மதுரை, பிப்.21 மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சரின் ஆணைப்படி புது மினி பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடைபெறுகிறது. கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே மினி பேருந்து இயக்கம் என்ற சிறப்பான திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கு மினி பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். போக்குவரத்து துறை லாப நோக்கம் அல்லாது சேவை நோக்கத்தில் செயல்படக்கூடிய துறையாகும். அரசு போக்குவரத்து துறையில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. பேருந்து கட்டணத்தை பொறுத்தவரை மற்றும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகவும் குறைவு தான். ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்குவதற்கு கடந்த மாதம் ரூ.300 கோடியும் இந்த மாதம் ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பண பலன்கள் படிப்படியாக வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.