சென்னை, பிப். 19- தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி பயிற்றுவிக்கப்படுவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை பரப்புவதாகவும் அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி படிக்கும்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாதா என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குறைந்த விழுக்காடு பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி
இதற்கு எந்தத் தரவும் இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 58 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இதில் தனியார் பள்ளிகள் சுமார் 12,690 ஆகும். சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை 1,835 ஆகும். நமது மாநிலத்தை பொறுத்தவரை சிபிஎஸ்இ பள்ளிகள் தவிர மற்றவைகளில் ஹிந்தி கட்டாய பாடமில்லை. பிற தனியார் பள்ளிகளில் எந்த பொதுத்தேர்விலும் ஹிந்தி கிடையாது. எனவே, தமிழ்நாட்டில் வெறும் 3.16 சதவீதம் பள்ளிகளில் மட்டுமே ஹிந்தி கட்டாயம்.
பிற மாநிலங்களில் மாறிச் செல்ல வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. எங்குச் சென்றாலும் ஒரே பாடத்திட்டத்தை தொடர உதவும். அதன் நோக்கம் வேறு. ஆனால், பல லட்சம் மாணவர்கள் ஹிந்தி படிப்பதாக மனம்போன போக்கில் ஒரு தவறான தகவலை அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பில்லை என்று தவறான கருத்தை பரப்ப முயல்வதும் ஏற்புடையதல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.