‘கால வரிசையில் பாரதி படைப்புகள்’ என, பாரதி யாரின் இலக்கிய படைப்புகளை, 23 தொகுதிகளாக தொகுத்ததற்காக, சீனி விஸ்வநாதனுக்கு ஒன்றிய அரசு பத்மசிறீ விருது அறிவித்துள்ளது.
அவருக்கும், பத்ம பூஷண் விருது பெறும் ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கும், அசோக் நகர் கிளை, ‘பாரத் விகாஸ் பரிஷத், வானவில் பண்பாட்டு மய்யம் மற்றும் திருவொற்றியூர் பாரதி பரிஷத்’ அமைப்புகள் சார்பில், பாராட்டு விழா, மயிலாப்பூர் பாரதி வித்யா பவனில் நடந்தது. இதில் பத்ம விருது பெறும் நல்லி குப்புசாமி, சீனி விஸ்வநாதன், பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிடும், ‘தி அலயன்ஸ் பதிப்பகம்’ சீனி விஸ்வநாதன் ஆகியோரை கவுரவித்து, தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியதாவது:
‘‘ஒரு பக்தன் போல, பாரதியாரின் வாழ்க்கையை ஆராய, தன் வாழ்க்கையை சீனி விஸ்வநாதன் அர்ப்பணித்து உள்ளார். பாரதியார், சுதந்திர போராட்ட வீரர், தேசியவாதி, கவிஞர் என, பல பரிமாணங்களில் இருந்தவர்.
நான் தமிழ்நாடு வந்த போது, ஆளுநர் மாளிகையில் பல சிலைகள் இருந்தாலும், அங்கே பாரதி சிலை இல்லை. ‘பாரதி வித்யா பவன்’ அமைப்பினர், பாரதியார் சிலையை நிறுவித் தந்தனர்.
தமிழ் மொழியில் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும், கடந்த இரண்டு நுாற்றாண்டுகளில், பாரதியாருக்கு நிகரான ஒருவர் இல்லை. பாரதியார் சாதாரண மனிதர் அல்ல; அவதார புருஷர். பாரதியார் பாரதம் குறித்து பேசி உள்ளார். தேசத்தை தெய்வமாக பார்த்தார். இதனால், கெட்ட வாய்ப்பாக பாரதியார் குறித்து பேசும் சூழல், தற்போது முற்றிலும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பாரதம் என்பது நாடு அல்ல என்ற சூழல் இங்கு நிலவுகிறது. அகண்ட பாரதம்,’சேதமில்லா ஹிந்து ஸ்தானம்’ குறித்து வலியுறுத்தியவர் பாரதியார். தமிழுக்கும், காசிக்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் பேசியுள்ளார்.
பிரிட்டிஷார் ஆங்கிலத்தை முக்கியத்துவப்படுத்தி, தமிழை தரம் தாழ்த்த செய்த போது, அவர்களை பாரதியார் எதிர்த்தார். அந்த சூழலிலும் தமிழை வளர்த்தார். தேச பக்தர்கள் அவரின் விஸ்வரூபம் குறித்துப் பேசுகின்றனர். பாரதியார் இன்னும் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பாரதியாரின் பெயரிலேயே பல்கலை இருந்தும், பாரதியாருக்கு இருக்கை இல்லை. அழுத்தம் காரணமாகவே, பல்கலையில் பாரதியாருக்கு இருக்கை அமைக்காமல் இருக்கின்றனர். துணை வேந்தர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்; இந்த நிலை மாறும். கடந்த, 60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுவோர், தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை.’’ என்று தமிழ்நாடு ஆளுநர் தமிழாய்ந்த பெரும் புலவர் போல மூச்சுமுட்ட உளறித் தள்ளியிருக்கிறார்.
பாரதியார் படைப்புகளை எல்லாம் கரைத்துக் குடித்தவர் போலப் பேசியிருப்பது கண்டு நகைக் காமல் இருக்க முடியாது.
ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப் பிடிப்பவர்கள், சமஸ்கிருதத்தை தேவபாைஷ என்றும், தமிழை நீஷப் பாைஷ என்றும் கருதுபவர்கள், பேசுகிற கூட்டத்தைச் சேர்ந்தவர் – ஏதோ தமிழ்மீது அதீத பற்றுக் கொண்டவர் போலப் பேசுவது – யாரை ஏமாற்ற?
உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அதனை ஆக்கிக் கொடுத்த திருவள்ளுவரை பகவன் என்ற பார்ப்பானுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று எழுதிய வ.வே.சு. அய்யர் அவர்கள் பார்வையில் அறிவாளி.
கடவுள் என்ற சொல்லையோ, மதம் என்ற சொல் லையோ 1330 குறட்பாக்களில் எந்த இடத்திலும் பயன்படுத்தாத திருவள்ளுவருக்கு மதக் காவி சாயம் பூசுகின்ற ‘பூசுரர்’ இப்படிப் பேசுவது – அவர்களின் இரட்டை நாக்கைதான் அம்பலப்படுத்தும்.
‘தீக்குறளை சென்றோதோம்!’ என்ற ஆண்டாளின் பாட்டுக்கு ‘தீய திருக்குறளை ஓத மாட்டோம்’ என்று சொன்னவர் இவர்களுக்கு மகாப் பெரியவாள்!
‘தமிழுக்குத் திராவிட இயக்கம் என்ன செய்தது?’ என்ற தோரணையில் பேசி இருக்கிறார்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தது யார்? திருக்குறள் மாநாடு நடத்தியவர் யார்?
மலிவு விலையில் திருக்குறளை நாடெங்கும் பரப்பியவர் யார்? புரட்சிக் கவிஞரைவிட பாரதியார் விஞ்சியவரா? தமிழ் யாப்பு இலக்கணத்தை முறையாகக் கற்றுத் துறைப்போன புரட்சிக் கவிஞர் முன் பாரதி நிற்க முடியுமா?
தமிழுக்குச் செம்மொழி தகுதி – கலைத் துறையில் திருப்பம் – தமிழ் வளர்ப்பு – நடையில் மாற்றம் – ஹிந்தி எதிர்ப்பு – தமிழில் பெயர் சூட்டல் – திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை என்று இன்னோரன்ன பட்டியலிட முடியாத அளவுக்குத் தமிழுக்குத் தொண்டு செய்தது திராவிடர் இயக்கமே!
ஆளுநரா – அரசியல்வாதியா என்ற கேள்வி அடித்தட்டு மக்கள் வரை போய் சேர்ந்திருக்கிறது.
‘யாகாவாராயினும் நா காக்க!’’ என்ற குறளை நினைவூட்டுகிறோம்.