கேள்வி 1: திராவிடர் கழக குடும்பத்தினர் இல்லங்களில் நடைபெற்ற இறப்பு நிகழ்ச்சிகளில் பாடை தூக்குவது, மயானம் வரை பெண்கள் வருவது எல்லாம் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலை மாறி, இன்று நூறு சதவீதம் சடங்கு சம்பிரதாயங்கள் பின்பற்றுபவர்கள் வீட்டில் கூட பெண்கள் கொள்ளிச் சட்டி எடுத்துக் கொண்டு உறவுக்கார பெண்களுடன் மயானத்துக்கு வருவது என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டதே?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 1: இது காலத்தின் கட்டாயம். ஸநாதனம் என்றும் மாறாதது என்று எதுவுமில்லை. “மாற்றம் என்பதுதான் மாறாதது” என்ற தத்துவம் பகுத்தறிவுவாதி கவுதம புத்தர் தொடங்கி, காரல்மார்க்ஸ், திருவள்ளுவர், தந்தை பெரியார் காலம் வரை – அறிவியல் தத்துவப்படி தொடரும் நிலைதான்.மாறியே தீரவேண்டும் என்பதுதானே விஞ்ஞானம். பகுத்தறிவும், சுயமரியாதையும் சமூக விஞ்ஞானங்கள் தானே!
– – – – –
கேள்வி 2: தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் இடம்பெறத்தக்கதாக தாங்கள் கருதுகின்ற திட்டம் குறித்துக் கூறுவீர்களா?
– க.அரசு, மாதவரம்
பதில் 2: நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்றிய அரசு தரும் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் அதனையும் தாண்டி சிறந்த நிதி மேலாண்மையினை (Fiscal Management) நன்கு தெரிந்து செயல்படும் நமது முதலமைச்சர், தக்க நிதித்துறை மதிவுரைஞர்களுடன் கருத்தாடி நடத்திடும் முதிர்ச்சி பெற்றவர் அல்லவா?
– – – – –
கேள்வி 3: திரிவேணி சங்கமத் தண்ணீர் குளிப்பதற்குத் தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டும் மக்கள் கூட்டம் மகா கும்பமேளா எனும் மாய வலைக்குள் மாட்டிக் கொள்வதேன்?
– அ.வரதன், திருத்தணி
பதில் 3: அதுதான் ஸநாதனத்திற்கும், சயின்சுக்கும் உள்ள பச்சை வேறுபாடு. முன்னது நம்பிக்கை அணுகுமுறை – பின்னது அறிவியல் அணுகுமுறை!
– – – – –
கேள்வி 4: அடிக்கடி பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் பற்றிய செய்திகள் வருகின்றனவே – அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனை தேவையா?
– ம.சந்திரசேகரன், வந்தவாசி
பதில் 4: தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; ஆசிரியர் – பெற்றோர் அமைப்புகளும், ஆசிரியர் அமைப்புகளும் கோரிக்கை என்ற உரிமை வற்புறுத்தலோடு, பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் என்பது ஆசிரியர் சமூகத்தின் அவமானம் என்பதை நன்கு உணரச் செய்ய மதிவுரைகளைப் பரப்பி, கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வகையில் பரப்பி வற்புறுத்துவதே சாலச் சிறந்தது!
– – – – –
கேள்வி 5: உலக அளவில் விமான விபத்துகள் அதிகரித்து வருவது எதனால்? தடுப்பது எப்படி?
– ப.ஆனந்தன், சைதாப்பேட்டை
பதில் 5: அந்தந்த நாட்டு அரசுகளும், தனியார் விமானம் அல்லது அரசு விமானம் எதுவாக இருந்தாலும் பழைய விமானங்களை வாங்கி ஓட்டுதலை விட்டு புதிதாக விமானங்களை அமைப்பது, எப்படி மோட்டார் வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுகிறோமோ அதன்படியே அதை முக்கியமாக – கண்டிப்பாக விமானப் போக்குவரத்திலும் அமல்படுத்த முன்வர வேண்டும்.
– – – – –
கேள்வி 6: புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை நள்ளிரவில் ஒன்றிய அரசு வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?
– பா.பாபு, திருப்பூர்
பதில் 6: இருட்டில் பிறந்த தேச சுதந்திரம் என்பதால் சூரிய வெளிச்சத்தை விரும்பாதவர்கள் இப்படிச் செயல்படவே விருப்பம் போலும்!
– – – – –
கேள்வி 7: கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணியினைத் தடை கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதோடு – பிறருக்கும் பாடம் தருகின்ற ஒன்றல்லவா?
– மதிவாணன், சென்னை-12
பதில் 7: ஆம். பாராட்ட வேண்டிய தீர்ப்பு – முடிவு.
– – – – –
கேள்வி 8: டாக்டர் சத்தியவாணி முத்துவின் 102ஆம் பிறந்த நாளில் (15.2.2025) அவரைப் பற்றித் தாங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?
– கி.மணிவண்ணன், பாரதிநகர்
பதில் 8: பொதுவாழ்வில் தன்னல மறுப்பும், சமூகத் தொண்டும், திராவிடக் கருத்தியல் மேலும் கூர்மையாக்கப்பட வேண்டிய சூளுரையும் – நடைமுறை மாற்றமும் தேவை!
– – – – –
கேள்வி 9: ஒன்றிய அரசு பேரிடர் நிதியில் தமிழ்நாட்டுக்குக் கைவிரித்து வேறு 5 மாநிலங்களுக்கு ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. தொடரும் இந்த ஓரவஞ்சனைக்கு முடிவு என்ன? எப்போது?
– க.குமரன், மதுரை
பதில் 9: ‘விடுதலை’ நாளேட்டின் 20.2.2025 அன்றைய எனது அறிக்கையே விளக்கமான பதிலாகும்!
– – – – –
கேள்வி 10: தங்களின் சங்கிகளை கண்காணிக்காமல் விட்டால் அதிகாரத்தின் உச்சிக்குச் சென்று தங்களின் கண்களிலேயே விரல் விட்டு ஆட்டி விடுவார்கள் என்பதை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பெற்ற அனுபவத்தால் புதிய கட்சி தொடங்கிய ஒருவருக்குப் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் வரலாம் என ஒன்றிய உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது எனக் கூறி ஒன்றிய ரிசர்வ் படை (ஒய் பிரிவு) நியமித்து 24 மணி நேரமும் தங்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளாரே பிரதமர் மோடி?
மன்னை சித்து , மன்னார்குடி – 1.
பதில் 10: கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!! நான் சொல்ல என்ன இருக்கிறது?