மழவை தமிழமுதன்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் அதிகம் பயன்பெறும் பிரதான் மந்திரி ஆதார்ஷ் கிராம யோஜனா (PMAGY) திட்டத்திற்கான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் முடக்கி வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு ஆதிராவிட நல இயக்குநரகம் அளித்த தரவுகளின் படி, PMAGY திட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.184 கோடியே 23 லட்சம் நிதியை மூன்று ஆண்டுகளாக வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை பதிலளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாதிரி கிராமம்
ஆதார்ஷ் கிராமம் என்றால் மாதிரி கிராமம் என்று பொருள். கிராமங்களில் உள்ள ஜாதிப் பாகுபாட்டை குறைக்க தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் வாழிடங்களில் சமூக கட்டமைப்பை மேம்படுத்த 2009 – 2010ஆம் ஆண்டு அப்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தால் PMAGY தொடங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 50% மேல் உள்ள கிராமங்களை தேர்வு செய்து அந்த கிராமங்களில் உள்ள ஜாதி இந்துக்களின் வாழிட மேம்பாட்டு நிலைக்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் தாழ்த்தப்பட்ட குடியிருப்பில் மேற்கொண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் பேதங்களை குறைப்பது என்பதுதுதான் மாதிரி கிராமங்கள் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
குடிநீர் மற்றும் சுகாதாரம், கல்வி, சாலை போக்குவரத்து, மின்சார வசதி, ஊட்டச்சத்து மேம்பாடு, சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு ரூபாய் 20 லட்சம் வரை பல்வேறு துறை சார்ந்த திட்டங்களுடன் இணைந்து ஒன்றிய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் நிதி வழங்கப்படும். முதற்கட்டமாக இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள 1000 கிராமங்களை தேர்ந்தெடுத்து அதில் தமிழ்நாட்டுக்கு 225 கிராமங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2014 – 2019 ஆட்சி காலத்தில் இரண்டாம் கட்டமாக 1500 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போதுவரை 4484 கிராமங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நாடு முழுவதும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
முடக்கும் ஒன்றிய பாஜக அரசு
கிராமங்கள் பெரும்பாலும் ஜாதி ஆதிக்கும் நிறைந்ததாகவே தொடர்கிறது. வாழ்வியல் சூழல் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் போது தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் நிலையோடு ஜாதி இந்துக்களின் நிலையும் சமன்படுத்தப்பட்டு சமத்துவம் நிறைந்த கிராமங்களாக மாறும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகளை இதன் மூலம் குறைக்க முடியும் என்கிற உயர்ந்த நோக்கத்திலேயே இந்திய அரசாங்கத்தால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றாலும் இதனை முடக்கும் முயற்சியை ஒன்றிய பாஜக மேற்கொண்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு முன்னோடியாக ஜாதி ஏற்றத்தாழ்வுகளை கலைந்து சமத்துவத்தை நிலைநாட்ட 1997-1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சமத்துவபுரம் என்கிற சிறந்த திட்டத்தை அறிவிப்பு செய்தார். 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் நாள் மதுரை திருமங்கலம் அருகே மேலக்கோட்டை என்கிற இடத்தில் அனைத்து ஜாதியினரும் ஒன்றாய் வாழும் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் கலைஞர்.
ஒரு சமத்துவபுரத்திற்கு 100 வீடுகள் அதில் 40 வீடுகள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு என ஒதுக்கீடு செய்து அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து வாழும் அனைத்து வசதிகளுடன் கூடிய சமத்துவ புரங்களை ஜாதி ஒழிப்பிற்கு முன்மாதிரியாக கொண்டுவந்தார் . 1997- 2001 காலகட்டத்தில் 145 சமத்துவபுரங்களையும் 2006 – 2011 வரை 93 சமத்துவ புறங்களையும் உருவாக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலைஞர் அவர்களுக்கு ‘சமத்துவ பெரியார்’ என்கிற பட்டம் வழங்கப்பட்டது. அந்த மேடையிலேயே பேசிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “சமத்துவம் என்றால் பெரியார் பெரியார் என்றால் சமத்துவம்” என்றார். அதனடிப்படியிலேயே தான் தொடங்கிய சமத்துவபுரங்கள் திட்டத்திற்கு “தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம்” என்ற பெயரை சூட்டினார். 2023 – 2024ஆம் ஆண்டில் புதிதாக எட்டு சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சமத்துவபுரங்கள் திட்டம்போலவே காங்கிரஸ் அரசாங்கத்தால் 2009 – 2010 ஆம் ஆண்டு ஆகாஷ் கிராமம் திட்டம் கொண்டுவரப்பட்டபோது கூட்டணியில் அங்கம் வகித்த கலைஞர் அவர்கள் முதற்கட்ட ஒதுக்கீட்டிலேயே தமிழ்நாட்டிற்கு 225 கிராமங்களை தேர்வுசெய்து இடம்பெறச்செய்தார் . அந்தத் திட்டத்திற்கான தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை தான் ஒன்றிய பாஜக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது.
தொடரும் பழிவாங்கும் நடவடிக்கை
பாஜக ஆளாத மாநிலங்களில் குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு பரிதாப நிலையில் பாஜக தமிழ்நாட்டில்தான் உள்ளது. திருக்குறள், பாரதியார், காசி தமிழ்ச் சங்கம் என்று எவ்வளவு தான் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்த்தாலும் ஏமாற்றவே முடியாத நிலைக்கு பெரியார் மண்ணாக தமிழ்நாடு இருப்பதை ஒன்றிய பாஜக உணர்ந்துள்ளதால் நேரடியாகவே பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்களை ஆளுநர் மூலம் ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு வைப்பது – ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பேரிடர் நிவாரண தொகைகளை வழங்காமல் தவிர்ப்பது – மெட்ரோ திட்ட பணிகள், ரயில்வே திட்டப் பணிகள், பிரதமர் வீடு கட்டும் திட்டம் இப்படி பல திட்டங்களுக்கு ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய மாநில அரசுக்கான நிதியை நிறுத்துவது என்று தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது பாஜக அரசாங்கம்.
இப்பொழுது இன்னும் வெளிப்படையாகவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிதி ரூபாய் 18,711,57 கோடியில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட இல்லை. நியாயமாக வந்து சேர்ந்திருக்க வேண்டிய ரூபாய் 2.152 கோடி நிதியை குஜராத், உத்தரபிரதேசம் போன்ற பாஜக ஆளு மாநிலங்களுக்கு கொடுத்து விட்டார்கள். நியாயப்படி தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி ஏன் வரவில்லை என்று கேட்டால் ஹிந்தி மொழியைக் கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று மிரட்டும் தொனியில் பதிலளிக்கிறார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர்.
பாஜகவின் யுக்தி
இப்படி தொடர்ந்து மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை நிறுத்துவதற்கு காரணம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு திராவிடமாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முடக்குவது தான். இதன் மூலம் நிதிச் சுமையை ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு மக்களுக்கு எதையுமே செய்யவில்லை என்கிற மாயத் தோற்றத்தை திணிப்பதற்கு தான் பாஜக இத்தனை வேலைகளையும் செய்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் இத்தகைய யுக்தியை பயன்படுத்திதான் ஆட்சியை பறிக்கிறார்கள் என்பதற்கு டில்லி தேர்தல் ஓர் உதாரணம். அதன் தொடர்ச்சியாகத்தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் பயன்பெறும் பிரதான் மந்திரி ஆதார்ஷ் கிராம யோஜனா திட்டத்திற்கான நிதியையும் மூன்று ஆண்டுகளாக முடக்கி உள்ளது ஒன்றிய பாஜக.