மனித குலத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் பல நோய்களில் மஞ்சள் காமாலை ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்றால் மிகையாகாது. மஞ்சள் காமாலை நோய் தாக்கும்பொழுது ஏற்படும் உள்மாற்றங்களை நாம் அறியாவிட்டாலும், வெளி மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். நோயின் தாக்கம் மிகும்பொழுது சிறுநீர் மஞ்சளாகப் போகும். கண்களின் விழி வெண் படலம் (Sclero) மஞ்சள் நிறமாக மாறிவிடும். நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது, தோலும், நகக்கண்களும்கூட மஞ்சள் நிறமாக மாறும். நோயின் அறிகுறிகள் நன்றாக மஞ்சள் நிறத்தில் வெளிப்படுவதால் பாமரர்கள் கூட மஞ்சள் காமாலை தாக்குதலை எளிதில் அறிவர்.
நம் உடலில் சாதாரணமாக – “சீரம்” எனப்படும் ‘உதிரப் புரத நீரில்’, பிலுருபின் (Bilurubin) எனும் நிறமியின் அளவு 100 மில்லி லிட்டருக்கு, 0.2 முதல் 0.8 மில்லி கிராம் அளவில் இருக்கும். கல்லீரலின் பித்த நீரில் உள்ள இந்த நிறமி, உதிரப் புரத நீரில் கலந்து உடல் முழுவதும் ஓடும். இதன் அளவு அதிகமானால் (100 மில்லி லிட்டருக்கு 2 மி.கி.) என்ற நிலையில் இருந்தாலும், அதற்கு மேல் சென்றாலும், உடலின் தோல், விழி வெண்படலம் (Sclera) சவ்வுத் தோல் (Mucous Membrane) ஆகியவை மஞ்சள் நிறமடையும். இதையே நாம் ‘மஞ்சள் காமாலை’ (Jaundice) என்று அழைக்கிறோம்.
மஞ்சள் காமாலை அது ஏற்படும் தன்மைக்கு ஏற்ப மூன்று வகைப்படும். முதல் வகை, உதிரப் புரத நீரிலும், இரண்டாம் வகை, கல்லீரலிலும், மூன்றாம் வகை பித்த நீர்க் குழாய்களிலும் ஏற்படும். நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் உற்பத்தியாகி 120 நாட்களில் சிதைவடையும் சிவப்பணுக்கள் உடைவதால், அதில் உள்ள இரும்புச் சத்தும், புரதச் சத்தும் வெளிப்படும்.
இவை மீண்டும் உறிஞ்சப்பட்டு, கல்லீரலில் சேமிக்கப்படும். இப்படி சிவப்பணுக்கள் உடையும்பொழுது உண்டாகும் மற்றொரு பொருள் தான் ‘பிலுருபின்’ எனும் மஞ்சள் வண்ண நிறமி. இது நச்சுத்தன்மை உடையது. பிலுருபின், பித்த நீரில் கலந்து, சிறுகுடலில் கசிந்து, மலம் மூலம் வெளியேற்றப்படும். மலம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு, இந்த நிறமியே காரணமாகும். உதிரப் புரத நீரில் (Plasma) சிறு சிறு துகள்களாக வெளிப்படும். பிலுருபின், கல்லீரலில் ஒருங்கிணைந்து (Conjugation), பித்த நீரில் கலந்து, சிறு குடலை அடையும்.
மஞ்சள் காமாலை நோய் அது தோன்றும் தன்மைக்கு ஏற்ப மூன்று வகையாகக் காணலாம். அவை கீழ்க்கண்டவாறு:
1. சிவப்பணுச் சிதைவு மஞ்சள் காமாலை (Haemolytic Jaundice)
2. கல்லீரல் செல் மஞ்சள் காமாலை (Hepatocellular Jaundice)
3. பித்தநீர்க் குழாய் அடைப்பு மஞ்சள் காமாலை (Obstructive Jaundice)
நாம் முன்பே கண்டபடி சிவப்பணுக்கள் சிதைவடைவதால், பிலுருபின் வெளிப்படுகிறது. சிவப்பணுச் சிதைவு கட்டுக்குள் இருக்கும் வரை எந்தத் தொல்லையும் இல்லை. சில காரணங்களால் இச்சிதைவு அளவிற்கு அதிகமாகும். அந்த நிலையில் ஏராளமான பிலுருபின் வெளிப்படும். சாதாரணமாக கல்லீரல், சரியளவு (Normal) பிலுருபினைப் போல், ஆறு மடங்கு பிலுருபினை வெளியேற்றும்.
ஆனால் அதையும் விட, பிலுருபின் அளவு கூடும்பொழுது, இந்நச்சு நிறமி மீண்டும் இரத்தத்தில் கலந்து, உடல் முழுதும் பரவும். இந்நிறமி நச்சுத்தன்மையும், மஞ்சள் நிறத்திலும் இருப்பதால், உடலின் தோல், கண், நகக்கண்கள், சவ்வுத்தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தில் தெரியும். இதையே சிவப்பணுச் சிதைவு மஞ்சள் காமாலை (Haemolytic Jaundice) என்கிறோம். சுருங்கச் சொன்னால் இவ்வகை அதிக அளவு பிலுருபின் நிறமி உற்பத்தி ஆவதால் ஏற்படும் மஞ்சள் காமாலை ஆகும்.
அதிக அளவு சிவப்பணுச் சிதைவு ஏன் ஏற்படுகிறது என்பதைக் காண்போம்.
1. பிறவிக் குறைபாடோடு உற்பத்தியாகும் இரத்தச் சிவப்பணுக்கள் எளிதில் சிதைந்து விடும். அரிவாள் சிவப்பணுக்களால் (Sickle Cell) ஏற்படும் இரத்தச் சோகை ஓர் எடுத்துக்காட்டு. குறைபாடு உடைய சிவப்பணுக்களின், சுவர்கள் உறுதியற்றவையாக இருப்பதால், எளிதில் உடையும் தன்மை உடையவையாக இருக்கும். இதனால் அதிக அளவு சிதைவடையும். அதிக அளவு பிலுருபின் நிறமி உற்பத்தியாகும்.
2. நோய்த் தொற்று: வைரஸ்கள், நுண்ணுயிர்கள் தொற்று ஏற்பட்டாலும் சிவப்பணுக்கள் அதிகம் சிதைவடையும்.
3. தற்கொலை முயற்சியில் உட்கொள்ளப்படும் நச்சுப் பொருள்கள், சிவப்பணுச் சிதைவை அதிகப்படுத்தும். அதனால் ஏராளமான பிலுருபின் நிறமி உற்பத்தியாகும்.
4. தவறான இரத்தம், நோயாளிக்குக் கொடுக்கப்படும் பொழுது, சிவப்பணுக்கள் சிதைவடையும்.
5. இரத்த வகையில் Rh என்ற ஒரு வகை உண்டு. தாயும், தந்தையும் வெவ்வேறு Rh வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் குழந்தையின் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் சிதைவடையும். அதனால் குழந்தை பிறக்கும்பொழுதே மஞ்சள் காமாலையோடு பிறக்கும்.
நோயின் அறிகுறிகள்:
மஞ்சள் நிறமிகள் உடலில் பரவுவதால், மஞ்சள் நிறமாக உடல் தோன்றும். மண்ணீரல் வீங்கி, வலியுடன் இருக்கும். சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போகும். மலம், பழுப்பு நிறத்தில் வெளியேறும். அரிப்பு தோல் பகுதிகளில் பரவலாக ஏற்படும். ஆய்வகச் சோதனைகளில், பிலுருபின் 4 மி.கி / 100 மில்லி அளவில் இருக்கும். சரியாக முதிர்ச்சியடையாத சிவப்பணுக்கள், குறைபாடுடைய சிவப்பணுக்கள் இருக்கும். சிறுநீரில் பித்த நீர் உப்புகள், பித்த நீர் நிறமிகள் இருக்கும்.
மருத்துவம்:
இந்நோய் இரத்தச் சிவப்பணுச் சிதைவால் ஏற்படுவதால், முதலில் சிவப்பணுக்கள் சிதைவடைவதைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டாய உடல் ஓய்வு, மாவுச்சத்து (Carbohydrates) அதிகம் உள்ள உணவுகள் (குளுகோஸ், பழச்சாறுகள்) உண்ணுதல் மிகவும் அவசியமும், அவசரமும் கூடியதாகும். கொழுப்பு, எண்ணெய் ஆகியவை முழுமையாக உண்ணக் கூடாது. எண்ணெய்ப் பொருள்கள் கல்லீரலில்தான் சிதைமாற்றம் (Catabolism) அடைவதால், கல்லீரல் ஏற்கெனவே பாதிப்படைந்துள்ள நிலையில், எண்ணெய்ப் பொருள்கள் ஆபத்தை அதிகமாக்கும்.
தொற்று நோய்களினால் காமாலை உண்டாகி இருப்பின், அந்நோய்க் கிருமிகளை அழிக்க வல்ல மருந்துகளைக் கொடுக்க வேண்டும். இரத்த சிவப்பணுக்கள் அதிக அளவு சிதைவடைவதால், இரத்தச் சோகை ஏற்படும். அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில் இரத்தம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும்.
இரத்தம் செலுத்தும்பொழுது சரியான பொருத்தமான இரத்தமா என்று பரிசோதித்துச் செலுத்தவேண்டும். Rh வகைகளைப் பரிசோதித்து, கருவுற்ற தாய்க்கு மருத்தும் செய்வதால் “காமாலைக் குழந்தை” (Erythroblastosis foeatalis) பிறப்பைத் தடுக்க முடியும். நச்சுப் பொருள்கள் உட்கொண்டவர்களுக்கு உடனடியாக நச்சு முறிவு மருந்துகளைக் கொடுத்து அவசர மருத்துவப் பிரிவில் வைத்துக் கண்காணிக்க வேண்டும்.
