மத சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி கட்டுப்பாடற்ற
சுதந்திரம் அல்ல; எதை வேண்டுமானாலும் மத சுதந்திரம் என்று சொல்ல முடியாது!
மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு!
சிதம்பரம், பிப்.22 அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டப்படி ‘‘மத சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது; அந்த மத சுதந்திரத்தை நீங்கள் பறிக்கிறீர்கள்’’ என்று நீங்கள் குறை சொல்ல முடியாது. மத சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல. எதை வேண்டுமானாலும் மத சுதந்திரம் என்று சொல்ல முடியாது. அந்த மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு. பொதுமக்களிடையே மதக் கலவரம் வரக்கூடாது. சட்டம் – ஒழுங்கு காத்து, அமைதி பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் அதனுடைய தத்துவம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழு
தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
கடந்த 15.2.2025 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
யார், என்ன சாப்பிடவேண்டும் என்று
நீ எப்படி முடிவு செய்வாய்?
திருப்பரங்குன்றத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கோழிக்கறி, ஆட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என்று சொல்கிறார்களே, இஸ்லாமியர்கள் என்ன அய்யங்கார் சாப்பிடுகின்ற சாப்பாட்டையா சாப்பிடுவார்கள்? அய்யங்காரே, அந்த சாப்பாட்டை சாப்பிடுகிறார் இப்பொழுது. அப்படி இருக்கும்பொழுது யார், என்ன சாப்பிடவேண்டும் என்று நீ எப்படி முடிவு செய்வாய்?
இதை நான் சொல்லவில்லை; உன்னுடைய ஹிந்துத்துவா தத்துவத்திற்குக் காரணமாக
இருக்கக்கூடிய, ஹிந்துத்துவாவின் கர்த்தா என்று அழைக்கப்படக்கூடிய வி.டி.சவார்க்கார் சொல்லி யிருப்பதை அருண்ஷோரி எழுதிய ‘The New Icon : Savarkar and the Facts’ by Arun Shourie புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருப்பது நேற்றைய (14.2.2025) ‘விடுதலை’யில் வெளிவந்திருக்கிறது.
சவார்க்கார் சொல்கிறார்,
கேளுங்கள்!
மாட்டிறைச்சியானாலும், பன்றி இறைச்சி யானாலும் அவற்றை உண்பது மதம் சார்ந்த விஷயமல்ல – நம் வயிற்றுப்பசியைச் சார்ந்த விஷயம். மருத்துவர்கள் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ளும்படி நமக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ அதன்படி உண்பதில் தவறில்லை. நம்மால் எதை ஜீரணிக்க முடியுமோ அதை உண்பதை எவரும் தடுக்க முடியாது. உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தபின், குணமாகி வந்ததும் நம் உடலுக்கு ஏற்ற உணவு எது என்பதை, நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்று சவார்க்கார் கூறுகிறார். தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் உணவுப்பழக்கங்களோ, புத்தகங்களில் இடம் பெறும் அறிவுரைகளோ முக்கியமல்ல. நமக்கு உகந்த உணவு எது என்பதை முடிவு செய்யவேண்டியது நாம் மட்டுமே; வேறு எவரும் அல்ல.
மாடுகள் மட்டுமல்ல – நாய்கள், குதிரைகள், கழுதைகள் போன்ற உயிரினங்களின் பாது காப்பும் முக்கியம்தான். பாரத நாட்டு மாடுகள் மட்டும் ‘புனித’மானவை என்றால், அமெரிக்க மாட்டின் இறைச்சியை உண்பதில் என்ன தவறு? மாட்டிறைச்சி அமெரிக்கர்களால் உண்ணப்படுவது தெரிந்த விஷயம் தானே? இந்தக் கூற்றை சவார்க்கார் பல நேரங்களில் எடுத்தாளுகிறார். (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII – பக்கம் 554–55).
மாடுகள் பயனுள்ள உயிரினம் தான். அவற்றை நன்கு பராமரித்தால் போதும். வணங்கி வழிபட வேண்டிய அவசியமில்லை.
பசுக்களும், காளை மாடுகளும் நமக்குப் பயன்படும் உயிரினங்களாக இருந்தாலும், இங்கி லாந்திலும், அமெரிக்காவிலும் வளர்க்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை உண்பது போலவே, இங்குள்ள மாடுகளின் இறைச்சியையும் உண்ப தில் தவறில்லை என சவார்க்கார் கூறியிருக்கிறார். (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 424–47).
லோகமான்ய திலகர் – எடுத்துக்காட்டு:
திலகர் இங்கிலாந்தில் இருந்த காலக் கட்டத்தில் இறைச்சி உண்டதில்லை என்கிறார்கள். அது அவருடைய சொந்த விருப்பு – வெறுப்பு சார்ந்த விஷயம். அதற்கும் சாஸ்திரங்களுக்கும் என்ன சம்பந்தம்? சாஸ்திரங்களுக்கு கீழ்படிந்து அவர் இறைச்சி உண்ணவில்லை என்றால் கடல் கடந்து ஏன் சென்றார்? ‘பாவப்பட்ட ஜீவன்க ளாக’வும், இழிப்பிறவிகளாகவும் கருதப்பட்ட மிலேச்சர்களுடன் சரிசமமாக அமர்ந்து எப்படி உணவருந்தினார்? (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 472–73).
இறைச்சி உண்பதை மனுஸ்மிருதியே ஆத ரித்துள்ளது. யாகங்களின் போதும் இறந்த வர்களுக்கு சடங்குகள் செய்யும்போதும் இறைச்சி உண்பதை அது கட்டாயப்படுத்துகிறது. அத்தகைய சடங்குகளின் (ஸ்ரதா) போது இறைச்சி உணவையும், மீன் உணவையும் பார்ப்பனர்கள் உட்கொள்ள வேண்டியது கட்டாயமாக இருந்துள்ளது. ‘‘இறைச்சி உண்ணா தவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’ என்கிறது மனுஸ்மிருதி.
இறைச்சி உண்ணலாமா? கூடாதா? என்பதை முடிவு செய்துகொள்ள, நாம் மனுஸ்மிருதியைப் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மருத்துவ உலகமும், அறிவியலும் என்ன சொல்கி றதோ அதையே நாம் பின்பற்ற வேண்டும். ஒரு தனிமனிதன், தன் உடலுக்கு உகந்தது எதுவோ அதை உண்ணலாம். அதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. (சவார்க்கார் சமக்ரா தொகுதி VIII பக்கங்கள் 437–44).
ஆகவே, மாட்டுக்கறியோ, ஆட்டுக்கறியோ, கோழிக்கறியோ அவரவர் உடம்பு ஒத்துக்கொள்கிறதா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர, எந்தக் கறி சாப்பிடுவது என்பதை முடிவு செய்வது அவருடைய வயிறும், அவருடைய டாக்டரும்தானே தவிர, நீயோ, நானோ அல்ல என்று நாங்கள் சொல்லவில்லை, சவார்க்கார் சொல்லியிருக்கிறார்.
இதைச் சொல்லி கலவரம் செய்வதற்கு ஒரு காரணம் தேடுகிறார்கள். அதுவும் பொருத்தமில்லாத காரணம்.
அவரவர்கள் அவரவர் உணவை
சாப்பிடுகிறார்கள்
சிதம்பரம் என்பது கோவில் நகரம்தான். இதைச் சுற்றி மிலிட்டரி ஓட்டல்கள் இருக்கிறதா, இல்லையா? கசாப்புக் கடைகள் இருக்கிறதா, இல்லையா? கொஞ்ச நாள்களுக்கு முன்புவரை மீன் மார்க்கெட் அங்கேதானே இருந்தது. அவரவர்கள் அவரவர் உணவை சாப்பிடுகிறார்களா, இல்லையா? அப்படி சாப்பிடுவதினால் சண்டை வருகிறதா என்றால், இல்லையே!
சுராபானம், சோமபானம் சாப்பிட்டால் சண்டை வருமே தவிர, உணவு சாப்பிடுவதால் சண்டை வராது.
சுராபானத்திற்கும், சோமபானத்திற்கும் இப்போது டாஸ்மாக் என்று புதிதாக பெயர் வைத்திருக்கிறார்கள்.
மதக் கலவரத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதக் கலவரத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காகத்தான், ஒரு காரணத்தைத் தேடுகிறார்கள்.
குடியரசுத் தலைவரிலிருந்து, பஞ்சாயத்துத் தலைவர் வரையில், நீதிபதிகள் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்மீதுதானே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
கலவரம் ஏற்படாமல் செயல்படுவதுதானே காவல்துறையின் பணி. வருமுன் காப்பதுதானே சரியானதாகும்.
தமிழ்நாட்டின் காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் 144 தடை உத்தரவு போடுகிறார்கள். ஏனென்றால், பல உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில். கலவரம் ஏற்படக் கூடாது என்பதற்காக.
இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். சில நீதிபதிகளுக்கு நேர் பார்வை இல்லை என்பதுதான் எங்களுடைய வருத்தம்.
அண்ணா மறைவு நாள் ஊர்வலமும்- கலவரம் செய்யப்படுவதற்காக நடத்தப்படும் ஊர்வலமும் ஒன்றா?
ஏன் அவர்கள் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கிறீர்கள்? அண்ணா மறைவு நாளில், ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கிறீர்கள் அல்லவா? என்று கேட்கிறார் நீதிபதி.
அண்ணா மறைந்த நாளில் அமைதி ஊர்வலம் நடப்பதும்; கலவரம் செய்வதற்காகவே ஊர்வலமும் ஒன்றா? என்பதை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.
நீதிமன்றங்களும் தெளிவான பார்வையோடு இருக்கவேண்டும்!
நீதி தேவதையினுடைய கண்கள் ஏன் கட்டப்பட்டு இருக்கின்றன? இங்கே வழக்குரை ஞர்கள் நிறைய பேர் இருப்பீர்கள். நாங்கள் சட்டம் படித்தவர்கள். சட்டப்படி வாதாடுகிறோம். ஏனென்றால், நீதிமன்றங்களும், இதில் தெளிவான பார்வையோடு இருக்கவேண்டும்.
