நம் காலத்து வாழும் அறிஞர்களில், தலைசிறந்த பண்பாளர்களில் முதல் வரிசையில் அமர்த்தப்படும் சீரிய சிந்தனையாளர்களில் ஒருவர் – மேனாள் மேற்கு வங்க ஆளுநராக இருந்து ஓய்வு பெற்று, அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சாரங்களில் அவ்வப்போது அனைவரும் சிந்திக்கக் கூடிய கருத்தாக்கங்களை எடுத்து வைப்பவருமான பெருமதிப்பிற்குரிய திருவாளர் கோபாலகிருஷ்ணகாந்தி (அய்.ஏ.எஸ்.) அவர்கள்.
மேற்கு வங்க ஆளுநர், குடியரசுத் தலைவரின் (K.R. நாராயணன்) முதன்மைச் செயலாளர், இலங்கை சென்ற இந்தியாவின் ைஹ கமிஷனர் இப்படி பல பதவிகளால் அலங்கரித்தவர் என்றாலும், அவரது அடக்கமும், அடுத்தவர்களிடம் அவர் காட்டும் அன்பும், மதிப்பும் மற்றவர்கள் கற்று பின்பற்ற வேண்டிய விழுமியங்கள் (Values) ஆகும்!
தமிழ், ஆங்கில இலக்கியங்களில் நன்கு ஆய்வு செய்து பல கட்டுரைகள், கருத்துரைகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்து வைத்து வருவது பாராட்டத்தக்கது.
ஆசியா, ஆஸ்திரேலியா நரம்பியல் டாக்டர்களின் நிபுணர்களின் மாநாட்டில் அவர் ‘சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி’, என்று திருக்குறளில் கூறியுள்ள கருத்துகளை முன் வைத்து டாக்டர் பி. இராமமூர்த்தி நினைவு பொழிவினை ஆற்றியுள்ளார்.
அதில் அற்புதமானதொரு, கருத்தை திருக்குறளி லிருந்து மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.
கோபத்தின் கொடுமை வழி எப்படி மனிதர்களை எங்கே அழைத்துச் சென்று மாய்த்து விடக் கூடும் என்பதை நன்கு விளக்கி உரையாற்றியுள்ளார்.
அவர் திருக்குறளை சிறப்பாக ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டு இலக் கியச் சேவை செய்து அக மகிழ்ந்தவர் அல்லவா?
மற்றொரு புதுமையான கருத்தினையும் அழுத்தந்திருத்தமாக விளக்கியுள்ளார் அந்தப் பொழிவில்!
‘கோபம் என்பது மிருகத்தனம் மிக்க முட்டாளின் எஜமானன்’ என்றாலும், அது சிற்சில நேரங்களில் நல்ல நண்பனாகவும்கூட மனிதர்களுக்கு நிச்சயம் பயன்படக் கூடிய அநேக சந்தர்ப்பங்கள் ‘வாழ்வில் உண்டு’ என்று விளக்கியிருக்கிறார்.
கோபத்தில்கூட ‘நல்ல கோபம்’, ‘கெட்ட கோபம்’ என்று சில வகை உண்டு என்று சொல்கிறார்.
ஆம். கோபம் பல வகை!
அதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!!
காதலன் – காதலி – இல்வாழ்வில் இைணயர்கள் – இவர்களது அன்றாட வாழ்வில் சிற்சில நேரங்களில் ஏற்பட்டு மறைந்தோ, கரைந்தோ விடும் கோபம் வெறும் பொய்க் கோபமே!
கூடலுக்கு முன் ஊடல் என்பது நடைமுறை அனுபவத்தால் உலகறிந்த உண்மைதானே!
எப்படி கொலஸ்ட்ரால் – இதயக் கொழுப்பு பற்றிய ‘நல்ல கொலஸ்ட்ரால்’, ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ என்று தரம் பிரித்துக் காட்டுகின்றனரோ டாக்டர்கள் – அதுபோல கோபத்தை பிரித்துக் காட்டுங்கள்.
அதுபோலவே கோபங்களும் இருவகை அல்லது பலவகை.
அது முட்டாளின் எஜமானாக – அந்த மிருகத்தனமான மனிதனைக் கட்டுப்படுத்துகிற – அதுவே நல்ல நண்பனாகவும் இருந்து மனிதர்களை சரியான வழிக்கும் கொண்டு செலுத்திட அவர்களை நல்வழிப்படுத்திடவும் கூடும் என்கிறார்!
அடிமைகளுக்கு நியாயமாக தோன்றும் கோபம்!
அக்கிரமம், அநீதி, எதேச்சதிகாரம் இவை முன் பணியாது கோபத் தீ கிளர்ந்தெழுந்ததால் மனிதகுலம் சுதந்திரத்தை நிலை நாட்ட முடிகிறது!
நீதிபதிகளின் – அநீதிகளைக் கண்டு குமுறி எழும் நியாயமான கோபம் தீர்ப்புகளாக மாறி, வளைந்த நீதியை நிமிர்த்திடவும் நல்வாய்ப்பினை நல்வாழ்க்கையை நீதி மறுக்கப்பட்டவர்களுக்கும் கிடைத்திட வாய்ப்பாக மாறும்.
கோபம் வர வேண்டிய நேரத்தில் – கட்டுப்படுத்தி நியாயமான கோபம் வந்தால்தான் அவன் உண்மை மனிதன்; இன்றேல் அவன் போலி, ஒப்பனை மனிதனே – புரிந்து கொள்ளவும் தவறக் கூடாது!
(வளரும்)