மதுரை,பிப்.22- திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல் துறையினர் அனுமதி மறுத்தது சரியானதுதான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த சையது ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம். அங்கு கந்தூரி நடத்துவது தொடர்பாக பொதுமக்கள், இஸ்லாமிய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சில கட்சிகள், அமைப்புகள், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, மதப் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றன.
பேரணி
இதைக் கண்டித்து திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் இருந்து, திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் வரை பேரணி நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்க வில்லை. பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதல்களை தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மதப் பிரச்சினையைத் தூண்டும் வகையில் சிலர் பேசியுள்ளனர். திருப்பரங்குன்றம் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். சம்பந்தம் இல்லாமல் சில அமைப்புகள், கட்சிகள் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் மற்றும் தர்கா விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “திருப்பரங்குன்றத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி வழங்க முடியாது. பொதுமக்கள் நலன் மற்றும் சட்டம்-ஒழுங்கை கருத்தில்கொண்டு, காவல் துறையினர் அனுமதி மறுத்தது சரியானதுதான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.