நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள் – ஒரு நார் போன்றவர்கள் – எல்லோரையும் இணைப்பவர்கள்; கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் பணி!
இந்தக் கூட்டணிக்குக் கவசம் போன்று இருப்பவர்கள் நாங்கள்; எதிரிகள் அம்பு எய்தினால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் எங்களுடைய வேலை!
சிதம்பரம், பிப்.21 நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். நாங்கள் ஒரு நார் போன்றவர்கள். எல்லோரையும் இணைப்பவர்கள்; மற்ற கட்சிகளாவது, கூட்டணியில் எங்களுக்கு எத்தனை இடம்? என்று கேட்பார்கள். எங்களுக்கு அந்த வேலையும் கிடையாது. இவர்களை யெல்லாம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் எங்களுடைய வேலை. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் வேலை. இந்தக் கூட்டணிக்குக் கவசம் போன்று இருப்பவர்கள் நாங்கள். எதிரிகள் அம்பு எய்தினால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் எங்களுடைய வேலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
கடந்த 15.2.2025 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கான அடையாளம்!
ஆக, எந்த சாயாவும் இல்லாத ஒரே ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான் – பெரியார் மண்தான். இதுதான் அமைதிப் பூங்கா என்பதற்கு அடையாளம்.
ஒன்று, பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. அதனால், இந்தியா முழுவதும் கலவரம் – ரத்த ஆறு ஓடுகிறது.
ஆனால், ஒரே ஒரு மாநிலத்தில், எந்தவிதமான ஒரு சிறு சிறு சலசலப்புக்கூட இல்லாமல், அத்துணை பேரும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹிந்துவா? முஸ்லிமா? இந்த மதமா? அந்த மதமா? என்றெல்லாம் பாகுபாடில்லாமல் கைகோர்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்தியாவின், காஸ்மா பாலிட்டன் பகுதி என்று சொல்லக்கூடிய மகாராட்டிராவின் தலைநகரம் பம்பாய். அன்றைய பம்பாய், இன்றைய மும்பை.
அந்த பம்பாயில்கூட கலவரங்கள் வெடித்து, பல பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன. ஆனால், தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்துகொண்டிருந்தது.
‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை!
அப்பொழுது ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு செய்தியாளர் அழகாக ஒரு கட்டுரை எழுதினார்.
நம்முடைய காவல்துறையை, மற்ற மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள், தமிழ்நாட்டிலிருந்து. நாடு முழுவதும் அமைதியை நிலை நாட்டுவதற்காக காவல்துறை சென்றது. அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா முதல மைச்சராக இருந்தார்.
மூல காரணம் தந்தை பெரியார்; திராவிட இயக்கம்!
அந்தக் கட்டுரையை எழுதியவர், ‘‘இது வெறும் ஆட்சியைப் பொறுத்ததல்ல; அதற்கு மூல கார ணம் தந்தை பெரியார்; திராவிட இயக்கம். எனவே, மதவெறியாக தமிழ்நாட்டை ஆக்கியது கிடை யாது. அப்படி ஆக்கவும் முடியவில்லை. அதன் காரண மாகத்தான், நம்முடைய காவல்துறையை மற்ற மாநி லங்களுக்கு அனுப்புகிறார்கள்” என்று பதிவு செய்தார்.
அன்றைக்கும், என்றைக்கும் தமிழ்நாடு அமைதிப்பூங்கா.
அந்த அமைதியைக் கெடுப்பதற்காகத்தான், ஒரு கிறுக்கனை, கூலியைப் பிடித்து, ‘‘பெரியாரைப்பற்றி கொச்சைப்படுத்து, பெரியார் பிம்பத்தை உடைத்துக் காட்டு” என்று சொல்லி வருகிறார்கள். அதனால்தான், இளைஞர்கள் எல்லாம், பெரியார் பக்கம் வருகிறார்கள்.
கோவிலில் இருக்கின்ற அர்ச்சகர், ‘‘பெரியார் வாழ்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் மணி அடிக்கிறார்!
விபூதி பூசுகிறவராக இருந்தாலும், நாமம் போட்ட வராக இருந்தாலும், கடவுள் மறுப்பை ஏற்காதவர்களாக இருக்கலாம். ஆனால், சமூகத்தினுடைய பலன் – அவருடைய பிள்ளை படித்திருக்கிறார், உத்தியோ கத்திற்குப் போயிருக்கிறார் என்றால், அதற்குப் பெரியார்தான் காரணம் என்று சொல்லக்கூடிய அள விற்கு இருக்கிறாரே!
இன்றைக்குக் கடவுளுக்கு மணி அடிக்கின்ற கோவிலில் இருக்கின்ற அர்ச்சகர், ‘‘பெரியார் வாழ்க’’ என்று சொல்லிவிட்டுத்தான் மணி அடிக்கிறார்.
ஏனென்றால், அவரை அர்ச்சகராக்கியதே பெரியார்தான்!
இன்றைக்கு எவ்வளவு பெரிய சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆகவே, ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையிலும் பெரியாரால் பயன்பட்டு இருக்கிறார்கள். அவரவர்களுடைய கோணம் வேறு; அவரவர்களுடைய பார்வை வேறு; அவரவர்களுடைய பயன் வேறு.
ஆகவே, இங்கே பெரியார் பிம்பத்தை உடைப்பேன் என்று யாராவது சொல்கிறார்கள் என்றால், கிறுக்கர்களை, கூலிகளை, கூலிப் பட்டாளங்களை, வாடகை ஒலிபெருக்கிகளை குத்தகைதாரர்கள் அனுப்புகிறார்கள் என்று சொன்னால், அதற்கு உள்நோக்கம் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அடித்தளம்தான் அது.
நம்முடைய சமுதாயத்திலிருந்தே நம்மாட்களைப் பிடிப்பார்கள்!
ஆர்.எஸ்.எஸினுடைய கர்த்தாக்கள் இங்கே சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே பலரை தயார் செய்தார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரையில். கடைசி ஆள், நம்முடைய சமுதாயத்திலிருந்து அர்ஜுன் சம்பத் என்ற ஒரு ஆளை தயார் செய்தார்கள்.
‘‘பிராமணர்களைக் காப்போம்’’ என்று கொடிபிடித்து வந்தார் அவர்களுக்காக. என்னவோ அவர்களுக்கு ஆபத்து வந்தது போன்று. ஒரு ஆபத்தும் அவர்களுக்குக் கிடையாது.
காக்கப்படவேண்டியவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்
காக்கப்படவேண்டியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்
காக்கப்படவேண்டியவர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய பழங்குடி மக்கள்.
நிலைமை இப்படி இருக்கும்போது, பாதுகாப்பாக இருக்கின்றவர்கள் ‘‘எனக்கு ஆபத்து, எனக்கு ஆபத்து’’ என்று சொன்னால், அது மிகப்பெரிய கேலிக் கூத்தாகும்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஏன் கூலி களை அனுப்புகிறார்கள். இதனை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதனைப் புரிந்து கொண்டவர்கள்தான் பெரியாருடைய தொண்டர்களாகிய நாங்கள்.
இவ்வளவு பேச வைத்தோமே, கலவரம் நடந்ததா? பெரியாரையா இப்படி பேசினார்கள் என்றவுடன், அடிதடி ரகளை ஏற்படும் என்று நினைத்தார்கள். அதன் காரணமாக சட்டம் ஒழுங்கு குலைந்தது என்று சொல்லலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், நடந்தது என்ன?
இது என்ன குஜராத்தா? இது தமிழ் மண்ணாயிற்றே, அமைதிப் பூங்காவாயிற்றே!
பெரியாரைப்பற்றி பேசினாரே, அதனால் எந்த ஊரில் கலவரம் நடந்தது? என்று கேட்கிறார்கள்.
பைத்தியக்காரன் என்று எல்லோரும் அவரை ஒதுக்கிவிட்டார்கள்!
ஒரு இடத்தில்கூட கலவரம் நடைபெறவில்லை. அவரை சீண்டுவாரில்லை. அது வாடகை ஒலிபெருக்கி என்று எல்லோருக்கும் தெரியும். பைத்தியக்காரன் என்று எல்லோரும் அவரை ஒதுக்கிவிட்டார்கள்.
இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கவில்லை; நீங்கள் நில்லுங்கள் என்று சொல்லி, பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாக்களித்தார்களே அவர்களுக்கு, அதனால் என்ன நடந்தது?
ஈரோட்டில், கட்டிய டெபாசிட் வாங்கவில்லை என்பதுதான் மிச்சம்.
கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோன்று, வாக்குகளை கொஞ்சம் அதிகமாகப் பெற்றிருக்கின்றோமே என்று மார்தட்டுகிறார்கள்.
உனக்குக் கூலி கொடுக்கின்றவர்கள் சில பேர், வாக்குகள் மூலம் கொடுத்திருக்கிறார்கள்!
எப்படி உங்களுக்கு வாக்கு அதிகமாயிற்று தெரியுமா?
உனக்குக் கூலி கொடுக்கின்றவர்கள் சில பேர், வாக்குகள் மூலம் கொடுத்திருக்கிறார்கள். அது ஒன்றும் முக்கியமில்லை. அதனால், எங்களுக்கு எந்தக் கவலையு மில்லை.
தேர்தலில் நிற்பதற்கு சிலர் தயாராக இல்லை. நின்றவர்களின் நிலையும் உங்களுக்கு என்னவென்று தெரியும்.
ஆனால், அதேநேரத்தில், கலவரம் ஏற்படவில்லையே, அடுத்து என்ன செய்வது என்று நினைத்தார்கள்.
இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!
ஏனென்றால், தமிழ்நாட்டில், தேர்தல் மூலமாக இந்த ஆட்சியை அகற்ற முடியில்லை. இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி.
அது இவ்வளவு நிலை பெற்று இருப்பதற்குக் காரணம் என்னவென்றால், அசைக்க முடியாத அஸ்திவாரத்தோடு இருப்பதற்கு என்ன காரணம் என்றால், இந்தக் கூட்டணிதான்.
இந்தக் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். இது பதவிக்கான கூட்டணி அல்ல.
இன்னும் சில பைத்தியக்காரர்களுக்குப் புரியவில்லை. நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள். நாங்கள் ஒரு நார் போன்றவர்கள். எல்லோரையும் இணைப்பவர்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியடைவோம்.
இந்தக் கூட்டணிக்குக் கவசம் போன்று இருப்பவர்கள் நாங்கள்!
மற்ற கட்சிகளாவது, கூட்டணியில் எங்களுக்கு எத்தனை இடம்? என்று கேட்பார்கள். எங்களுக்கு அந்த வேலையும் கிடையாது. இவர்களையெல்லாம் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் எங்களுடைய வேலை. இவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் வேலை. இந்தக் கூட்டணிக்குக் கவசம் போன்று இருப்பவர்கள் நாங்கள். எதிரிகள் அம்பு எய்தினால், அதனை ஏற்றுக்கொள்வதுதான் எங்களுடைய வேலை.
எங்களுக்கு என்ன பெருமை தெரியுமா?
மற்ற கட்சிக்காரர்கள் எல்லாம் எண்ணிக்கையை சொல்ல முடியும். ஆனால், எங்களுக்கு எல்லா இடமும் கூட்டுத் தொகைதான்.
வெற்றி வாய்ப்புகளை உருவாக்கப் பாடுபடுகிறவர்கள்தான் நாங்கள்!
அவ்வளவு பேரும் எங்கள் தோழர்கள்; அவ்வளவு பேரும் எங்களுடைய உறவுகள். வெற்றி வாய்ப்புகளை உருவாக்கப் பாடுபடுகிறவர்கள்தான் நாங்கள்.
இந்தக் கொள்கைக் கூட்டணியை யாராலும் அசைக்க முடியவில்லையே! இதுபோன்று வடநாட்டில் உண்டா? இந்தியா கூட்டணி உருவான நாட்டின் தலைநகரான டில்லியில்கூட இன்றைக்கு இல்லையே!
செங்கல்லைத் தூக்கிக் கொண்டு கரசேவைக்குப் போனவர்கள் அவர்கள்!
இங்கே கூட்டணியை அசைக்க முடியவில்லை என்றவுடன், செங்கல்லையாவது அசைக்க முடியுமா? என்று பார்க்கிறார்கள்.
கூட்டணியையே அசைக்க முடியவில்லை என்றால், செங்கல்லை அசைக்க முடியுமா? அவர்களால்.
செங்கல் புத்தி அவர்களுக்கு வந்ததற்குக் காரணமே, செங்கல்லைத் தூக்கிக் கொண்டுதான் கரசேவைக்குப் போனார்கள்.
ஆனால், அந்த செங்கல் எங்களுக்கு எப்படி பயன்படும் தெரியுமா?
செங்கல்லைக் காட்டி ஆட்சியை அமைத்துவிட்டார்கள் தமிழ்நாட்டில்!
உதயநிதி என்கிற ஓர் இளைஞன். அவர்தான் இன்றைக்குத் துணை முதலமைச்சர். அவர்தான், அன்றைக்கு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு செங்கல்லை காட்டி, தி.மு.க. ஆட்சி வரக்கூடிய அளவிற்குச் செய்தார்.
‘‘செங்கல்லை அகற்றுவேன்’’ என்று நீ சொல்கிறாய்; நீங்கள் கட்டாத மருத்துவமனையைக் காட்டி – செங்கல்லைக் காட்டி ஆட்சியை அமைத்துவிட்டார்கள் தமிழ்நாட்டில். இதுதான் திராவிடத்தினுடைய சிறப்பு.
நான், செங்கல்லை அசைக்கிறேன், அசைக்கிறேன் என்று சொல்வது எதைக் காட்டுகிறது? அவர்களுடைய உளறலைத்தான் காட்டுகிறது.
எப்பொழுதுமே வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பவர்கள் நானும், இந்த அணியில் இருப்பவர்களும்.
என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், ‘‘நான் பிடுங்கப் போகிறேன்” என்கிறார்.
என்னய்யா இது அசிங்கமான வார்த்தையை சொல்றாரே? என்று கேட்டால், ‘‘நான் வேரோடு பிடுங்கப் போகிறேன்’’ என்கிறார்.
எங்களுடைய அமைப்பு கடற்பாறையாகும்!
நீ வேரோடு பிடுங்கு; முதலில் உனக்கு நிற்பதற்குத் தகுதி உண்டா? உன்னுடைய கைகளில் கடப்பாரை இருக்கலாம்; ஆனால், அந்தக் கடப்பாரை வடநாட்டில் வேண்டுமானால் பயன்படலாமே தவிர, இங்கே உள்ள கடற்பாறைக்குப் பயன்படாது. இந்த இயக்கம் கடற்பாறையாகும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு அஸ்திவாரமாக இருக்கக்கூடிய கூட்டணி இந்தக் கூட்டணி. எங்களுடைய அமைப்பு கடற்பாறை யாகும்.
ஒவ்வொரு குதிரையின்மீதும் பந்தயம் கட்டுகிறார்கள். எந்தக் குதிரையும் வெற்றி பெறவில்லை. உங்களுடைய குதிரைகள் ஜட்கா குதிரை, பொய்க்கால் குதிரையாகும். ரேஸ் குதிரையோடு போட்டி போட முடியாது.
தமிழ்நாடு ஆளுநரை நோக்கி உச்சநீதிமன்றத்தின் 12 கேள்விகள்!
தமிழ்நாட்டில் ஒரு பக்கம் ஓர் ஆளுநர். இப்போது உச்சநீதிமன்றத்தில் அந்த ஆளுநரிடம் 12 கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அந்த 12 கேள்விகளுக்கும் நியாய மாகவோ, அறிவுப்பூர்வமாகவோ, சட்டப்பூர்வமாகவோ பதில் சொல்ல முடியாது. தீர்ப்பு எப்படி வருகின்றது என்று பார்ப்போம். ஏனென்றால், நம்முடைய நாட்டில் நீதிமன்றங்கள், எந்த மாதிரியான தீர்ப்பு கொடுக்கும் என்று இறுதிவரையில் சொல்ல முடியாது.
நல்லவிதமாக தீர்ப்பு எழுதுகிற நீதிபதிகளும் பலர் இருக்கிறார்கள்!
வழக்கு விசாரணையின்போது மிகக் கடுமையான கேள்விகளையெல்லாம் கேட்பார்கள். ஆனால், தீர்ப்புகள் மட்டும் வேறுவிதமாக இருக்கும். நல்லவிதமாக தீர்ப்பு எழுதுகிற நீதிபதிகளும் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.
தோழர் பாலகிருஷ்ணன், ‘‘திருப்பரங்குன்றம் மலையில் ஒன்றுமில்லாத பிரச்சினையை பெரிதாக்கலாம் என்று நினைத்தார்கள்’’ என்று குறிப்பிட்டார்.
பக்தர்களே பாடியிருக்கிறார்களே, ‘‘திருப்பரங் குன்றத்தில் நீ சிரித்தால், திருத்தணி மலைமீது எதி ரொலிக்கும்” என்று.
அது எதிரொலித்துப் போகட்டும்; ஆனால், கலகத்தை நீ செய்தால், அது தமிழ்நாட்டில் எதிரொலிக்குமா? என்றால், நிச்சயமாக எதிரொலிக்காது. இருக்கின்ற கொஞ்சம் ஓட்டுகளும் போகும்.
திருப்பரங்குன்றத்தை மய்யமாகச் சொல்லி, கலவரத்தை நடத்தலாம் என்று நினைத்தார்கள்!
பெரியார் பிம்பத்தை உடைக்கிறோம் என்று சொல்லி ஒரு கூலியைப் பிடித்து, ஒரு பைத்தி யத்தைப் பிடித்து அல்லது வேஷத்திற்கான பைத்தியத்தைப் பிடித்து, விளம்பரம் வேண்டும் என்பதற்காக – அவருடைய பலகீனத்தை மறைக்கவேண்டும் என்கிற கட்டாயத்தினால், திருப்பரங்குன்றத்தை மய்யமாகச் சொல்லி, கலவரத்தை நடத்தலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் சொல்லுகின்ற காரணம் நம்பக் கூடிய காரணமா?
திருப்பரங்குன்றத்தில் மசூதியும் இருக்கிறது, கோவிலும் இருக்கிறது. எல்லா ஊர்களிலும் அப்படித்தான் இருக்கிறது. இன்னுங்கேட்டால், திராவிடர் கழகத்துக்காரர்களாகிய நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள். ஆனால், இதோ இங்கே சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறோமே, அதனால் யாருக்காவது ஆபத்து உண்டா? இதுபோன்று மற்றவர்களால் சொல்ல முடியுமா?
கோவிலுக்கு முன்பு தானே திராவிடர் கழகக் கூட்டம் நடைபெறுகிறது. செங்கழுநீர் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றுதானே நோட்டீசிலும் அச்சடித்திருக்கின்றோம்.
கிழக்கு கோபுர வாசலில்தானே திராவிடர் கழகக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. நாங்கள் எல்லோரும் அந்தப்
பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கின்றோமே!
யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே!
சிதம்பரம் கோவிலில் நடராஜர் அங்கே காலைத் தூக்கி நின்றவர், காலைத் தூக்கிக் கொண்டே நிற்கிறார். மைக்கைப் பிடித்த நாங்கள், மைக்கைப் பிடித்துப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அதனால், யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே!
(தொடரும்)