தங்கள் சொந்த நலனை, எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பு எழுதக்கூடாது.
அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 கூறுகள்!
அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டம் 25, 26 ஆவது பிரிவில், மத உரிமைகள் என்ற தலைப்பில் மிக முக்கியமாக இருக்கக் கூடியது என்னவென்றால்,
25: Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.
இதன்படி ‘‘மத சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது; அந்த மத சுதந்திரத்தை நீங்கள் பறிக்கிறீர்கள்’’ என்று நீங்கள் குறை சொல்ல முடியாது.
மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு!
மத சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல.
எதை வேண்டுமானாலும் மத சுதந்திரம் என்று சொல்ல முடியாது. அந்த மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.
பொதுமக்களிடையே மதக் கலவரம் வரக்கூடாது. சட்டம் – ஒழுங்கு காத்து, அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதனுடைய தத்துவம்.
கரோனா காலத்தில் கோவில்களை எல்லாம் மூடி வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் திருவிழா நடத்தவேண்டும் என்று சொன்னார்கள். அப்படி திருவிழா நடத்தினால், கரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்து இருக்கிறது; ஆகவே, திருவிழா நடத்தக் கூடாது என்று சொன்னார்கள்.
அதை வைத்து மதக் கலவரத்தைத் தூண்டலாமா என்று நினைத்தார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 இல் உள்ளதைப் போன்றே 26 இலும் இருக்கும். ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 26 ஆவது விதியில் Subject to other provision of this consitution என்ற வார்த்தை இருக்காது.
அவரவர்களுடைய வழிபாடு அவரவர்களுக்கு. கே.எஸ்.அழகிரி அய்யா அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. எங்கள் இரண்டு பேருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை.
எந்தக் கடவுளும் அதற்குப் பயன்படுவதில்லையே!
நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தானே அமர்ந்தி ருக்கின்றோம். கடவுள் அதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், எங்கள் மனதிற்குள் அல்லவா வந்து நிற்கவேண்டும். எந்தக் கடவுளும் அதற்குப் பயன்படுவதில்லையே!
எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், ஒரு மதக் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்பதற்காக, தேவையில்லாமல் ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்; அதுவும் பொருத்தமில்லாத ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.
இன்னொரு வேடிக்கையை இதில் நீங்கள் கவனிக்கவேண்டும். திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் தோழர்களான இஸ்லாமிய தோழர்கள், ஹிந்து என்று அழைக்கப்படக்கூடிய மதவாதிகளான நம்முடைய சகோதரர்கள் எல்லோரும் இருக்கிறார்கள்.
எங்களுக்குள் எந்தவிதமான விரோதமும் இல்லை: திருப்பரங்குன்றம் மக்கள்!
‘‘நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் கறி சாப்பிடுவதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அவருடைய இடத்தில் அவர் சாப்பிடுகிறார். நாங்கள் எங்கள் பணியை செய்துகொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்தவிதமான விரோதமும் இல்லை. வெளியூர்க்காரர்கள்தான் இங்கே வந்து, இதுபோன்ற கலவரமூட்டும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால், நீதிமன்றம் ஒரு உத்தரவு போடுகிறது – மாலை 4 மணிக்கு ஊர்வலம் நடத்த வேறிடத்தில் அனுமதி கொடுக்கிறீர்களா? என்று.
மாலை 3 மணியாயிற்று; ஒரு மணிநேரத்தில் சொல்லுங்கள் என்று சொல்கிறது நீதிமன்றம்.
நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டதுதானே அரசாங்கம். சரி, ஒரு மணிநேரத்தில் சொல்கிறோம் என்கிறார்கள்.
திருமங்கலத்தில் அனுமதி கொடுக்கிறோம் என்று அரசாங்கம் சொன்னவுடன், 4 மணிக்குத் தொடங்கி, ஒரு மணிநேரத்திற்குள் (5 மணிக்குள்) ஊர்வலத்தை முடித்துக் கொள்ளவேண்டும் என்று அனுமதி கொடுக்கிறது.
ஒரு மணிநேரத்தில் 4 ஆயிரம் பேர் திரண்டனரா? சாத்தியமே இல்லை!
உடனே, 4 ஆயிரம் பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என்று செய்தி போடுகிறார்கள். அவர்கள் எல்லாம் உள்ளூர்க்காரர்களா? இல்லவே இல்லை. வெளியூரிலிருந்து கூலிப் பட்டாளங்களைக் கொண்டு போய் தயாராக வைத்திருக்கிறார்கள்.
ஒரு மணிநேரத்தில் 4 ஆயிரம் பேரைத் திரட்டக்கூடிய சக்தி உங்களுடைய கட்சிக்கு இருந்திருந்தால், இந்நேரம் நீங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பீர்கள் அல்லவா! உன்னுடைய யோக்கியதை இதில் தெரிந்து போயிற்றே!
(தொடரும்)