அகத்தியர் என்னும் புதுக் கரடி!

Viduthalai
5 Min Read

அகத்தியர் என்பவர் பெரும் புலவர் என்றும், தொல்காப்பியரே அகத்தியரின் சீடர்தான் என்றும் பெரும் புழுதியைப் பார்ப்பனர்கள் இப்பொழுது கிளப்பி விட்டு வருகின்றனர்.
காசி தமிழ்ச் சங்கமம் என்ற ஒன்றைக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரபலப்படுத்தி வருகின்றனர்.
கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் அதோடு காசி தமிழ்ச் சங்கம் என்ற ஒன்றை முடிச்சுப் போட்டுக் கூத்தடிக்கின்றனர்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு – தமிழாய்வு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்்கும் ஓர் ஆன்மீகச் சொற்பொழிவாளரான ஒரு பார்ப்பன அம்மையாரை துணைத் தலைவராக்கி, பார்ப்பனியத்துக்கு நீர்ப்பாய்ச்சி உரம் போட்டு வளர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியின் நமோ படித்துறையில் 3ஆம் ஆண்டாக நடைபெறும் காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் பிரதமர் உட்பட உத்தரப்பிரதேச சாமியார் ஆதித்யநாத் இந்த ஏற்பாட்டைப்பற்றி ஓகோ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
‘இந்த சங்கமம் மகா கும்பமேளாவுடன் ஒத்துப் போவது மகிழ்ச்சி இந்தச் சங்கத்தின் கருப்பொருளாக அகத்திய முனிவர். இருக்கிறார். இந்தியாவின் வளமான அறிவு மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கிறார். வடக்கு, தெற்கு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ்மொழிகளின் சங்கமத்தை வலுப்படுத்துவதில் அகத்திய முனிவரின் ஆழமான பங்கு உள்ளது’’ என்று கூறிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார் உ.பி. முதலமைச்சர்.

அகத்தியர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்தசொற்பொழிவு நிகழ்ச்சி டில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுள்ளது.
அதற்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா? ‘தினமணி’ ஆசிரியர் கி. வைத்தியநாதய்யர் ‘அமுதசுரபியன்’ ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் சிறப்புச் சொற்பொழிவு.
்அகத்தியரிடம் தமிழ் கற்ற தேரையன் என்பவர்தாம் பின்னால் தொல்காப்பியம் என்னும் நூலை எழுதி, தொல்காப்பியர் என்று பெயர் பெற்றார். அகத்தியருக்குப் பன்னிரெண்டு சீடர்களாம். காக்கைப் பாடினியார் என்னும் பெண்பாற் புலவரும்கூட அகத்தியரின் சீடராம்.
இப்படி எல்லாம் ஏற்றிப் போற்றப்படுகின்ற இந்த அகத்தியர் யார்?
அவரின் வரலாறு என்ன? பெற்றோர்கள் யாவர்? அவர் யாத்த நூல் வரிசைகள் என்னென்னவென்று பட்டியலிட வேண்டாமா? இங்கேதான் இடிக்கிறது.
கேட்டால் அகத்தியர்பற்றி புராணங்கள் சொல்லுகின்றனவாம்.
புராணங்களை வரலாறாகப் பேசக் கூடியக் கூட்டமாயிற்றே! அதே ‘தினமணி’ அகத்தியரின் பிறப்பைப் பற்றி என்ன கூறுகிறது? இதோ பார்க்கலாம்.

