வட மாநிலங்களில் அஷாத் (ஆடி) மாதம் முழுவதும் உத்தரப் பிரதேசம், அரியானா, பீகார், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து நடந்தே அரித்துவார், சென்று அங்கிருந்து கங்கை நீரை ஒரு குடத்தில் பிடித்து மீண்டும் நடந்தே ஊருக்கு வந்து ஊரில் உள்ள சிவன் கோவில்களில் சிவனுக்கு அந்த நீரை ஊற்றுவார்கள். இதற்கு ‘காவட் யாத்ரா’ என்று வடமொழியில் அழைப்பார்கள்.
அத்திப் பழங்கள் உணர்வுகளைத் தூண்டுவதால் தவ நோக்கம் சிதைந்து சிவன் மோஹினியோடு சென்று விட்டார். (அந்த மோஹினி விஷ்ணுவின் அவதாரம் ஆகும்) அந்த மோஹினியால் சிவன் மோகமடைந்ததால் அத்திமரம் சிவனுக்கு உகந்த மரம் அல்ல என்று சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளது. இதன் காரணமாக சாமியார் முதலமைச்சர் உத்தரப்பிரதேசத்தில் பதவி ஏற்றவுடன் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா? காவடிசெல்லும் பாதையில் உள்ள அத்திமரங்களை வெட்டித் தள்ள உத்தரவிட்டார். பின்னர் சிவன் கோவில்களுக்கு அருகில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன, தற்போது மாநிலத்தில் உள்ள கண்ணில் பட்ட அத்திமரங்களை எல்லாம் மாநில நிர்வாகம் வெட்டி வருகிறது.
2017 முதல் 2022 இறுதி வரை பல லட்சம் அத்திமரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இந்த அத்திமரங்கள் சிங்கவால் குரங்கு, ஒருவகை கருங்குருவி, காட்டுப் புறா, மற்றும் சிறியவகை மான் இனங்களின் முக்கிய உணவாகும். இந்த மரங்கள் வெட்டப்பட்ட பிறகு இந்தவகை உயிரினங்கள் கிட்டத்தட்ட அழியும் நிலைக்குச் சென்றுவிட்டன.
முதலில் காவட் செல்லும் பாதைகளில் இறைச்சி கடைகள் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்ட சாமியார் முதலமைச்சர் பின்னர் இந்த ஆடி மாதம் முழுவதுமே மாநிலம் எங்கும் இறைச்சிக் கடைகள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 77 விழுக்காடு மக்கள் இறைச்சி உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் என்று தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து புள்ளி விவர ஆணையம் 2019 ஆம் ஆண்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது காவடி எடுத்துச் செல்லும் நபர்களுக்கு தங்க இடமும் உண்ண உணவும், அரசாங்கமே முகாம்கள் அமைத்து கொடுத்து வருகிறது. இந்தக் காவடி யாத்திரையால் முக்கிய சாலைகளில் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு நடைப் பயணம் செல்பவர்கள் உயிரிழந்த நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளதால், நடைப் பயண நாட்களில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக பொருட்கள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் வாரக்கணக்கில் டில்லி, அரியானா எல்லைகளில் நிற்கின்றன. முக்கியமாக அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விளைபொருட்கள், விவசாயக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை பீகார், மேற்குவங்கம் மட்டுமில்லாமல் வங்கதேசத்திற்கும் கொண்டு செல்ல வேண்டியவை அனைத்தும் அப்படியே தேங்கியுள்ளதால் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு பெரும் இயற்கை மற்றும் பொருளாதார சீரழிவுகளை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கை குறித்து சாமியார் முதலமைச்சர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் கோரக்பூர் மடத்திற்குச் சென்று பூஜை செய்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக காவடி செல்லும் மக்களை ‘த குவிண்ட்’ என்ற பன்னாட்டு ஊடகமும் உள்ளூர் ‘முற்போக்கு சிந்தனையாளர்குழு’ மற்றும் ‘அர்ஜக் சங்க்’ போன்றவை பேட்டி கண்டன.
அதில் கூறப்பட்டவை மிகவும் வியப்பிற்குரியதாக உள்ளது. அதாவது 15 நாள் அரித்துவார் செல்ல, 15 நாள் அங்கிருந்து திரும்ப என்று மாதம் முழுவதையுமே வீணடிக்கும் இந்த நடைப் பயணக் கூட்டத்தில் ஒரு பார்ப்பனர் கூட கிடையாது. உயர்ஜாதியினரும் மிகவும் சொற்பமே, மேலும் நடந்துவருபவர்களில் 20 விழுக்காடு சிறுவர்கள், 78 விழுக்காடு இளைஞர்கள், மிகவும் சொற்ப எண்ணிக்கையில் 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் நடந்து செல்லும் நபர்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மட்டுமே உள்ளனர். சொற்ப எண்ணிக்கையில் உயர்ஜாதியினர் உள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர்கூட பார்ப்பனர் இல்லை.
இதுதொடர்பாக வாரணாசியில் உள்ள ‘ஜலோர் சிவ் பிரதிஷ்டான்’ என்ற அமைப்பினரிடம் கேட்ட போது நாங்கள் பிராமணர்கள்; எங்களுக்குப் பூஜைகளும், மந்திரங்களும் மட்டுமே கடமையாக்கப் பட்டுள்ளன. நடைப் பயணம் செல்வதற்கு எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் யாத்திரை சென்றுவிட்டால் கோவில்களில் பூஜைகள் செய்வது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
பார்ப்பனர்கள் ஏன் ‘காவட் யாத்திரையில்’ கலந்து கொள்ளவில்லை என்பதற்கு ஒரு கதை வைத்துள்ளனர்
துவாபர யுகத்தில் மகாபாரதப் போர் முடிந்த பிறகு சத்திரியர்கள் லட்சக்கணக்கானோர் போரில் இறந்துவிட, காவடி யாத்திரைக் கடமையை முடிக்க பார்ப்பனர்கள் யாத்திரைக்குப் புறப்பட்டனர். அதனால் கோவில்களில் பூஜைகள் நின்று விட்டன. இதுகுறித்து மக்கள் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனராம், உடனே கிருஷ்ணன் கோவில்களில் பூஜைகள் நடக்காமல் இருந்தால் மீண்டும் ஒரு மகாபாரதப் போர் போன்று ஒன்று வந்து மேலும் மக்கள் இன்னலைச் சந்திக்க நேரிடும்; ஆகவே பார்ப்பனர்கள் யாரும் காவட் யாத்திரைக்குச் செல்லக்கூடாது என்றும், யாத்திரைக்குச் செல்ல விரும்பும் பார்ப்பனர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்று மந்திரம் ஓதி அங்கு இருந்து கங்காதேவியைக் கொண்டுவந்து அந்த நீரை சிவனின் தலையில் ஊற்றி, தங்கள் கடமையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.
ஆகவே, துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றிய போது கிருஷ்ணனின் கட்டளைக்கு இணங்க அனைத்துப் பார்ப்பனர்களும் ‘காவட் யாத்திரை’யை நிறுத்திக்கொண்டு பார்ப்பனர் அல்லாதோர் ஒருமாதம் யாத்திரை செல்கின்றனர் என்று எழுதி வைத்துள்ளனர்.
கடின உழைப்பு சிரமங்கள் என்றால், அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கதை கதையாய் கடவுள், மதம், சாத்திரங்களின் பெயர்களால் எழுதி வைத்துக் கொள்வார்கள். எங்காவது தீ மிதிக்கும், அலகு குத்திக் கொள்ளும் பார்ப்பனர்களைப் பார்த்ததுண்டா? அங்கப் பிரதட்சணம் செய்யும் பார்ப்பனப் பெண்களைத் தான் கண்டதுண்டா?
பார்ப்பனர்களின் இந்த தந்திரங்களை நம் மக்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ!