சினம் – கோபம் பற்றிய 10 குறள்களில் வள்ளுவர்தம் அறிவு ஊற்று, மானிடத்தின் நனி நாகரிகப் பண்பை நினைவூட்டி, அதற்கு சினம் எப்படி கடும் எதிரியாகி நிற்கிறது என்பதை எடுத்துக் கூறும் அதே நேரத்தில்,
கோபத்தை எளியாரிடம் காட்டும் மனிதர்கள், தன்னைவிட வலியார் முன் காட்டுவதில்லை – பலிகடா – தன்னைவிட குறைந்த ஆட்சி, அதிகாரம் செலுத்துபவர்களை மட்டும் குறி வைப்பது முறையல்ல என்றும்,
வலிமை வாய்ந்தவன்மீது காட்டும் கோபத்தை அடக்கி வைக்கும் ஆற்றல்தான் மிகுந்த மதிப்புடையவர் ஆவார் என்கிறார்.
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. (குறள் 302)
இதன் பொருள்: தன்னால் யாதொன்றும் செய்ய முடியாத வலியார்மேல் சினம் கொள்வதனால் ஒருவனுக்குத் தீங்கைத்தான் உண்டாக்கும். செல்லுபடியாகக்கூடிய மெலியார் மேல் சினங் கொள்வது என்பதைக் காட்டிலும் தீங்கு பயப்பது வேறொன்றும் இல்லை. மன்னிப்பதும் மறப்பதும் ஒரே மனிதத்தின் தனிப் பெரும் மா குணம் அல்லவா?
அதுபற்றி வள்ளுவர் எவ்வளவு சிறப்பு மிகுந்த கருத்தாடல் செய்கிறார் என்பது அரிதினும் அரிதான அறிவாற்றலின் ஆழ்கடல் முத்துப்போல் உள்ளது.
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. (குறள் 310)
‘‘அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர், உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தவரைப் போன்றே கருதப்படுவார்.
சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்! என்பதே இதில் முக்கியமாக நாம் அறிய வேண்டிய கருத்து ஆகும்.
வள்ளுவர் குறளை ஆழ்ந்து படிக்கும் எவருக்கும் மானுடப் பற்று, மனிதநேயத்தை அவர்கள் மதிக்கின்ற பாங்கு மிகப் பெரிய உச்சமாகும்!
‘வாழும் மனிதர்கள்’ என்பது வள்ளுவரின் பார்வையில் பூமியில் பிறந்த அத்துணை பேர்களும் அல்லர்!
மாறாக, பண்புகளால் சிறந்தோரே ‘‘வாழும் மனிதர்கள்’’. இன்றேல் அவர் உயிர் உள்ள வரை நடமாடும் பிணங்கள்தான் என்பதை – எங்கெல்லாம் பண்பும், பான்மையும் விழுமியங்களும் வேர் விட்டு பலத்துடன் வளர்ந்தோங்கி வருகிறதோ அவர்களே பெரிதும் உண்மையில் வாழும் மனிதர்கள் என்பார்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள் 214)
ஒப்புரவை நன்கு அறிந்து, அதனைக் காப்பாற்றி, பிறர்க்கு உதவியாக இருந்து வாழ்க்கையை நடத்துகின்றவன். உள்ளபடியே உயிர்வாழ்கின்றவன் என்று கருதப்படுவான்; ஒப்புரவுப் பண்பு இல்லாதவன், அவன் உயிரோடு இருந்தாலுங்கூட இறந்துபோனவர்களில் ஒருவனாகவே வைத்து எண்ணப்படுவான்.
இதுபோல பல குறள்கள் மூலம் பற்பல இடங்களில் குறிப்பிடுகிறார்!
எனவே மனிதர்கள் நடமாடுவதால் அல்லது மூச்சு விடுவதால் மட்டுமே மனிதர்கள் அல்ல – சினத்தை துறந்தால் மட்டும் தான் மனிதர்களாக உண்மையாக கருதப்படுவர்.
அதிலும் சினத்தைத் துறந்தார்தான் உண்மையில் உயிர் வாழ்பவர்.
அந்த உரை கல்லில் உரைத்துப் பார்த்தால் ரிஷிபுங்கவர்கள் ஏன் புராணக் கடவுள்கள்கூட உயிர் வாழ்பவரின் பட்டியலில் வைத்து எண்ணப்பட முடியாதவர்களே; ஏனெனில் எப்போதும் ‘சாபம்’ கொடுத்தே பழக்கப்பட்டவர்கள்,
மற்றொரு குறளில் வள்ளுவர் இதனையும் சுட்டிக் காட்டுகிறார்.
‘‘இந்திரனே சாலுங்கரி’ என்று குறிப்பிடும் பகுதி, அவரது காலத்திலேயே இதுபோன்ற அருவருப்பான புராணக் கதைகள் தமிழ்நாட்டில் ஊடுருவி, பண்பாட்டுச் சிதைவுக்கு வித்திட்டு, நீர் ஊற்றி, உரம் போட்டு வளர்ந்துள்ளன என்பது புரிகிறது அல்லவா?