சென்னை, பிப்.20 மனிதநேய மக்கள் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவுக்கு திடீரென உடல்நலம் குறித்த பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஒய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜவாஹிருல்லா இல்லத்துக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவரை சந்தித்து நலம் விசாரித்தார். விரைவில் குணம் அடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தனது ஆவலை கூறினார். மேலும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், மமக மாவட்டத் தலைவர் ரசூல், மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் புழல் ஷேக்முஹம்மது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஒன்றிய அரசின் ஓர வஞ்சனை
இயற்கை பேரிடர் நிவாரண நிதி 5மாநிலங்களுக்கு ரூ.1,555 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு கேரளாவுக்கு பட்டை நாமம்
புதுடில்லி, பிப்.20 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின் ரூ.1,554.99 கோடி கூடுதலாக வழங்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக்குழு அளித்துள்ளது.இந்த நிதி உதவியில் ஆந்திர பிரதேசத்துக்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் கிடைக்கும்.
இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக குறிப்பிட்ட 5 மாநிலங்களுக்கு மட்டுமே கூடுதல் நிதி அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பெஞ்ஜல் புயல் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டில் கொஞ்சம்கூட ஒதுக்கவில்லை. இதைப்போல வயநாடு பேரிடர் பாதிப்புக்காக கேரள மாநிலத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.