பாணன்
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நிலப்பரப்பில் பெரும்பான்மை மக்கள் பேசும் நிக்ர மொழிக் குடும்பத்தின் ஒரு துணைக் கிளையாக சூடானில் பேசப்படும், ‘புலானி’, ‘புல்புட்’ அல்லது ‘புர்’ என்றும் அழைக்கப்படுகிறது, வரலாற்றில் நாடோடிகளால் பேசப்பட்டு, ஆப்பிரிக்காவில் மிகவும் பரவலாக பரவிய மொழிக் குழு ஆகும்,
அதன் பரவல் மேற்கில் மொரிட்டானியா, செனெகல், கினி முதல் கிழக்கில் சூடான் வரை, தெற்கே காமரூன், சென்ட்ரல் ஆப்பிரிக்கா குடியரசு மற்றும் காங்கோ வரை பரவியுள்ளது. இதனால் புலானி பேசுபவர்களின் எண்ணிக்கையை கண்டறிவது எளிதான காரியம் அல்ல, பல காரணங்களுக்கு உட்பட்டு, பல நாடுகள் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெவ்வேறு இன முறைகளை பதிவு செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு, “கான்சைஸ் என்சைக்ளோப்பீடியா ஆஃப் லாங்குவேஜஸ் ஆஃப் தி வேர்ல்ட்” என்று எழுதப்பட்டது, பேசுபவர்களின் எண்ணிக்கை 13 முதல் 17 மில்லியன் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.
சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் ஜோர்தான் நாட்டில் அகதியாக இரண்டு தலைமுறையாக வாழும் காலித் என்ற சூடானியர், தனது தாய்மொழியை அடுத்த தலைமுறையினர் பேசத் தயங்கும்போது தான் தனித்து விடப்பட்டது போல் உணர்கிறார். சூடானில் பிறந்து வளர்ந்தவராக, அவர் அரபி மொழியில் கற்றுத் தேர்ந்தவர். ஆனால், அவரது தாய்மொழியில் சில சொற்களைக் கூட சொல்ல முடியாமல் திணறுகிறார். அவர் பலநூற்றாண்டு பெருமை வாய்ந்த தன்னுடைய தாய்மொழி தனக்கு முன்னே அழிந்துபோவதைப் பார்த்து அன்றாடம் கண்ணீர் வடிக்கிறார்.
என்னால் ‘புர்’ மொழியில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், பதில் கூற முடியவில்லை என்கிறார் காலித், தனது சிறுவயது பருவத்தில் தனது தாய்மொழியில் பாடல்களையும் சிறு சிறு நகைச்சுவை நாடகங்களையும் கேட்டு வளர்ந்தவர். இன்று எதுவுமே இல்லாமல் வெறுமையாக அவருக்கு இந்த உலகம் காட்சி தருகிறது.
இங்கு சூடானின் மொழி இடத்தில் தமிழை வைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய ஆபத்து நம்மை நோக்கி ‘ஹிந்தி’ என்ற பெயரில் தயாராக உள்ளது என்று தெரியும்.
இதனால் தனது பாட்டியை பேசச்சொல்லி நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவரைப் பாடச் சொல்கிறார், சண்டையிடுவதற்காக வேண்டுமென்றே சீண்டுகிறார். அப்படியாவது எனது மொழியைக் கேட்க முடியுமா என்று ஏங்குகிறார்.
