மும்மொழிக் கொள்கை என்று கல்வியை அரசியல் ஆக்குவது யார்?
சென்னை, பிப்.21 மும்மொழிக் கொள்கை என்று கல்வியை அரசியல் ஆக்குவது யார்? என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
இன்று (21.2.2025) ‘சன் செய்திகள்’ தொலைக் காட்சிக்குத் தொலைப்பேசிமூலம் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
தமிழ்நாட்டிற்குத் தரப்படவேண்டிய ரூ.2,152 கோடி ரூபாய் கல்வி நிதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்குப் பதில் கடிதம் எழுதியிருக்கிறார்.
கல்வியை அரசியலாக்கவேண்டாம் என்று அக்கடி தத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இதுவரை மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாத ஒன்று வாய்ப்புக்கேடானது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ஜ.க. ஆளாத பல மாநிலங்கள் இந்த மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கி்ன்ற நிலையில், தமிழ்நாடும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் செய்திகள்’ தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர்: மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில், இதனை அரசியலாக்கவேண்டாம் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லியிருக்கிறாரே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
80 ஆண்டுகளுக்குமேலாக நடைபெறும் போராட்டம்!
தமிழர் தலைவர்: அரசியல் ஆக்குவது யார்? முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் அவர்கள்தான் அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்.
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மிக முக்கியமான, உணர்ச்சிப்பூர்வமானதாகும்.
பண்பாட்டு அடிப்படையில் அதை எதிர்த்துத்தான் 80 ஆண்டுகளுக்குமேலாக பல கட்டங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற மிக முக்கியமான, உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும் என்றார் ஆசிரியர் கி.வீரமணி.