பல்லாண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்தவர்களைப் பற்றிக் கூறும்போது, எப்படிச் சில குழப்பமான செய்திகள் கலந்துவிடுமோ, அப்படித்தான், அகத்தியரின் தோற்றம், பிறப்பு போன்றவை குறித்துப் பலவகையான தகவல்களைக் காண்கிறோம். (எப்படி இருக்கிறது!) பாரதத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு மொழிகளிலும் கிடைக்கிற தகவல்களையெல்லாம் சோ்த்துப் பார்த்தால், கீழ்க்காண்பவற்றை அறியலாம்:
நெடுங்காலத்திற்கு முன்னர், சிருஷ்டிகா்த்தாவான பிரம்மா, யாகமொன்றைச் செய்தார்; இந்த யாகத்தில், பரம்பொருளான சிவனாரின் அருள், ஒளிப் பிழம்பாக, வேதிகைக்கு அருகேயிருந்த கலசமொன்றில் இறங்கியது; இப்பேரொளியானது, கலசத்திலேயே குழந்தையாக உருப்பெற்று, பின்னா், முனிவராக விரிந்தது; க்ஷி அக்ஷமாலை, கமண்டலம், யோகதண்டம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தி, ஞான முத்திரை காட்டியவாறு இம்முனிவா் நின்றார்;
தோன்றும்போதே ஞான ஒளியிலிருந்து வெளிப்பட்டதால், ‘அகஸ்தி’’ என்னும் பெயா் சூட்டப்பெற்றார் (அங் / அக் = ஒளி / நெருப்பு; அஸ்தி = இருத்தல்; ஒளியின் இருப்பு; பிரகாசமானவா்); கலசத்தில் (கும்பத்தில்) உருப்பெற்றவா் என்பதால், கும்பமுனி என்றும் குடமுனி என்றும் அழைக்கப்பெற்றார்; உருவத்தில் மிகச் சிறியவராகத் தோற்றம் தந்ததால், குறுமுனி என்றும் அழைக்கப்பெற்றார். வேறு சில புராணங்கள், அகத்தியரின் தோற்றம் பற்றிய வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றன.
பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும் அவருடைய மனைவியான ஹவிர்பூ (அல்லது ப்ரீதி) என்பாருக்கும் பிறந்த மகன்; தந்தை தாய் இம்மகனுக்கு தத்தன் என்றே பெயா் சூட்டினா். காலப்போக்கில், ஞான ஒளி வீசுபவா் என்னும் பொருளில், அகஸ்தியா் என்று அழைக்கப்படலானார்.

உத்தர ராம சரிதக் கதைகளில், அகத்தியரின் தோற்றம், பற்பல திருப்பங்களைப் பெறுகிறது. இக்ஷ்வாகு குலத்தைச் சோ்ந்த நிமி என்னும் அரசா், இமய மலையடிவாரப் பகுதியிலிருந்த நாடொன்றுக்கு அரசா் ஆகிறார். நீண்ட நாள் யாகம் ஒன்றைச் செய்ய விழைகிறார். வசிஷ்டரை யாகம் நடத்த அழைக்க, வேறு பணிகள் இருந்ததால், வசிஷ்டா் மறுக்கிறார். இதனால் நிகழ்ந்த உரசலில், வசிஷ்டரும் நிமியும் ஒருவருக்கொருவா் சாபமிட்டுக் கொள்ள, இருவருமே உடலை விட்டுப் பிரிந்து ஆவிகளாக அலைய நேரிடுகிறது. பிரம்மாவிடம் தீா்வு கேட்கிறார் வசிஷ்டர். மித்ர-வருணா் வழியாக மீண்டும் வடிவம் கிடைக்கும் என்று பிரம்மா வரம் தருகிறார். மித்ர வருணா் என்பவா், ஒரே உடலில் இருக்கும் இரட்டை வல்லமை. ஊா்வசியைக் கண்டு மித்ரவருணா் காதல் கொள்ள, இக்காதலின் விளைவாகத் தோன்றும் கருவைக் குடத்தில் இட்டு வளா்க்கின்றனா். கருவிலிருந்து இரண்டு குழந்தைகள் தோன்றுகின்றன; ஒன்று, வசிஷ்டா்; மற்றது, அகஸ்தியா். மித்ர வருணரிடமிருந்து உதித்ததால், வசிஷ்டா், அகத்தியர் ஆகிய இருவருக்குமே, மைத்ரவாருணா் என்னும் பெயா் வழங்கப்படுகிறது. (தினமணி – 15.2.2025)
கடுகுமூக்கு அளவுக்கேனும் அறிவுற்ற எவரும் இந்தக் கட்டுக்கதைகளை ஏற்பார்களா? ஏற்கிறார்கள், இறக்கைக் கட்டிப் பறக்க விடுகிறார்கள் என்றால் பார்ப்பனீயத்தின் யோக்கியதாம்சம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
‘மகாகவி’ என்று எப்பொழுதும் சொல்வார்களே, அந்தப் பாரதி இந்த அகத்தியனைப் பற்றி என்ன பாடுகிறான்?
கடலினைத் தாவும் குரங்கும் – வெங்
சனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.
ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.
(பக்கங்கள் 575, 576)
ஆதாரம்: மகாகவி பாரதியார் கவிதைகள்,
சக்தி வெளியீடு – சென்னை (1957)

குட்டைமுனி என்று பாரதி பாடியது அந்த அகத்தியனைத் தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
புனை சுருட்டுகளையும் புராணக் குப்பைகளையும் இந்த 2025லும் அவிழ்த்து விடும் ஆரியத்தைத் தெரிந்து கொள்க!
ஒன்றிய அரசு கொட்டிக் கொடுக்கும் செம்மொழி மத்திய நிறுவனம் செம்மொழியை வளர்க்கிறதா? பார்ப்பனீய சமஸ்கிருதக் கலாச்சாரத்தை வளர்க்கிறதா? தெரிந்து கொள்வீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *