அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!

viduthalai
11 Min Read

சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள்!
நந்தியைத்தான் விலகச் சொன்னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லையே!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக
நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!
பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சிதம்பரம், பிப்.23 சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தா உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை. ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள். நந்தியைத்தான் விலகச் சொன்னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லை. நந்தனை கோவிலுக்குள் விட்ட ஒரே ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி இதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழு
தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கடந்த 15.2.2025 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அவர்கள் நினைத்ததுபோன்று மதக்கலவரம் ஏற்படவில்லை என்பதினால் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவில் திருவிழாக்களை கலவரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்!

விசுவ ஹிந்து பரிசத் என்ற ஓர் அமைப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், ‘‘எல்லாக் கோவில் திரு விழாக்களையும் கலவரத்திற்குப் பயன்படுத்து.’’

தேர்த் திருவிழாவா? அதில் ஜாதிக் கலவரத்தை உண்டாக்கு.

ஒரு பக்கம் எங்களுடைய ஆதிதிராவிடர் சகோதரர்கள் தேர் வடத்தைப் பிடிக்கிறார்களா? இன்னொரு பக்கம் இன்னொரு சமுதாயத்தினர் பிடிக்கிறார்களா? அவர்களிடையே கலவரத்தை உண்டாக்கு என்று சொல்லக்கூடிய அளவிற்குத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
ஆனால், அவர்களால் தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதுவும் செய்ய முடியவில்லை.
ஓர் ஆளுநர் மூலமாக ஆட்சியை அசைத்துப் பார்க்கலாமா? என்று நினைத்தார்கள், அதுவும் முடிய வில்லை. உச்சநீதிமன்றத்தால் அவருக்கு குட்டு விழுகிறது.

அதேநேரத்தில், நியாயமாகக் கொடுக்கவேண்டி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது.
இவ்வளவு நெருக்கடியை ஒன்றிய அரசு ஏற்படுத்தினாலும், ‘திராவிட மாடல்‘ ஆட்சி தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிதி மேலாண்மையை சிறப்பாகக் கையாண்டு கொண்டிருக்கின்றார் நம்முடைய முதலமைச்சர்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு வாங்கும் கடனைவிட, நம்முடைய திராவிட மாடல் அரசு வரம்பிற்குட்பட்ட கடன்களை வாங்குகிறது. ஆங்கிலத்தில் Fiscal Management என்று சொல்லக்கூடிய நிதி மேலாண்மையை சிறப்பாகக் கையாண்டு கொண்டி ருக்கின்றார் நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மற்றவர்களுடைய கருத்துகளை முதலமைச்சர் அவர்கள் கேட்கிறார். எத்தனையோ கருத்துகளை அவரிடம் சொல்கிறார்கள். இன்றைக்குக்கூட அவர் பொறுமையாக சொல்கிறார், ‘‘கூட்டணி கருத்துகள்’’ என்று.
அதனை ஆலோசனைகளாக நான் எடுத்துக் கொள்கிறேன். எதை எதைச் செய்ய முடியுமோ, அதனை நான் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

திராவிட பூமியை, பெரியார் மண்ணை அவர்களால் அசைத்துப் பார்க்க முடியவில்லை!

ஆகவே, நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டை, திராவிட பூமியை, பெரியார் மண்ணை அவர்களால் அசைத்துப் பார்க்க முடியவில்லை என்றவுடன், மதக் கலவர பூமியாக ஆக்கி, அதன்மூலம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி, திராவிட மாடல் ஆட்சியைக் கலைக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், பா.ஜ.க. ஆளும் மணிப்பூரின் கதி என்ன? அங்கே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை நிர்வாணமாக ஓட வைத்து, எவ்வளவு அசிங்கப்படுத்தினார்கள் என்பது மறந்துவிட்டதா?
இன்னும் ஓராண்டில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. அதற்குள் ஏதாவது வித்தைகளைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை உடைக்கின்ற தந்திரங்களைச் செய்கிறார்கள். அவர்க ளும், ஆள் மாற்றி, மாற்றி, அவர்களுடைய தாழ்வாரத்தில் சென்று நிற்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்.போன்றவர்களுடைய கதியே என்ன? ராணுவத்தையே சந்திப்பேன் என்றார் அவர். ராணு வத்தைச் சந்திக்கவேண்டாம், வருமான வரித்துறையை சந்தியுங்கள் என்றனர்.

அதற்குப் பிறகு என்ன சூழ்நிலை?

ஓர் அம்மையார் வந்து, தி.மு.க.வை அழிக்கலாம் என்று நினைத்தார். அது முடியவில்லை. இன்றைக்கு அவருடைய கட்சியிலேயே மூன்று நான்கு பிரிவுகளாகி விட்டது. என்ன செய்தாலும், தி.மு.க. கூட்டணியை உங்களால் அசைக்க முடியாது.

கமலாலயத்தில் உங்களுக்கு இடம் பத்திரமாக இருக்கிறதா, இல்லையா என்று உங்களால் உறுதி செய்ய முடியுமா?
அறிவாலயத்தின் செங்கல்லை உருவுவேன் என்று வாய் வீரம் பேசாதீர்கள் – அறிவாலயத்தைப்பற்றி கவ லைப்படாதீர்கள் – முதலில் கமலாலயத்தில் உங்களுக்கு இடம் பத்திரமாக இருக்கிறதா, இல்லையா என்று உங்களால் உறுதி செய்ய முடியுமா?
காலையில் 14 தீர்மானங்கள் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு தீர்மானம் சிதம்பரம் கோவிலைப்பற்றியது. சிலர் நினைக்கலாம், ‘‘பாலகிருஷ்ணனும், வீரமணி யும்தான் கோவிலுக்கே போகாதவர்கள் ஆயிற்றே – அவர்களுக்கு என்ன கோவிலைப்பற்றி அக்கறை?” என்று.
பாலகிருஷ்ணன் கோவிலுக்குப் போகாதவர்தான்; ஆனால், அவருடைய தம்பியோ, அண்ணனோ, சொந்தக்காரர்களோ கோவிலுக்குப் போகிறார்கள் அல்லவா. அவர்களுக்குச் சம உரிமை வேண்டும் அல்லவா!

பக்திப் பிரச்சினையல்ல;
மனித உரிமைப் பிரச்சினை!

இது பக்திப் பிரச்சினை என்றால் நாங்கள் தலையிடமாட்டோம். இது மனித உரிமைப் பிரச்சினையாகும்.
நீதிக்கட்சி காலத்தில், பனகல் அரசர் ஆட்சியில், ‘‘இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை’’ உருவானது எதற்காக? என்ற வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இன்றைக்கு எல்லா கட்சிக்காரர்களும் சிதம்பரம் நகரத்தில் ஒன்றுபட்டு இருக்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்களின் உடைமையல்ல!

சிதம்பரம் நடராஜன் கோவிலின் ஒரு செங்கல்லை யாவது எடுத்து வைத்தோம் என்று சொல்வதற்கு தீட்சிதர்களுக்கு உரிமை உண்டா?
சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் உடைமையில்லை. 110 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தீர்ப்பை யார் சொன்னது என்றால், ஷெப்பர்டு என்ற வெள்ளைக்காரர் மட்டும் சொல்ல வில்லை. திருவாரூர் தி.முத்துசாமி அய்யர். முதன் முதலாக வந்த இந்திய நீதிபதி அவர்தான் சொன்னார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், கீழவீதியில் கூட்டம் போட்டு, ஊர்வலத்தை நடத்தியவர்கள் நாங்கள்தான். இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டுமென்றால், மற்றவர்களால் முடியவில்லை. திராவிடர் கழகத்துக்காரரான வீரமணி யிடம் சொல்லுங்கள்; அவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள்; அவர்தான் நியாயமாக சட்டப் பிரிவுகளை எடுத்துச் சொல்வார் என்று சொன்னார்கள்.
சாமிநாதன் அவர்கள் அறநிலையத் துறை அமைச்சராக இருந்தார் அன்றைக்கு. இன்றைக்கு அவருக்கு 99 வயது.
கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் படிக்கிறேன், கேளுங்கள்:
சிதம்பரம் நடராஜர் கோவிலை

