழிக் கொள்கை மூலமான ஹிந்தி திணிப்பு, ஒன்றிய அரசின் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர்.
தேனி ஆண்டிபட்டியில் திமுகவினர் மும்மொழிக் கொள்கை மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தினர்.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுப்பதற்கும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.