வடநாட்டு ரயில் நிலையங்களில் அன்றைக்கு என்ன நிலை என்றால், ‘ஹிந்து சாயா’, ‘முஸ்லிம் சாயா’ என்று கூவுவார்கள்!
எந்த ‘‘சாயா’’வும் இல்லாத ஒரே ஒரு மாநிலம் என்றால், அது தமிழ்நாடுதான்- பெரியார் மண்தான் -இதுதான் அமைதிப் பூங்கா என்பதற்கு அடையாளம்!
சிதம்பரம், பிப்.20 முன்பு வடநாட்டு ரயில் நிலை யங்களில், ரயில் நின்றவுடன், ‘‘சாயா, சாயா’’ என்று சத்தம் போட்டுக்கொண்டே தேநீர் விற்பார்கள். ஆனால், எந்த ‘‘சாயா’’வும் இல்லாத ஒரே ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான் – பெரியார் மண்தான். இதுதான் அமைதிப் பூங்கா என்பதற்கு அடையாளம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழு
தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
கடந்த 15.2.2025 அன்று மாலை சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர்!
மிகுந்த எழுச்சியோடும், மன மகிழ்ச்சியோடும் காலையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொதுக்குழு – ஏறத்தாழ 550 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று மிகச் சிறப்பான வகையில் பல்வேறு கருத்துகளையெல்லாம் எடுத்துரைத்து முடிவு பெற்றது.
நம்மை நாம் மேலும் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்!
இந்த ஆண்டு, தந்தை பெரியார் அவர்களால் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்ற சுயமரி யாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு. அதே காலகட்டத்தில்தான், பொதுவுடைமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் தோற்றுவிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் உருவானது.
அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான ஆண்டு 1925. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி இந்த இயக்கம் அடுத்து எந்தத் திசையில், தந்தை பெரியார் வகுத்த பாதைப்படி செல்ல வேண்டுமோ – அந்தத் திசையிலேயே நம்மை நாம் மேலும் அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிச் சொல்வதற்காக இந்தப் பொதுக்கூட்டம்!
அன்றைக்கு இருந்த கொள்கை எதிரிகள் – இன்றைக்கு இருக்கின்ற கொள்கை எதிரிகள் எப்படியெல்லாம் மாறுபட்டிருக்கின்றனர் என்பதையெல்லாம் திடமாக விளக்கி, 14 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கூடிய இந்த சிதம்பரம் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிகுந்த திராவிடர் கழகப் பொதுக்குழுவையும், அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிச் சொல்வதற்காக இந்தப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தும், கூட்டத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய கழகத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளரும், கொள்கையாளருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், நேரமின்மையால் நான் பேசவில்லை; என்னு டைய கருத்தையும் சேர்த்து நீங்களே விளக்கிவிடுங்கள் என்று எனக்கு வழிவிட்டு, அவர்கள் ஒதுங்கிக் கொண்டார். இதுதான் இந்த இயக்கத்தினுடைய தனிச் சிறப்பு.
பனியையும் பொருட்படுத்தாமல், நம்முடைய பணியை மனதிற்கொண்டு இங்கே வந்திருக்கின்ற சான்றோர்ப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள்!
கழகப் பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இங்கே நண்பர்கள் சொன்னதைப்போல, 14 தீர்மானங்களும் தமிழ்நாட்டினுடைய, இந்திய அரசியலுடைய, இந்திய சமூகநீதியினுடைய, இந்திய பொருளாதாரத்தினுடைய இன்னும் மிக முக்கியமான கூறுபாடுகளைப்பற்றி அலசி ஆராய்ந்து பார்க்கக் கூடியனவாகும்.
நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களுடைய உழைப்பு என்பது இருக்கிறதே, பொதுக்குழுவின் வெற்றிக்கு மிக அடித்தளமாக அமைந்திருக்கக்கூடியதாகும்.
இளைஞர்கள், நடுத்தரவாதிகள் யாராக இருந்தாலும், நேரமின்மை காரணத்தினால், என்னைப் பேச வைத்தி ருக்கிறார்கள்.
ஆக, எங்கள் எல்லோருடைய கருத்தும் ஒரே கருத்துதான். நான் பேசாமல், அவர்கள் பேசினாலும் சரி; அவர்கள் பேசாமல் நான் பேசினாலும் சரி இந்த இயக்கத்திற்கு ஒரே குரல்தான் இருக்கும்.
ஒப்பனைகள் எப்போதுமே வாழ்க்கையில் கடைசிவரையில் நிற்காது!
இன்றைக்குக்கூட சில நண்பர்கள், அமைச்சர் உள்பட பேசினார்கள். அதில், ஒப்பனைகளைப்பற்றி மிக அதிகமாகச் சொன்னார்கள். ஒப்பனைகள் எப்போதுமே வாழ்க்கையில் கடைசிவரையில் நிற்காது. காட்சிப்படுத்தப்படுகின்ற வரையில்தான் ஒப்பனையை அவர்களாலேயே தாங்க முடியும். அதற்குப் பிறகு, அந்த ஒப்பனையை அவர்களே கலைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் கலைக்கவேண்டிய அவசியமில்லை. கலைத்தால்தான் அவர்கள் வீட்டிற்கே வர முடியும். கலைத்தால்தான் மற்ற பணிகளை அவர்களால் செய்ய முடியும்.
ஆனால், உண்மை முகம் எப்போதும் ஒரே முக மாக இருக்கும். ஒப்பனை முகம் வேறுவிதமாக இருக்கும். ஆகவே, அதைப்பற்றி நாம் அதிகமாகக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
ஆனால், ஒப்பனை இறுதிவரையில் இருக்காது. உண்மைதான் இறுதிவரையில் இருக்கும்.
ஏவிவிடப்பட்டவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை
இன்றைக்குக்கூட செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்; எங்களைப் பொறுத்தவரையில், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், ஒரே வார்த்தையில் அதற்குப் பதில் சொன்னோம். ஏனென்றால், அவர்கள் ஏவிவிடப்பட்டவர்கள். அப்படி ஏவிவிடப்பட்டவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒலிபெருக்கியை ஒலிவாங்கி என்று சொல்வார்கள். அந்த ஒலி வாங்கிக்கு ஏதாவது தனித்தன்மை உண்டா? யார் வாடகைக்குக் கேட்கிறார்களோ, அவர்களுக்குக் கொடுப்பார்கள். நாளைக்கு பி.ஜே.பி.க்காரர்கள் கேட்டு கொடுக்கிறார்கள் என்றால், அதற்காக நாம் சண்டை போட முடியுமா?
நேற்று திராவிடர் கழகக் கூட்டத்திற்குக் கொடுத் தீர்கள்; இன்றைக்கு ஏன் பி.ஜே.பி. கூட்டத்திற்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டு, சண்டை போட்டால், அது நியாயமா?
அது அவருடைய தொழில். அந்தத் தொழிலை நடத்தினால்தான், அவருடைய வாழ்வாதாரத்தை நடத்த முடியும்.
ஆகவே, அந்த ஒலிவாங்கியைப்பற்றி நாம் பேச வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பின்னாலே இருக்கின்ற குரலைப்பற்றித்தான் நாம் பேசவேண்டும்.
அதற்குப் பின்னாலே எந்தக் குரல் வருகிறது? யாரால் வருகிறது? யாரால் எழுப்பப்படுகிறது? என்பதுதான் மிகவும் முக்கியம்.
இந்த ஒலி பெருக்கி முன் நான் சத்தமாகப் பேசினால், சத்தமாகக் கேட்கும். மெதுவாக நான் பேசினால், மெதுவாகக் கேட்கும்.
நான் மெதுவாகப் பேசினால், அதிக சத்தமாகக் கேட்குது; நான் சத்தமாகப் பேசினால் மெதுவாகக் கேட்குது? அப்படி கேட்டால், அது ரிப்பேராக உள்ள ஒலிவாங்கி என்று அர்த்தம்.
ஆகவே, அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
பைத்தியங்களுக்குத் தேவை பதில் அல்ல; வைத்தியம்தான்!
சிலரைப்பற்றி, செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள், நாங்கள் பைத்தியங்களுக்குப் பதில் சொல்வதில்லை. பைத்தியங்களுக்குத் தேவை பதில் அல்ல; வைத்தியம்தான் தேவை என்று சொன்னோம்.
எவ்வளவு பெரிய தத்துவங்கள், எவ்வளவு பெரிய அவசியங்கள், எவ்வளவு காலமான தியாகம் இவைப்பற்றியெல்லாம் பேசாமல், இடையில் வந்து போகிறவர்களைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தில்லை.
தோழர்களுக்கு நான் சொல்கிறேன், இன்றைய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவர்களுடைய ஆள், யார்? யார்? என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள்!
மிக முக்கியமான தீர்மானங்களில் சிதம்பரம் கோவில் உள்பட தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றோம். ஆனால், செய்தியாளர் ஒருவர் இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காமல், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறதே ஒன்றிய அரசு. அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டார்.
அது என்ன சர்வதேச விஷயமா? அல்லது தேசியப் பிரச்சினையா? ஒய் பாதுகாப்பினை ஒன்றிய அரசு கொடுத்திருக்கிறது என்றால், அவர்களுடைய ஆள், யார்? யார்? என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
நமக்கு அது தேவையில்லாத விஷயம்.
பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் தெரியும்!
ஆனால், ஒன்றை நன்றாக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்; அதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. அந்த சூட்சமத்தைப் பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் தெரியும். எல்லா கண்ணாடிகளுக்கும் தெரியாது. நுண்ணாடி போன்றது பெரியாரின் கண்ணாடி.
இங்கே உரையாற்றிய சகோதரர் தோழர் பால கிருஷ்ணன் அவர்கள்கூட உரையாற்றும்பொழுது கேட்டார், ‘‘வீரமணி இருக்கிறரே, அவருக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாவது பாதுகாப்புப் போட்டிருக்கிறார்களா?” என்று.
நான்கூட அவரை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு, வேண்டாம் என்றேன்.
மேலிடத்திற்குத் தகவல் சொல்வதற்காகத்தான்!
ஏனென்று கேட்டால், காவல்துறை நமக்கு பாது காப்பு என்று நாமெல்லாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படி பாதுகாப்புப் போடுவது நமக்காக அல்ல; நம்மை உளவு பார்ப்பதற்காக – யார், யார் எத்தனை மணிக்கு வந்தார்கள் என்று மேலிடத்திற்குத் தகவல் சொல்வதற்காகத்தான்.
ஒரு ஆள், நம் பின்னாலேயே தொடர்ந்து வந்தால், அவர்மீது வழக்குப் போடலாம். ஓர் ஆளுக்கு ஏன் பாதுகாப்புப் போடுகிறார்கள் என்று சொன்னால், ‘‘எத்தனை மணிக்குத் தோழர் பாலகிருஷ்ணன் வந்து சந்தித்தார்? எத்தனை மணிக்கு அய்யா அழகிரி வந்தார்? எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்? என்னென்ன பேசினார்கள்?’’ என்பதை மற்றவர்கள்மூலம் தெரிந்துகொள்வதைவிட, அதிகாரப்பூர்வமாகவே பதிவு செய்துவிட்டு, பிறகு அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஒரு சுற்றுச் சுழன்று, சுழலில் சிக்க வைப்பதற்கு எத்தனையோ விஷயங்களுக்கு அதனை ஆயுதமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
எனவேதான், அவரவர் பார்க்கின்ற பார்வையைப் பொறுத்தது. இது முக்கியமல்ல.
இன்றைக்கு நாட்டில் உள்ள பிரச்சினைகள் என்ன வென்று நினைத்துப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு மட்டுமல்ல – என்றைக்கும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான்!
தமிழ்நாடு, அமைதிப் பூங்கா. இந்தக் காலத்தில் மட்டுமல்ல, காந்தியார் அவர்கள் கொல்லப்பட்ட நேரத்தில், கோட்சே என்ற மராத்தி பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட நேரத்தில், அந்த உண்மைகளை மறைத்து, காந்தியாரைக் கொன்றவர் ஓர் இஸ்லாமியர் என்று தவறாக திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
அதன் காரணமாக அவசரப்பட்டு, வாணியம்பாடியில், ஆம்பூரில், திருவண்ணாமலையில், இன்னும் சில இடங்களில் எல்லாம் மதக்கலவரங்கள் உருவாகக்கூடிய சூழல் வந்தது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் ஒழுக்கச் சீலர் ஓமந்தூரார் நம்முடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். திண்டிவனத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது.
கடைசியில் வடலூரில்தான் அவர் சன்மார்க்க சங்க நெறிகளிலேயே தன் வாழ்க்கையை அமைத்து, இறுதிவரையில் இருந்தார்.
அப்படிப்பட்ட ஓமந்தூரார் என்ன செய்தார் என்று சொன்னால், தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக, எல்லோருக்கும் அப்பாற்பட்ட ஒரு தலைவராக இருப்பவர் யார் என்று தேடினார்கள். அது தந்தை பெரியார்தான் என்பதை அவர் உணர்ந்தார், கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும்.
அய்யாவிடத்தில், காந்தியார் கொல்லப்பட்ட பிறகு, முதன்முறையாக, ‘‘அகில இந்திய திருச்சி வானொலி மூலமாக மக்களுக்கு, நீங்கள் ஓர் வேண்டுகோள் விடுத்தால், உண்மையை நீங்கள் பரப்பினால், அதனை நாங்கள் செய்ய முடியாது; நீங்கள் சொன்னால், தமிழ்நாட்டு மக்கள் அமைதியாக இருப்பார்கள்; தமிழ்நாடு அமளிக்காடாக ஆகாது; மதவெறிக் கலவரங்கள் வராது’’ என்று ஓமந்தூரார் சொன்னார்.
மக்களுக்குத் தந்தை பெரியாரின் வேண்டுகோள்!
தந்தை பெரியார், மிக அற்புதமான ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
‘‘அமைதிக் காக்கவேண்டும். காந்தியாருடைய மறைவு என்பது மிகப்பெரிய சோகம், இழப்பு தான். இந்த நேரத்தில்தான், மக்களாகிய நீங்கள் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். மதவெறிக்கு இடமில்லாமல், நடந்து கொள்ளவேண்டும்’’ என்றார்.
அடுத்த சில நாள்களில் ஓர் உண்மை வெளியில் வந்தது.
அந்த உண்மைதான், காந்தியாரைச் சுட்டுக்கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற, மராத்திய பார்ப்பனர்; அதுவும் சித்பவன் பார்ப்பனர் என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர் என்ற உண்மை வெளிவந்தது.
பல பேருக்கு இந்த வரலாறு தெரியாது. அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ஏன்? பி.ஜே.பி.யில் இருக்கின்ற அரைவேக்காடுகளுக்கே இந்த வரலாறு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மராத்திய பார்ப்பனர் காந்தியாரைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்தவுடன், மராட்டியத்தில் பார்ப்பனர்கள் எங்கெங்கே இருந்தார்களோ, அங்கெல்லாம் பெருங்கலவரம் ஏற்பட்டது. பார்ப்பனர்கள் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. அப்பொழுது மொரார்ஜி தேசாய் மராட்டியத்தினுடைய உள்துறை அமைச்சராக இருந்தார். அவருடைய பொறுப்பில்தான் சட்டம் ஒழுங்கு இருந்தது. அவர், ஏற்பட்ட கலவரங்களை அடக்குவதற்காக மிகவும் முயற்சி செய்தார்.
மொரார்ஜி தேசாயின் ‘தன் வரலாறு’ புத்தகத்தில்….
இதை நான் ஆதாரத்தோடுதான் சொல்கிறேன். மொரார்ஜி தேசாய் எழுதிய ‘Autobiography’ என்று சொல்லக்கூடிய ‘‘தன் வரலாறு’’ புத்தகத்தில் இதனைப் பதிவு செய்திருக்கிறார்.
அதேநேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் இருந்த இந்தத் தமிழ் மண்ணில், ‘‘காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர் இஸ்லாமியர் அல்ல; ஒரு மராத்தி பார்ப்பனர். அதற்காக நீங்கள் பார்ப்பனர்கள்மீது யாரும் தனிப்பட்ட முறையில் ஆத்திரப்படுவதோ, கோபப்படுவதோ கூடாது’’ என்றார்.
பார்ப்பனியத் தத்துவத்தை எதிர்க்கின்ற தலைவர், இதுதான் பார்ப்பனர்களை அழிப்பதற்கான சரியான சந்தர்ப்பம் என்று அவர் நினைக்கவில்லை. ‘‘ஒரு துப்பாக்கி ஒருவரைச் சுட்டால், அந்தத் துப்பாக்கியை தண்டிப்பீர்களா?’’ என்று கேட்டார்.
துப்பாக்கியைப் பிடித்த கை, யாருடைய கைகள் என்று பார்க்கவேண்டும்.
ஆகவேதான், மதவெறியை ஒழிக்கவேண்டும்; இதற்குக் காரணம் மதவெறிதான். எனவே, கருவிகளைத் தண்டிப்பதோ, அல்லது அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்மீது ஆத்திரப்படுவதோ கூடாது என்று அமைதியே உருவான தந்தை பெரியார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வரலாறே தெரியாதவர்கள் இப்போது இருக்கின்ற அரைவேக்காடுகள்.
வடநாட்டில் ‘‘ஹிந்து சாயா’’,
‘‘முஸ்லிம் சாயா!’’
அன்று வடநாட்டில் பார்த்தீர்களேயானால், ரயில் நிலையங்களில், ரயில் நின்றவுடன், ‘‘சாயா, சாயா’’ என்று சத்தம் போட்டுக்கொண்டே தேநீர் விற்பார்கள்.
அன்றைக்கு என்ன நிலை என்றால், ‘‘ஹிந்து சாயா’’, ‘‘முஸ்லிம் சாயா’’ என்று இருந்தது. ஹிந்து, முஸ்லிம் சாயாவை வாங்கிக் குடிக்க மாட்டார். முஸ்லிம், ஹிந்து சாயாவை வாங்கிக் குடிக்கமாட்டார்.
தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்பதற்கான அடையாளம்!
ஆக, எந்த ‘‘சாயா’’வும் இல்லாத ஒரே ஒரு மாநிலம் இருக்கிறது என்றால், அது தமிழ்நாடுதான் – பெரியார் மண்தான். இதுதான் அமைதிப் பூங்கா என்பதற்கு அடையாளம்.
(தொடரும்)