இந்து அறநிலையச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு கொண்டு வருக!

‘‘சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவில், தீட்சிதர்களின் உடைமையில்லை. 10 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. இது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானதல்ல – பொதுக் கோவில்தான்’’ என்று நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன. தீட்சிதர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மேல்முறையீடுகள் செய்து, குறிப்பிட்ட தீட்சிதர் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே கோவிலை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிதம்பரம் கோவிலுக்குச் சொந்தமானது 2000 ஏக்கராகும். ஆனால், பெரும்பாலானவற்றை கோவில் தீட்சிதர்கள் விற்று, பணத்தைச் சுருட்டியுள்ளனர். வழக்குகள்மூலம் தெரிய வருகிறது!
சரியான வரவு – செலவுக் கணக்குகள் கிடையாது. உண்டியல் வைப்பது கிடையாது. காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளை முறையாகக் கணக்கில் கொண்டு வராததால், அவை தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்தாகப் போய்விடுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் 2004 ஆம் ஆண்டி லிருந்து 2008 ஆம் ஆண்டுவரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அப்போது ஆண்டு வரு மானமாக அறநிலையத் துறை காட்டிய கணக்கு 6 கோடி ரூபாய். பூஜைப் பொருட்கள் விற்கின்ற கடைகள் ஏலம்மூலம் கிடைத்த தொகை ரூ.15 லட்சம். இப்பொழுது தீட்சதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வருமானம், கோவில் நிலங்கள்மூலம் கிடைக்கும் வருமானம் இவை எல்லாம் போக, இந்த ஆறு கோடி ரூபாயையும் சுருட்டுகிறார்கள்.
ஆயிரங்கால் மண்டபத்தைக் கல்யாணங்கள் நடத்த வாடகைக்கு விடுகிறார்கள்; குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம்.
கோவிலின் நடைமுறைகள், செயல்பாடுகள், தீட்சிதர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைகிறார்கள்.
இவற்றையெல்லாம் கணக்கிலும், கவனத்திலும் கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று இப்பொழுதுக்குழு வற்புறுத்துகிறது.

ஒரு போட்டி அரசாங்கத்தை
நடத்தும் ஆளுநர்!

சிதம்பரம் கோவிலில் குழந்தை மணங்கள் நடைபெறுகின்றன. அதற்குத் தமிழ்நாடு ஆளுநர் மறைமுகமாக ஆதரவாக இருப்பதா?
தமிழ்நாட்டில், எதிர்க்கட்சித் தலைவர்கூட அவ்வளவு மோசமாக நடப்பதில்லை. ஆனால், ஆளுநராக இருப்பவர் நாள்தோறும் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்.

தீண்டாமை ஒழிப்பு என்பதுதான் மிகவும் முக்கியம்.

நந்தன், ‘‘சிதம்பரம் போகாமல் இருப்பேனா?’’ என்று பாட்டுப் பாடினார். அதற்குக் கதைகளையெல்லாம் சொல்லி வைத்தார்கள்.
நந்தன், ஒரு பார்ப்பனப் பண்ணையாரிடம் பணி யாற்றினார். அந்தப் பண்ணையாரிடம், ‘‘நான் சிதம்பரம் நடராஜன் கோவிலுக்குச் செல்லவேண்டும்; பணம் தாருங்கள்’’ என்று கேட்டிருக்கிறார்.
அந்தப் பார்ப்பனப் பண்ணையார், ‘‘40 ஏக்கர் நிலத்தில் பயிர்களை நன்றாக விளைய வைத்து அறுவை செய்; பிறகு உனக்குப் பணம் தருகிறேன்” என்று சொல்கிறார்.