கல்லீரல் செல் மஞ்சள் காமாலை:
இவ்வகைக் காமாலை நோய் கல்லீரல் செல்கள் பாதிப்படைவதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் நோய்த் தொற்று, மருந்துகள், நச்சுப் பொருட்கள் கல்லீரல் செல்களைப் பாதிக்கச் செய்கின்றன. கல்லீரல் பாதிப்படைவதால் உதிரப் புரத நீரில் உற்பத்தியாகும் பிலுருபின் நிறமியின் ஒருங்கிணைப்புப் பணி பாதிக்கப்படும். அதனால் பிலுருபின் வெளியேறாமல் இரத்தத்தில் மீண்டும் சேர்ந்து, மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.
அறிகுறிகள்:
மஞ்சள் நிறம், பசியின்மை, கல்லீரல் பகுதி வீங்கி வலி எடுத்தல், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும். ஆய்வகப் பரிசோதனையில் சிறுநீரில் பித்த நீர் நிறமிகள், பித்த நீர் உப்புகள் அதிக அளவு தென்படும். உதிரப் புரத நீரில், பிலுருபின் நிறமியின் அளவு அதிகரிக்கும்.
மருத்துவம்:
படுக்கையில் ஓய்வு, மாவுச் சத்து மற்றும் கொழுப்பு உணவுகளைத் முழுமையாகத் தவிர்த்தல், எண்ணெய்ப் பொருள்களை ஒதுக்குதல், நோய்த் தொற்றுக்கு எதிர் மருந்துகளைப் பயன்படுத்துதல், நச்சுப் பொருள்களால் கல்லீரல் பாதிப்படைந்திருப்பின், அதற்கு நச்சு முறிப்பான்களைக் (Antidote) கொடுத்தல் ஆகியவற்றை செய்தால், கல்லீரல் செல்கள் புதுப்பிக்கப்பட்டு சீரடையும். பிலுருபின் நிறமியும் வெளியேற்றப்படும். மஞ்சள் காமாலையும் குணமடையும்.
3. பித்தநீர்க் குழாய் அடைப்பு மஞ்சள் காமாலை: பித்த நீர், பித்தப்பையில் சேகரிக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப சிறுகுடலில் செலுத்தப்படும் எனப் பார்த்தோம். பித்தநீர், சிறுகுடலை அடையும் வழியிலோ அல்லது பித்த நீர்ப்பையிலோ அடைப்பு ஏற்பட்டால் பிலுருபின் வெளியேற்றம் தடைபடும்.
அதனால் மஞ்சள் காமாலை ஏற்படும். பித்த நீர்ப்பையில் கல் ஏற்படுதல், பித்தநீர்க் குழாயில் கல் அடைத்தல், புற்றுநோய், குடல் புண்கள், பித்தக் குழாய் திறக்குமிடத்தில் இருந்து ஆறிவிடுவதால் அந்தப் பகுதி சுருங்கி, குழாய் மூலம் பித்த நீர் வெளியேறாமை, கல்லீரலில் ஏற்படும் நோய் ஆகியவை பித்த நீர் வெளியேற்றத்தைத் தடுக்கும். வெளியேறாத பித்த நீரில் தேங்கியுள்ள ‘பிலுருபின்’ மீண்டும் இரத்தத்தில் கலநது மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும்.
நோயின் அறிகுறிகள்: தோல், கண்ணின் விழி வெண்படலம், சவ்வுத் தோல் மஞ்சள் நிறமாக மாறும். கல்லீரல் பெரிதாகி வலி உண்டாகும். வயிறு வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி, சுவை மாறுபாடு, அரிப்பு போன்றவை ஏற்படும். இதயத் துடிப்பு குறைவுபடும். பித்த நீர் சிறு குடலுக்குச் செல்லாததால், அதோடு சேர்ந்து செல்லும் வைட்டமின் Kயும் குடலுக்குச் செல்வது தடைபடும்.
வைட்டமின் K இரத்தம் உறைவதற்கு முக்கியமான காரணியாகும். அதனால் அடிபட்டால் இரத்தம் உறைவது தாமதமாகும். சிறுநீர் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே படங்கள், சி.டி. ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் பித்த நீர்ப்பையில் கல் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.
மருத்துவம்: பித்த நீர்க் குழாய் அடைப்பைச் சரி செய்வதே இம்மருத்துவத்தின் முதற்பணி. மிகச்சிறிய கற்களை மருந்துகளால் சரி செய்ய முடியும். என்றாலும், பெரிய கற்களை அறுவை மருத்துவத்தால்தான் எடுக்க முடியும். லேப்ராஸ்கோபி மூலம் அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது.
நோயாளி 48 மணி நேரம்தான் ஓய்வு எடுக்க வேண்டும். கற்களைப் பொடியாக்கி, கரைத்து வெளியேற்றும் மருத்துவமும் இப்பொழுது செய்யப்படுகிறது. கற்கள் இல்லாமல், வேறு காரணங்களால் அடைப்பு எற்பட்டிருப்பின் அதையும் கண்டுபிடித்து, அதற்குத் தக்கவாறு மருத்துவம் செய்தல் அவசியம்.