‘‘படத்தை அனுப் புங்கள் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேடும் சர்வீஸ் செய்கிறோம் கட்டணம் ரூ1100.’’
மக்களின் மூடத் தனத்தை முதலீடாகக் கொண்டு இப்படியும் ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது
உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 56 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தரப் பிரதேச அரசு அள்ளி விடுகிறது. (புள்ளி விவரத்தைப் பற்றி ஒரு பழமொழியே உள்ளதே)
இந்நிலையில், கும்பமேளாவில் டிஜிட்டல் நீராட ஒரு கும்பல் ரூ.1100 கட்டணம் வசூலித்து பகற்கொள்ளை நடத்தி வருகிறது.
கும்பமேளாவில் நீராட நேரில் வர முடியாதவர்கள் தங்களது ஒளிப்படங்களை ‘வாட்சப்பில்’ அனுப்பினால் அவ் ஒளிப் படங்களை திரிவேணி சங்கமம் நீரில் மூழ்கடித்து எடுப்போம் என்று ஒருவர் பேசும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
கும்பமேளாவால் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ. மூன்று லட்சம் கோடி லாபம் என்று ஒரு பக்கத்தில் அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் மகிழ்ச்சி மேளம் கொட்டுகிறார்.
இன்னொரு பக்கத்தில் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து கும்பமேளாவிற்கு வர இயலாதவர்களின் ஒளிப்படங்களை (போட்டோவை) வரவழைத்து திருவேணி சங்க மத்தில் அந்தப் போட்டோவை மூழ்கடிப்பார்களாம்!
அவ்வளவுதான், பஞ்சமா பாதகங்களும் பஞ்சாகப் பறந்து ஓடி விடுமாம். இதற்கான கட்டணம் ரூபாய் ஆயிரத்து நூறாம்.
கடவுள், மதம், பக்தி, சமாச்சாரங்கள் என்றால், இவை எந்த யோக்கியதையில் இருக்கின்றன என்பதற்கு இது ஒன்று போதாதா?
வங்கியில் புகுந்து ஒரு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பவனின் பாவம் போக்க இந்த 1100 ரூபாய் ஒரு துச்சம்தானே!
இவ்வளவு சுருக்கமாகப் பாவங்களுக்குப் பரிகாரம் இருக்கும்போது பாவம் செய்ய யார்தான் பயப் படுவார்கள்?
பக்திக்கும் ஒழுக்கத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் சொன்னதுண்டே!
பயமும், பேராசையும் தானே கடவுள் பக்தி? முதலில்லா வியாபாரம்தானே இந்த வியாபாரம்!
ஒரு பக்கம் விளம்பரம் செய்தால் போதும், அதை நம்பி கடவுள், மத நம்பிக்கையால் – உழைத்து உழைத்துச் சம்பாதித்ததைப் பார்ப்பனத் தொப்பையை நிரப்பிடக் கொட்டிக் கொடுக்கிறார்களே!
கடவுள்தான் ஆகட்டும். (அப்படியொருவர் இருந்ததாக விவாதத்திற்காக வைத்துக் கொள்வோம்!) தனக்குக் காணிக்கை செலுத்தினாலோ, படையல் போட்டலோ, விரதம் இருந்தாலோ, எச்சில் இலையில் புரண்டாலோ பாவ மன்னிப்பும், புண்ணியமும் கிடைக்கும் என்றால் கடவுள் என்பது அவ்வளவு பலகீனமான ஒன்றா – தற்பெருமைக்காரரா, சுயநலவாதியா, இலஞ்சப் பேர்வழியா என்ற கேள்விகள் எழத்தானே செய்யும்!
‘மூடப்பழக்கம் முடிவற்ற கண்ணுறக்கம் ஓடுவதென்றோ? நானறியேன்’’
– புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்