மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம் ஆகி உள்ளது. நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கான மாநில பேரிடர் நிதிக்காக ஒன்றிய அரசின் பங்காக ரூ.944.8 கோடியும் மாநில அரசின் பங்காக ரூ.315.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒரு ரூபாய்கூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறிய பதில் மூலம் இது அம்பலம் ஆகி உள்ளது. (4.12.2024)
தமிழ்நாடு அரசு நிதிப் பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டும்தான் ஒன்றிய அரசு திரும்ப அளிக்கிறது. தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய உரிய நிதிகள் ஒன்றிய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. தமிழ்நாட்டில் இருந்து நேரடி வரி வருவாயாக ரூ.6.23 லட்சம் கோடி அளவிற்கு ஒன்றிய அரசு வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களைபோல் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது. மறைமுக வருவாய் குறித்து ஒன்றிய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. கருநாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா போன்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு குறைவாகத்தான் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. (10.2.2024)
ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவிகிதம் மட்டும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 28 மாநிலங்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வரி பகிர்வாக ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
இதில் 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 31,000 கோடியும், 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு ரூபாய் 7,057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, 10 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 17,000 கோடியும், 9 கோடி மக்கள் தொகை கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு ரூபாய் 13,000 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்களிப்பு என்பது கிட்டத்தட்ட 10 விழுக்காடு ஆகும். ஆனால், ஒன்றிய அரசின் வரி வருவாயில் 4.1 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.079 விழுக்காடு மட்டும் தான் கிடைக்கிறது.
கடந்த ஒன்பதாம் நிதி ஆணையத்தின் காலத்தில் 7.931 விழுக்காடு இருந்தது, இப்போது அது 4.079 விழுக்காடு, அதாவது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. (11.10.2024)
எஸ்.எஸ்.ஏ கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக கடந்த நிதியாண்டில் ரூ.2,121 கோடி நிதி அளித்தது. தற்போது 2024-25ஆம் ஆண்டுக்கான பங்களிப்பாக ரூ.2,152 கோடி நிதியை ஒதுக்கி இருந்தது. ஆனால் ஒன்றிய அரசின் நிபந்தனையை தமிழ்நாடு அரசு ஏற்காததால், தமிழ்நாடு கல்விக்கான நிதி மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதியை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மாற்றி இருக்கிறது. ஒன்றிய அரசின் பி.எம். சிறீ திட்டத்தில் இணைய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்காததால், தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்தால் தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. தற்போது பி.எம். சிறீ திட்டத்தில் இணையாததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. (9.2.2025).
இந்த நிலை நீடித்தால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்ற பொதுக் கருத்து உருவாகி விடும்; கட்சிகளைக் கடந்த கடலாகப் பொங்கி எழுவர். மாணவர்களும் கிளர்ச்சியில் குதித்து விட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பி.ஜே.பி. தனிமைப்படுத்தப்பட்டு, தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு என்ற உணர்வோடு நடந்தால் நல்லது. வரும் 23ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! அற வழியில் ஓங்கி ஒலிப்பீர் தோழர்களே!