ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கையில் உருதுக்கு பதில் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அம்மாநில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தானில் மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் உருதுமொழி கற்பிக்கப்பட்டு வந்தது நீக்கப்பட்டு சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளதால் இந்த போராட்டம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்து காலந்தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியை திணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு விடுதலை அடைந்த காலம் முதலே தமிழ்நாடு பல்வேறு கட்ட மொழிப் போர்களை நடத்தி இருக்கிறது. 1965ஆம் ஆண்டு ஹிந்தி திணிப்புக்கு எதிரான உச்சகட்ட தமிழ்நாட்டின் போர் தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தையே மாற்றி தேசிய கட்சிகளின் ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த வரலாற்றை அறிந்தும் ஒன்றிய அரசு தொடர்ந்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை எப்படியாவது தமிழ்நாட்டில் திணித்துவிட துடியாய் துடிக்கிறது. மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்தும் வருகிறது; இதனை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு எதிராக கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றன. சென்னையில் 19.2.2025 அன்று திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தின.
தமிழ்நாட்டின் அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் பல பள்ளிகளில் 3ஆவது மொழியாக உருது மொழி கற்பிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் தற்போதைய பாஜக அரசோ, உருது மொழி கற்பிக்கப்படும் அரசு பள்ளிகளில் அம்மொழியை நீக்கிவிட்டு சமஸ்கிருதத்தை இடம் பெறச் செய்திருக்கிறது. இதனால் உருது மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும், படிக்கும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; மேலும் எந்த வகையிலும் பயன்படாத எந்த ஒரு வேலைவாய்ப்புக்குமே உதவாத சமஸ்கிருத மொழியை கட்டாயம் கற்றாக வேண்டும் என்கிற நெருக்கடியையும் மாணவர்களுக்கு உருவாக்கி தந்துள்ளது ராஜஸ்தான் மாநில அரசு. இதற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றனர்.