இதைக் கேட்ட நந்தன் அதிர்ச்சியடைந்து, ‘‘40 ஏக்கர் நிலத்தில் எப்போது பயிர் செய்து அறுவடையை முடிப்பது” என்று எண்ணி பாலைவனம் போல் இருந்த அந்த நிலத்திலேயே மயங்கி விழுந்தார்.
கடவுள் கனவில் வந்தாராம்; ‘‘நான் சிதம்பரம் போக முடியாமல் இருக்கிறதே! நடராஜரை தரிசிக்காமல் இருக்கின்றேனே” என்று கவலையுடன் சொன்னாராம் நந்தன்.

உடனே கடவுள், ‘‘கவலைப்படாதே, உனக்கு மேலே இருக்கின்ற அய்யர்தானே சொன்னார்; நானே ராத்திரி எல்லாவற்றையும் விளைய வைத்துவிடுகிறேன்’’ என்று சொல்லி, 40 ஏக்கர் நிலத்தையும் நன்றாக விளைய வைத்து, அறுவடைக்குப் பயிர் தயாராக இருக்கும்படி செய்தாராம்.

இதைக் கேள்விப்பட்ட பார்ப்பனப் பண்ணையார், நந்தனார் சிதம்பரம் செல்வதற்குப் பணம் கொடுத்தாராம்.
‘‘கதிர் ஓர் முழம்; கட்டு முக்கலம்” என்ற பாட்டும் இருக்கிறது.

சிதம்பரத்திற்கு வந்த
எங்கள் நந்தனுக்கு ஏற்பட்ட கதி என்ன?

சிதம்பரத்திற்கு வந்த எங்கள் நந்தனுக்கு ஏற்பட்ட கதி என்ன? உயர்ஜாதியாக இருந்தால்தான் கோவிலுக்குள் போக முடியும் என்று சொன்னார்கள். உயர்ஜாதியாக வேண்டும் என்றால், நெருப்புக்குள் இறங்கி வரவேண்டும் என்று சொன்னார்கள். நந்தனும் நெருப்பில் இறங்கினார்; அப்படி இறங்கியதால், உயர்ஜாதி ஆகிவிட்டதோடு மட்டுமல்லாமல், உயர்ந்தே போய்விட்டார் நந்தன்.

நந்தனை கோவிலுக்குள் விட்ட
ஒரே ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!

சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தா உள்ளே வா’’ என்று கூப்பிடவில்லை. ‘‘நந்தியே விலகு” என்று சொன்னாராம் கடவுள். நந்தியைத்தான் விலகச் சொன்னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லை. நந்தனை கோவிலுக்குள் விட்ட ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சிதான்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி இதுதான். அந்த ஆட்சி தொடருகிறதே என்கிற ஆத்திரத்தில்தான் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் என்னவென்றால்,

தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிரானது!

சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாசல் பாதை வழியாகக் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தன் நுழைந்தார் என்று சொல்லி, அந்த வாயிலை அடைத்து வைத்துள்ளார்கள். இது அரசின் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்துக்கு எதிரான அப்பட்ட மான செயல்பாடே! ஆதலால், அந்த நுழைவு வாயிலைத் திறந்திட ஆவன செய்யுமாறு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தலைமையில் இயங்கும் தி.மு.க. அரசினை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உங்கள் பலத்த கைத்தட்டல் மூலமாக, நீங்களும், மக்களும் ஆதரிக்கவேண்டும்.
அதேபோன்று பழனி கோவில்.
‘‘வைதாரையும் வாழவைக்கும் முத்தமிழால் முருகனை வழிபட்டோம்’’ என்று சொல்வார்கள். சரி, தமிழுக்காக முருகனைப் பாராட்டுகிறோம். முருகன்தான் தமிழ்க்கடவுளாம். அதை ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா என்பது பிறகு.
அந்தக் கூற்றுபடி தமிழன்தானே அர்ச்சகராக இருக்கவேண்டும்; தமிழன்தானே தமிழ் மணி அடிக்கவேண்டும். அதற்காகத்தான் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம்.

பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக
மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க!

பழனி மலையில் போகர் என்ற சித்தரால் நவ பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பழனி முருகன் சிலை.
போகரால் நிர்மாணிக்கப்பட்ட பழனி ஆண்டவன் கோவிலில், சித்தர் போகரின் சீடர் புலிப்பாணியாராலும், அவருக்குப் பின்னர் அவர் வழி வந்த சீடர்களாலும் பூசை முதலியன நடைபெற்று வந்தன.

திருமலை நாயக்க மன்னர் ஆட்சியில் படைத்தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்னும் பார்ப்பனர், பழனி முருகன் கோவிலுக்கு வந்தபோது, கோவிலில் பூசை செய்தவர்கள் சூத்திரர்கள் என்பதால், ‘‘அவர்களிடம் பிராமணனாகிய நான் பிரசாதம் வாங்க முடியாது’’ என்று கூறி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்களைப் பூசை செய்யும் பணியிலிருந்து நீக்கி, கொங்குநாட்டுப் பகுதியிலிருந்து அய்ந்து பார்ப்பனர்களைக் கொண்டு வந்து அர்ச்சகர்களாக நியமித்தான் என்று பழனி கோவில் தலப் புராணமே கூறுகிறது.
ஆகமங்கள்பற்றியும், மரபுகள்பற்றியும் உச்சநீதி மன்றம் வரை சென்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். அந்த வகையில், பார்க்கப் போனாலும், பழனியாண்டவர் கோவிலிலிருந்து அர்ச்சகப் பார்ப்பனர்களை வெளியேற்றி, போகர் வழிவந்த குடும்பத்தினரையே அர்ச்சகர்களாக அமர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

‘திராவிட மாடல்’ ஆட்சியில் போராட்டம் நடத்தத் தேவையில்லை –
வாதாட்டமே போதும்!

இதையும் ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்யவேண்டும். அதற்காகப் போராட்டம் நடத்துவதற்கும் தயாராக இருக்கின்றோம். ஆனால், போராட்டம் இந்த ஆட்சிக்குத் தேவையில்லை.

ஏனென்றால், வாதாட்டமே போதும், எடுத்துச் சொன்னால். நியாயமானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இவை அத்தனையும் மனித உரிமைப் பிரச்சினையாகும்.

முழுக்க முழுக்க மனிதம்தான்!

ஆகவேதான், மற்றவர்கள் பார்க்கின்ற கோணம் வேறு; நாங்கள் பார்க்கின்ற கோணம் வேறு. நாங்கள் பார்ப்பது முழுக்க முழுக்க மனிதம்! மனிதம்!! மனிதம்!! அதுதான் சுயமரியாதை இயக்கம்.
திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்திற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும், தோழர்களும் சிறப்பாக வந்து ஆதரவுக் காட்டியமைக்கு நன்றி!
பனியையும் பொருட்படுத்தாமல், இந்தப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்களுக்கும், தோழர்களுக்கும்

நன்றி! நன்றி!!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
உரிமைகளுக்காக உழைப்போம்!
உறவுகளைவிட,
உரிமைகள் முக்கியம்!

உறவுகளைவிட, உரிமைகள் முக்கியம். அந்த உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துவோம். இதே தில்லையில், ஒரு பொதுக் கமிட்டியை அமைத்து, அதற்கு வேண்டிய போராட்டத்தை நடத்துகின்ற தேதியை அடுத்ததாக அறிவிப்போம்.
நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *