வல்லம், பிப். 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) தொழில்நுட்பத்திற்கான கருத்தரங்கம் – 2025, 14.2.2025 அன்று பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கம் பொறியியல், ரோபோடிக்ஸ் தானியங்கி முறை மற்றும் ஊலநெச பாதுகாப்பு தொடர்பாக சிறப்பான கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ள கல்வியாளர்கள் அகாடமிக் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஒன்றுகூடிய ஒரு மிக முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
1,045 மாணவர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 11 பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1045 மாணவர்கள் பங்கேற்றனர் பல்வேறு துறைகளில் உள்ள கல்வி தொடர்பான மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டு பொறியியல், ரோபோடிக்ஸ், தானியங்கி முறை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கண்டுபிடிப்புகளைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
முனைவர் டி.தையல்நாயகி, (தலைவர், கட்டடவியல் துறை)வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா சிறப்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் முனைவர் ஆர்.மல்லிகா மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புலத்தின் முதல்வர் முனைவர் ஆர்.கதிரவன் உரையாற்றினர். தொழில்நுட்ப 2025 கருத்தரங்கில் 8 முக்கிய தொழில்நுட்ப அமர்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
முதலாம் அமர்வில் டி.பிரதீஷ், (ரோபோடிக்ஸ் இன்ஜினியர், பிராக் ரோபாடிக்ஸ் பி.வி.டி.லிமிடெட், சென்னை), கைப்பேசியில் செயற்கை நுண்ணறிவின் (AI) முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் தொழில் துறைகளில் தானியங்கி ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏ.அய். துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
எட்டு அமர்வுகளில்
பயன்மிகு தகவல்கள்
இரண்டாம் அமர்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ரோபோடிக்ஸ் பிரிவின் இயக்குநர் முனைவர் ஆர்.ராகேஷ் சமூக கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT) மூலம் நிலையான வளர்ச்சி பற்றி உரையாற்றினார். பொறியியல் துறையில் துறைகள் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார்.
மூன்றாம் அமர்வில் திருச்சி நிர்வாக இயக்குநர் மற்றும் மேலாளர் ஆர்.பி.சந்திரகாந்த், நவீன போக்குவரத்து கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை பற்றி எடுத்துக்கூறினார். மூலதன மதிப்பீட்டு முறைகள் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு சொத்து மதிப்பீட்டில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளதை விளக்கமாக எடுத்துரைத்தார்.
நான்காம் அமர்வில் தேசிய சைபர் பாதுகாப்பு வள மய்யம் (NCRDC) பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அலுவலர் முனைவர்
ஏ.இ.நாராயணன், நவீன டிஜிட்டல் யுகத்தில் சைபர் பாதுகாப்பு சவால்கள் குறித்து பேசினார். சைபர் தாக்குதல்களுக்கான பாதுகாப்பு உத்திகள் மற்றும் AI மற்றும் மெஷின் லெர்னிங் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துவது எப்படி என்பதையும் எடுத்துரைத்தார்.
அய்ந்தாம் அமர்வில், விமன்னா லேப்ஸ் இந்தியாவின் (தனியார் நிறுவனம், பெங்களுரு) இயக்குநர் செல்வி அனுஜா கண்ணன், டிரோன் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் மற்றும் அதன் தொழில் தாக்கம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார். தொழில்துறையில் சீரான வளர்ச்சிக்கு “ஸ்மார்ட்” தொழில் நுட்பங்கள் எப்படி உதவுகின்றன என்பதையும் விவரித்தார்.
ஆறாம் அமர்வில் ஆர்மடா இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், தஞ்சாவூர் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அலுவலர் கே.அமிர்தகணேஷ், தொழித்துறை தானியங்கி அமைப்புகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் செய்ய வேண்டும் என்பதை ஊக்குவித்தார்.
ஏழாம் அமர்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யத்தின் இயக்குநர் தா.கீர்த்திவாசன், நிலையான வளர்ச்சி குறிக்கோள்கள் மற்றும் அதன் எதிர்கால முக்கியத்துவம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார். பசுமை தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான முக்கியமான கொள்கைகள் குறித்து பேசினார்.
எட்டாம் மற்றும் இறுதி அமர்வில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் முனைவர் ஷர்மிளா பேகம் மாணவர்கள் தங்கள் உயர்கல்வி வாய்ப்புகளை ஆராயவும், சிறந்த தொழில் தேர்வு செய்யவும் முன்னணி தொழில்முனைவோராக வளரவும் வழிகாட்டினார்.
நிகழ்ச்சி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்னணு மற்றம் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் டாக்டர் சி.நர்மதா நன்றியுரையாற்றினார்.
தொழில்நுட்ப கருத்தரங்கம் 2025இல் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தொழில் துறையுடன் இணைந்து செயல்பட்டது. இதன் மூலம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்விசார் திறமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.