தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சிப் போர்க்கோலம்!
சென்னை, பிப்.24 தமிழ்நாட்டில், தமிழ் – ஆங்கி லம் என்ற இரு மொழிக் கொள்கை என்பது சட்டப்படியானதாகும். அதற்கு மாறாக தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று கூறும் ஒன்றிய அரசை எதிர்த்து நேற்று (23.2.2025) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகம் சார்பில், மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
1938 இல் தந்தை பெரியார் தொடங்கிய ஹிந்தி எதிர்ப்பு என்ற வலுவான போராட்டம், கட்சிகளைக் கடந்து, மொழி உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு காவல் அரணாகும். தமிழ் உணர்வாளர்களும் களம் கண்டனர்.
இப்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘தேசிய கல்விக் கொள்கை‘‘ என்ற ஒரு புதிய கல்வித் திட்டத்தை ‘திராவிட மாடல்‘ ஆட்சிமீது திணிக்க முயல்வதற்கு முழு முனைப்பின் முதல் கட்டமே இந்த மும்மொழியை கட்டாயமாக ஏற்கவேண்டும் என்ற ஆணவப் பேச்சு! ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், வற்றா நதியான ‘கல்வியில் சிறந்தோங்கிய தமிழ்நாடு‘ என்ற பெயரையும், புகழையும் கண்டு எரிச்சல்பட்டு, அதைத் தடுக்க தமிழ்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்குத் தரவேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுப்பதுடன், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு சில மாநிலங்களுக்குக் கூடுதல் நிதியாகப் பிரித்து வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடே குமுறி கொந்தளித்து எழுந்துள்ளது. தமிழ்நாடு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் ஒன்றிய அரசு ‘தாரை‘ வார்த்துள்ளது. சில கொத்தடிமை மனப்போக்குள்ளவர்கள் தவிர, அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து குரல் கொடுக்கத் தயங்கவில்லை.
தமிழ்நாடெங்கும்கழக மாவட்டங்களில்…
இந்நிலையில், 23.2.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகம், ஒத்தக் கருத்துள்ளவர்களோடு இணைந்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முதல் கட்டமாகத் தொடங்கும் என 17.2.2025 அன்றே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்திருந்தார். அதன்படி நேற்று (23.2.2025) தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரத்தி்ல் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) மாலை 5 மணிக்குத் தாம்பரம் பெரியார் நகர் சண்முகம் சாலையில் உள்ள பாரதி திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழக மாவட்டத் தலைவர்கள், எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.கார்வேந்தன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் ந.இராசேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, ஜெ.பாஸ்கரன், அ.விஜய் உத்தமன்ராஜ், க.இளவரசன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தொடக்கவுரையாற்றினார்.
கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.சே.கோபால், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர்கள் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஷேக் அப்துல்காதர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் தா.கிருஷ்ணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பொறியாளர் சாமுவேல் எபினேசர், ம.தி.மு.க.செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் மாவை.கஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.யாக்கூப், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றினர்.
நிறைவாக இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து உரை நிகழ்த்தினார்.
ஒலி முழக்கங்கள்
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்திலும், நிறைவிலும் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், ‘‘கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டிக்கின்றோம்!, திணிக்காதே, திணிக்காதே! ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்காதே, திணிக்காதே!
ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்! திணிக்காதே, திணிக்காேத! தேசிய கல்விக் கொள்கையைத் திணிக்காதே, திணிக்காதே!
கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்! தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வி நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்!
மிரட்டாதே, மிரட்டாதே! ஒன்றிய அரசே மிரட்டாதே! மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், நிதி இல்லை என்று மிரட்டாதே, மிரட்டாதே!
பணியாது, பணியாது! தமிழ்நாடு பணியாது! பெரியார் மண் பணியாது! திராவிட மண் பணியாது! எதிர்ப்போம், எதிர்ப்போம்! ஹிந்தித் திணிப்பை எந்த நாளும் எதிர்ப்போம், எதிர்ப்போம்!
சிதைக்காதே, சிதைக்காதே! இந்தியாவின் ஒற்றுமையை, சிதைக்காதே! சிதைக்காதே! போராடு வோம், வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!‘‘ என தோழர்கள் ஒலி முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் நன்றி கூற, ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.