‘மீண்டும் ஒரு மொழிப் போரை உருவாக்க வேண்டாம்’ என்று எச்சரிக்கை
சென்னை, பிப்.20 மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட் டில் ஹிந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ‘‘மீண்டும் ஒரு மொழி போர் உருவாக்க வேண்டாம்’’ என்று ஒன்றிய அரசுக்கு மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மும்மொழி கொள்கை
தேசிய கல்வி கொள்கையின் மூலமாக மும்மொழி கொள்கை என்ற பெயரில் மறைமுகமாக தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு அரசு மும்மொழி கொள்கைகளை ஏற்றால் தான் ரூ.2 ஆயிரம் கோடி விடுவிக்கப்படும். இல்லை என்றால் நிதி விடுவிக்கப்படாது என்று தெரிவித்திருந்தார்.
கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கப் படாததால் தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவதாக, தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
அந்த வகையில் ஒன்றிய அரசு மிரட்டும் வகையில் மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்று கூறிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சை கண்டித்தும், ஹிந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் வகையில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் கூறி வரும் ஒன்றிய அரசை கண்டித்து தன்னெழுச்சியாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று (19.2.2025) காலை கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டத்தில் ‘மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள்… தமிழ்நாட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேள்’ என்றும் மாணவர்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும். படுத்தாதே படுத்தாதே ஹிந்தியை தமிழ்நாட்டில் கட்டாயப்படுத்தாதே… என்று முழக்கம் எழுப்பினர்.
மேலும், மாணவர்கள் போராட் டத்தில் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஹிந்தியை எப்படியாவது கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மும் மொழி கொள்கை மூலம் ஹிந்தியை உள்ளே திணிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீண்டும் தமிழ்நாட்டில் மொழி போரை ஒன்றிய அரசு உருவாக்க கூடாது. நாங்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்யக் வேண்டும். ஒன்றிய அரசு அதை முடிவு செய்ய கூடாது என்று கூறினர்.
மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கல்லூரி முன்பு பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.