திருச்சி,பிப்.20- பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் 16.02.2025 அன்று காலை 10 மணியளவில் பாச்சூர் கடுக்காத்துரை கிராமத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை துவக்கி வைத்து சிறப்பித்த இம்மருத்துவ முகாமிற்கு மாவட்டக் காப்பாளர் ப.ஆல்பர்ட், பாச்சூர் மேனாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனலட்சுமி கண்ணன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ச.இராசேந்திரன் மற்றும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஆ.கனகராஜ் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு.பி. மஞ்சுளா வாணி ஆகியோர் தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கிராம மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனைகளை பெரியார் மணியம்மை மருத்துவமனை செவிலியர்கள் செய்ததுடன் மருந்து மாத்திரைகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.
இப்பொது மருத்துவ முகாமில் 73 பெண்கள் 44 ஆண்கள் என மொத்தம் 117 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.