சென்னை வரும் ஒன்றிய அமைச்சர்
தர்மேந்திர பிரதானுக்கு எதிராக
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்
செல்வப் பெருந்தகை அறிவிப்பு
சென்னை,பிப்.23- தமிழ்நாடு வரும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்றும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய 2152 கோடி ரூபாய் இன்று வரை ஒதுக்காமலும், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்காலத்தையும் சிதைக்கும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகையை கண்டித்து வருகிற 28ஆம் தேதி அன்று முற்றுகை மற்றும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும்” என பதிவிட்டுள்ளார்.