சூடானில் தாய்மொழி கற்பிக்க மறுக்கப்பட்டு அரபு மொழி மட்டுமே என்று ஆகிவிட்டதால் கிராமப்புறங்களில் பலர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர். ஆனால், காலித் தனது தாய்மொழி தன்னோடு முடிந்துபோவதை விரும்பவில்லை. ஆகையால், அவர் தாய்மொழிக்காகவே ஒரு கல்வி வானொலி ஒன்றை துவக்குகிறார். ஒம்டூர்மானில் அவர் வானொலியில் பேசும் முதல் வார்த்தை “உங்களை உங்கள் மொழியில் வாழ்த்துவதில் உங்களோடு இணைந்து உணர்வுப்பூர்வமாக இருப்பதை உணர்கிறீர்களா?” என்றுதான் துவக்குகிறார்
தாய்மொழி பேசுபவர்களை
மனநோயாளிகள் என்ற பரப்புரை
பள்ளியில் சூடானிய மொழிகளான ‘தின்கா’, ‘நவுர்’, ‘பஹேஜ’, ‘புலுன்’, ‘புர்’ மொழியில் ஒரு வார்த்தையை கூட பேசுவது தடுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், அவர் பள்ளியில் சேர்ந்தார். இது சூடானிய அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்று என்று அவர் விளக்குகிறார், அது அனைவருக்கும் ஒரே ஒரு அடையாளத்தை கொண்டிருக்க விரும்பியது, இது உள்ளூர் சமூகத்தின் கலாச்சாரங்கள் மற்றும் வரலாறுகளை அழித்தது. இது ஆட்சியாளர்களின் ஆளுமையை இறுக்கமாக்குவதற்கும், மக்கள் அவர்களின் பார்வைக்கு இணங்க செய்வதற்கும் ஒரு வழியாக இருந்தது.
காலித் அரபி மொழி பேசிக் கொண்டே இருந்தார்; சில நேரங்களில் அரசின் விதிகளை மறந்து, தவறுதலாக ‘புர்’ மொழியில் பேசிவிடுவார். பள்ளியில் அரபி மட்டுமே பேசப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய குழந்தைகள் தண்டிக்கப்பட்டனர்.. தண்டனை “கடுமையானது மற்றும் மனிதாபிமானமற்றது… அதில் எந்தவித நியாயமும் இல்லை” என்று நம்புகிறார்.
காலித் தனது தாய்மொழியை படிப்படியாக மறந்துவிட்டதையும், அதனால் தனது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுடன் பேச முடியாமல் போனதையும் ஒப்புக்கொள்கிறார். அவரது வார்த்தைகளில், இது ஒரு “பெரிய அவமானம்” என்று கூறுகிறார், ஏனென்றால் பள்ளிக்கு சென்று தங்கள் வேர்களை மறந்துவிட்ட சூழலில், பேச முடியாத உறவினர்களை மக்கள் அந்நியர்கள் என்று நினைக்கத்துவங்கினர். தாய்மொழி பேசமுடியாததால் சமூகத்தில் எந்த ஒரு விழா, திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதும் அந்நியர்களின் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரமை ஏற்படுகிறது.
தற்போது தொலைபேசியில் தன் உறவினர்களுடன் பேசுகையில், தாய்மொழியில் ‘வணக்கம்’ என்று சொல்லியதுமே எதிரில் உள்ளவர்கள் ஏளனமாக “இன்னும் மனிதனாக மாறவில்லையா?” என்று கூறுகின்றனர். ஒரு சிறிய தொலைபேசி அழைப்புக்கு கூட கிண்டலுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, பல உறவினர்கள் பேசுவதையே தவிர்த்து விடுகின்றனர், விழாக்களுக்கு அழைப்பதை தவிர்த்து விடுகின்றனர்.
தாய்மொழியில் பேசுபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலும், அரசாங்கத்தாலும் நிராகரிக்கப் படுகின்றார்கள். தாய்மொழி பேசுபவர்களை அந்நியர்களாக பார்க்கின்றனர். அரசு அவர்களை இரண்டாம் நிலை குடிமக்களாக பார்க்கிறது. அவர்கள் அரபி மொழியை தாய்மொழியாளர்கள் போல பேசினாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் தமது முடிவுகள் சரியானவையா என்று யோசிக்கிறார்கள்.
‘ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே கொள்கை, ஒரே உணவு’ முறையால் நாசமாய்போன சூடான்
சூடானின் மனித உரிமைப் போராளி முஹம்மது பத்வி கூறும்போது, அரசு சூடானிய மக்களை ‘ஒரே கலச்சார’த்தின் கீழ் கொண்டுவர விரும்பியது. 500க்கும் மேற்பட்ட இன மற்றும் உப-இன குழுக்கள் கொண்ட நாட்டில், அரபி மொழி எல்லா மக்களும் பேசப்படவேண்டும் என்றும் அரசியல் ஆளுமைக்கு ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக கருதப்பட்டது.
அரபி பேசாத சமூக உறுப்பினர்கள் தங்கள் மொழிகள் கீழ்மையானவை என நம்பும்படி செய்யப்பட்டனர், வட்டார மொழி பேசுபவர்களை “ருதானா” (குரங்குகளைப் போல் குரல் எழுப்புபவர்கள்) என்று குறிப்பிடப்பட்டது. இது அதாவது ‘பைத்தியக்காரர்களின் உளறல்’ என்று குறிக்கிறது. “ஒரு மாணவனுடன் மற்றொரு மாணவனை இழிவு செய்ய கிண்டல் செய்ய நீ ‘ருதானாவில் பேசினாய்’ என்று கூறுவான். ருதானா மனநோயாளிகளின் உளறல். ஆகவே, நாங்கள் மனிதர்களாக ஆக வேண்டும் என்றால் அரபியில் பேச வேண்டும்” என்று ஒரு நிலையை மக்களிடையே திணித்தார்கள்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக, சூடான் அரசு “ஒடுக்குமுறை கொள்கைகளையும் அரபி மொழி பேசும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான உத்திகளையும் பின்பற்றியது.” அதிகாரத்தில் எப்போதும் அமர்ந்திருக்க ஒரே வழி தாய்மொழி கலாச்சார அழிப்பு, அதற்கு என்ன என்ன நடவடிக்கைகள் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்துகொண்டே இருந்தது,
2011-இல் தெற்கு சூடான் பிரிந்ததற்கு முன்னர், கிழக்கு சூடானின் ஒரு நகரில், மேனாள் அதிபர் ஒமர் அல்-பஷீர் பேசியதை வைத்தே நாம் தெரிந்துகொள்ளலாம் என்று மொழியியல் நிபுணர் பத்வி கூறுகிறார். அந்த உரையில், தற்போது பதவியிழந்த அந்த அதிபர், தெற்கு சூடான் சுதந்திரம் கிடைத்ததால் வடக்கு சூடானில் இனி ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை பிரச்சினையின்றி அமல்படுத்தலாம் என்று பேசினார்.
கெய்ரோவில், எகிப்தின் தலைநகரில், நான் நூர் என்ற 36 வயது சூடானிய புலம்பெயர்ந்தவரை சந்திக்கிறேன். அவர் ‘புர்’ மொழியை பேசுகிறார். போர் காரணமாக இப்போது அழிந்துபோன ஒரு கிராமத்தில் பிறந்தவர், குழந்தைப் பருவத்தில் பள்ளியை விட்டு வெளியேற நினைத்தார்.
அவர் நினைவு கூர்கிறார், அரபி மொழியை கற்றுக் கொள்ள தவறியதற்காக கடுமையாக தண்டிக்கப்பட்ட போது, அவரது நண்பர்கள் பள்ளியை விட்டு வெளியேறினார்கள். இது வீட்டில் அவர்கள் பேசாத ஒரு மொழி. நான் என் தந்தையிடம் சொன்னேன், “பள்ளியை விட்டு வெளியேறி எனது தாய்மொழியைக் கற்கப் போகிறேன்” என்றேன். ஆனால், அவர் மறுத்து “இது சாத்தியமற்றது என்று கூறினார்” என்கிறார் நூர். இந்த சிரமங்களுக்கு மத்தியிலும் உயர்கல்வி பெற்று ஆசிரியராக முன்னேற விரும்பியவர், அப்போது அவரது கிராமத்தில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மிகவும் குறைவாக இருந்தனர்.
அவர் “அரபி பேசுவது அறிவை பெறுவதற்கு முதல் படியாக அரசாங்கத்தால் நம்ப வைக்கப்பட்டோம். நம்பாதவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியை படிக்க ஆரம்பித்தபோது, தாய் மொழியின் மகத்துவம் புரிந்தது. காரணம், ஆங்கிலம் புதிய மொழியாகப் போனது. ஏற்கெனவே தாய்மொழி மறந்துபோனதால், அரபு மொழியைத் தவிர வேறு மொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாததால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
அப்போதுதான் அவர், அரபியைத் தவிர வேறு எந்த மொழியையும் தாழ்த்தி பேசப்பட்ட “ருதானா” (குரங்குகளின் உளறல்) என்ற பிரபல வார்த்தைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதையும், உண்மையில் மொழிகள் சமமாக இருக்க வேண்டும் என்பதையும், அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதையும் உணர்ந்தார்.
‘மொழியை இழந்தோம் –
அடையாளத்தை இழந்தோம்’
பல ஆண்டுகளாக, தங்கள் மொழியை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்ட பிறகு, நூரின் பல நண்பர்கள் தங்கள் அடையாளத்தினை இழந்ததை பற்றி வருத்தப்படுகின்றனர். கெய்ரோவில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்திருக்கும்போது, அவர் புர் மொழியில் ஒரு காதல் பாடலை பற்றி என்னிடம் பேசுகிறார், இது கிழக்கு சூடானில் பேசப்படும் பிரதான நியோ-சஹாரன் மொழியாகும், மேலும் அதை மொழிபெயர்க்க முயற்சிக்கிறார். ஆனால் பின்னர் நிறுத்துகிறார். அவர் உணர்கிறார், பாடலின் சாரத்து மொழிபெயர்ப்பில் முழுமையாக இழக்கப்படுகிறது, மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்க்கலாம், ஆனால் பொருள் அதே இருக்காது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மொழியை பேசுபவர்களால் மட்டுமே உணரப்படமுடியும். அரபியில் அது அவ்வளவு காதல் மயமாக இருக்காது.
பத்வி போன்ற நிபுணர்கள், 2003 முதல் சூடானில் மோதல் முரண்பாடு அதிகரிக்க காரணமாக சூடானின் பன்மைக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்பது ஒன்றாக இருந்தது என்கிறார்கள். எங்களது மண்ணின் கலாச்சாரம் அழிந்துபோனதால் தனிமனித வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் போனது. இதனால் சமூகங்களில் பகைமை வளர்ந்தது.
“ஒரு நபர் தன்னை கலாச்சாரரீதியாக உள்ள அரசு பதவிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக உணர வில்லை என்றால், மெல்ல மெல்ல மக்களின் உரிமைகள் காணாமல் போகிறது” என்கிறார் மேலும் சமூகப் பகைமை ராணுவம் முதலான அரச அமைப்புகளில் எதிரொலிக்கத் துவங்குகிறது. இதனால் ராணுவத்தில் குழுக்கள் ஏற்பட்டு அவர்களுக்கு மோதல் உருவாகிறது.
அல்-பஷீரின் அரசாங்கம் சூடானில் உள்ள மண்ணின் மொழிகளைக் கற்றுக்கொடுக்க முயன்றவர்களை போராளிகள் என்று குற்றம் சாட்டி, பலர் வழக்குத் தொடுக்கப்பட்டாலும், முஹம்மது யூசுஃப் போன்றவர்கள், ஒரு 30 வயது சூடானிய புலம்பெயர்ந்தவர், சூடானின் தலைநகர் கார்தூமில் ஒரு மய்யத்தில் இந்த மொழியை கற்றுக்கொண்டார். 2003-இல் டார்ஃபூரில் போர் நடந்த பிறகு, மக்கள் “ஒரு குறிப்பிட்ட மொழியின் ஆதிக்கத்திற்கு எதிராக” போராட தயாராக இருந்தனர் என்று யூசுஃப் கூறுகிறார்.
நார்த் டகோடா பல்கலைக்கழகம்
நார்த் டகோடா பல்கலைக்கழகத்தின் கெரி மே கார்பெட்டின் முந்தைய ஆய்வுகளில், டார்பூரில் நகரில்; ஏற்பட்ட மோதல் ஒரு திருப்புமுனை மக்கள் தங்கள் தாய்மொழி அழிவதைப் பற்றியும் அதனைப் பாதுகாக்கும் முடிவில் இறங்கிவிட்டனர். தாய்மொழியின் அழிப்பை அரசு முன்னெடுக்கிறது என்று உணர்ந்த பிறகு அவர்களது போராட்ட குணம் வெளிப்பட்டது.
பேராசிரியர் கார்ப்ட் மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர் ஒருவரை நேர்கானல் செய்தபோது “புர் மக்கள் தற்போது தங்கள் மொழியை [முன்னரை விட அதிகமாக] அறிவியல் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக கற்றுகொண்டு வருகின்றார்கள் இதனை ஒழிக்க அரசு முயல்கிறது.
இதனால் அரசுக்கும் மக்களுக்குமிடையே மோதல் ஏற்படுகிறது. மக்களுக்கு தங்கள் உரிமைகளையும் “அவர்களது கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் மதிப்பை புரிந்துகொள்ள டார்பூர் மோதல் முக்கிய திருப்பு முனையாக இருக்கும்” என்றார்.
2019-இல் கெய்ரோவுக்கு வந்தவுடன், ஆங்கில மொழி மற்றும் புவியியலில் பட்டம் பெற்ற யூசுஃப், சூடானிய அறிவுஜீவிகளை சந்தித்து, புர் மொழி பேசுபவர்களை ஒருங்கிணைத்து குழு ஒன்றைத் துவங்கி மொழியை மீண்டும் மீட்டெடுக்க தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்அமைப்பை உருவாக்கினார்
அதில் சூடானிய மண்ணின் மொழி பேசும் பெரியவர்களிடமிருந்து, அவர்கள் சமுதாயத்தின் உறுப்பினர்களுக்கு ‘புர்’ மொழியை கற்றுக்கொடுக்கும் மூன்று ஆண்டு பாடத்திட்டத்தை தொடங்கினர்.
‘புர்’ மொழி பேசும் மக்களின் வரலாற்றை பெருமையுடன் பேசுகிறார், அவர்கள் தங்கள் சொந்த நாட்டை 1916 வரை கொண்டிருந்தனர். டார்பூரின் கடைசி சுல்தான் அலி தினார் இறந்தபோது, அந்த பகுதி இணைக்கப்பட்டு சூடானின் ஒரு பகுதியாக ஆனது. அதன் பிறகு அந்த மண்ணின் செல்வம், மொழி, கலாச்சாரம் அனைத்தும் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே வந்தது
குழந்தைகளுக்கு தாய்மொழியில்
பெயர் சூட்டக்கூடாதாம்
சூடான் போன்ற மிகவும் பல்வகைக் கலாச்சாரம் கொண்ட நாட்டில், கூட்டாச்சி முறை மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இது உள்ளூர் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளை பாதுகாக்க உதவியிருக்கும். ஆனால், சூடான் அரசு நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை நிர்வகிக்க தோல்வியடைந்து, சூடானில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்கும் விதமாக அரபி பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டிய பெயர் தேர்வை, அது பெற்றோர்கள் அல்லது உறவினர்களை மட்டுமே பொறுத்த விஷயமாக இருக்க வேண்டியது என்றாலும், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி ஆகும்.
அரபி பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்படி “மறைமுகமாக குறிப்பிட்ட கொள்கைகளை அமுல் படுத்தவும், ஆதரவு தரவும்” பயன்படுத்தப்பட்டது.
பிப்ரவரி 21 அன்று கொண்டாடப்படும் உலகத் தாய்மொழி நாளை கொண்டாடி, அய்.நா. சூடானின் ஒருங்கிணைந்த மாற்று உதவி பணியகம் பதிவிட்டது, “சூடானில் 123 இனப்பிரிவினர்களால் 160 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், இவற்றில் ஏறக்குறைய 100 மொழிகளை 10,000 க்கும் குறைவான மக்கள் பேசுகிறார்கள், இதனால் இவை அழிவின் ஆபத்தை எதிர்கொள்கின்றன.”
சூடான் அரசு பல்வேறு குழுக்களைச் சமாதானப்படுத்த மத அடிப்படையிலான ஒரு பெரிய அமைப்பை உருவாக்கி அதனை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்பை முன்னிறுத்தியது. அந்த அமைப்போ சமூகத்தினரிரையே கலாச்சாரப் புறக்கணிப்பை தூண்டிவிட்டு ஏற்றத்தாழ்வுகளைக் கற்றுக்கொடுக்க அங்கு ஒற்றுயாக வாழ்ந்த சமூகத்திற்குள்ளேயே மோதல்கள் ஏற்படக் காரணமாக இருந்துவிட்டது.
2020 சூடான் அமைதிக்கான ஜூபா ஒப்பந்தம் “நூபியன் மொழியை அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது” இந்த நூபியான் மொழி மத அமைப்பினரால் மக்களை சமாதானப்படுத்த பரிந்துரை செய்தமொழி ஆகும். எனினும் நூபியன் மொழி அந்த பகுதியில் உள்ள செல்வந்தர்களும் பெரு நில உரிமையாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி ஆகும்.
இத்தகைய மாற்றங்களுக்கு மத்தியிலும், மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று நிபுணர் பத்வி நம்புகிறார். ஆனால், யூசுஃப் அதை எதிர்க்கிறார் மற்றும் மாற்றம் மெதுவாக நடைபெற்று வருகிறது என்று நினைக்கிறார். பிறகு அவர் கூறுகிறார், சூடானில் பல பாடகர்கள் இப்போது புர் மொழியின் பெருமை பற்றி பாடுகிறார்கள். சமூக ஊடகங்கள் விழிப்புணர்வை அதிகரிக்க உதவியது. மேலும், புர் மொழி பேசுபவர்கள் சேர்ந்தவர்கள் தங்களுக்கு அரசில் உயர் பதவி வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத்துவங்கி உள்ளனர்.
தனித்துவ அடையாளத்துடன்
வாழ போராட்டம்
தங்கள் குழந்தைகளுக்கு புர் மொழியில் பெயர் வைக்கத் துவங்கி உள்ளனர். இத்தகைய காரணங்களால், இளைய தலைமுறைகள் உண்மையில் தாங்கள் மண்ணின் மைந்தர்கள் என்று உணர்கின்றனர். அவர்கள் இனி தங்கள் மொழி பேசுவதை யாராவது இழிவாக பேசுபவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டியதில்லை, இனி நாங்கள் ‘புர்’ மொழி பேசும் இனத்தவர்கள் என்று அடையாளப்படுத்தி பெருமை கொள்ளலாம்.
இன்று, 2 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிர்ப்பலி கொடுத்த ஒரு உள்நாட்டுப் போருடன் சூடானை முன்னேற்ற மிகவும் கடினமாக உள்ளது. இந்த போர் தேசிய ராணுவம் மற்றும் சமூகத்திற்குள் உள்ள ஆயுதப்படைக் குழுக்களுக்குமிடையே இடையிலான அதிகாரப் போராட்டமாக பொதுவாக காட்டப்படுகிறது.
ஆனால், இது தங்களின் மொழி இன கலாச்சார உரிமைகளை மீட்க மண்ணின் மைந்தர்களின் போராட்டம். ஸையத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹாம்டி எ. ஹஸன் கூறுவது போல்: “சூடானின் வரலாற்றை ஆழமாக புரிந்து கொள்ளவேண்டும் அங்கு நடப்பது மொழியைப் சமூகத்தைப் தங்களின் கலாச்சரத்தை பாதுகாக்க நடக்கும் போராட்டம் ஆகும்.
சூடான் மக்கள் தங்கள் மண்ணின் தனித்துவ அடையாளத்துடன் வாழ போராட்டிகொண்டு இருக்கின்றனர்.
நிபுணர் பத்வியின் கருத்துப்படி, 2003-இல் டார்பூரில் நடந்த போருக்கு பிறகு மொழி மற்றும் அடையாளத்தின் மீதான பார்வைகள் மாறி வருகிறது. தற்போதைய சூடானின் பிரிவினைக்கு பிறகு மொழி வழி மாகாணங்கள் உருவாகவேண்டிய நிலை வேகமெடுத்துள்ளது.
சூடானில் மொழிச் சிக்கல் முடியும் வரை அங்கு போர் முடிவடையும் சாத்தியம் இல்லை, சமூகங்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப் பட்டது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்களோ அன்று சூடானில் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வரும்.
December 2, 2024 லிம்மா சுஹக் என்ற மொழியியல் ஆய்வு மேற்கொள்ளும் மாணவி சூடானின் ஏன் தொடர் உள்நாட்டுப் போர் நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து சான்றுகளோடு பிரென்சு மொழியில் எழுதிய “La lutte du Soudan pour préserver les langues autochtones” (தாய்மொழிகளைப் பாதுகாக்க சூடானின் போராட்டம்) என்ற ஆய்வுக்கட்டுரையின் தமிழாக்கம்.