ராஜன்குறை
பேராசிரியர்,
அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால்தான் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கான ஒன்றிய அரசு நிதியைத் தர முடியும் என்றும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு தனித்த கல்விக் கொள்கையைக் கடைப்பிடிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் பிழையாகக் கூறியுள்ளார். இது தமிழ்நாட்டின் அறுபதாண்டுக்கால இருமொழிக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் அல்லது அச்சுறுத்தல் எனலாம்.
இந்தப் பிரச்சினையை ஒட்டி பேசும் தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவ அமைப்பினர் தமிழ்நாட்டு மக்கள் இந்தி படிக்க வேண்டும், இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக மாற்று வதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
வரலாற்றையே அறியாமல் பேசுகின்றனரா, மறந்துவிட்டுப் பேசுகின்ற னரா என்று வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு முதலில் சுதந்திர இந்திய திராவிடத் தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக் கூற வேண்டும்.
சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இதே பிப்ரவரி மாதம் தமிழ்நாடு மிகப்பெரிய கொந்தளிப்பைச் சந்தித்தது. இரண்டு நிகழ்வுகளை மட்டும் உதாரணமாகச் சொன்னால், சிறிய நகரமான பொள்ளாச்சியில் கலவரத்தை அடக்க ராணுவம் துப்பாக்கியால் சுட்டுப் பலரைக் கொன்றது. எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இன்றும் திட்டவட்டமாகத் தெரியவில்லை. கூடலூரில் நடந்த கலவரத்தில் வெகுண்டெழுந்த பொது மக்களால் காவல் நிலையம் தாக்கப்பட்டது; காவலர் ஒருவரும் மரணமடைந்தார். இதுபோல பல சிறு நகரங்களில்கூட மிகப்பெரிய மக்கள் எழுச்சி உருவானது. இதனையொட்டிதான் அனைத்து மாநிலங்களும் ஏற்கும் வரையில் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக ஹிந்தியுடன், ஆங்கிலமும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
அறுபத்தைந்தாம் ஆண்டு நடந்த கிளர்ச்சி யில் தி.மு.க தொண்டர்கள் பலர் தங்களை எரியூட்டிக்கொண்டார்கள். அந்த மொழிப்போர் ஈகையர்களின் தியாகம் இன்றும் பசுமையாக நினைவு கூரப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க.வினர் மட்டுமல்லர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த குடும்பங்களிலிருந்து, ஏன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குடும்பங்களி லிருந்தும்கூட இளைஞர்கள், மாணவர்கள் எழுச்சி யுடன் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் பங்கேற்றார்கள். கலைஞர் உள்ளிட்ட பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாணவர்களே தன்னெழுச்சியாகக் கிளர்ச்சிகளை நடத்தினார்கள்.
உள்ளபடியே தி.மு.க அரசு 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும்கூட கிளர்ச்சி அலைகள் ஓயவில்லை. கோவை வேளாண்மைக் கல்லூரியில் மாணவர்கள் தனித்தமிழ்நாட்டுக் கொடியை ஏற்றினார்கள். முதலமைச்சராகப் பதவி யேற்றிருந்த அறிஞர் அண்ணா, அவர்களுடன் பேசினார். சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வைக் கூட்டி தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் அரசின் பள்ளிக் கல்வித்துறையால் கடைப்பிடிக்கப்படும்; தமிழும், ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பின்னரே மாணவர்கள் அமைதியுற்றனர்.
இந்திய மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 1947 இல் விடுதலை அடைந்து இருபது ஆண்டுகள் கழித்து, இந்திய மக்கள் தொகுதிகளில் ஒன்றான திராவிட-தமிழ் மக்கள் தங்கள் சுயாட்சி உரிமைகளின் வெளிப்பாடாக இருமொழிக் கொள்கையை நிறைவேற்றினர். அதுவே அவர்களின் சுதந்திர வேட்கையை நிறைவு செய்தது. காங்கிரஸ் கட்சி கூட்டாட்சி தத்துவத்தின் இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டது. தமிழ்நாட்டில் இயங்கிய அனைத்துக் கட்சிகளுமே புரிந்துகொண்டன. ஹிந்துத்துவ, பார்ப்பனீய சக்திகளைத் தவிர யாருக்குமே இதில் எந்தத் தீவிர எதிர்ப்புமில்லை.
இருமொழிக் கொள்கையால் விளைந்த நன்மை, தீமை என்ன?
தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்கள், முதல் தலைமுறையாக கல்வி கற்பவர்களின் சுமை இருமொழிக் கொள்கையால் வெகுவாகக் குறைந்தது. அவர்களால் கணிதம், அறிவியல் போன்ற கற்பதற்குக் கடினமான பாடங்களில் கவனம் குவிக்க முடிந்தது. ஆங்கிலத்தைக் கூடுதல் கவனத்துடன் தொடர்பு மொழியாகக் கற்றது அவர்கள் வேலைவாய்ப்புகளை பன்மடங்கு பெருக்கியது.
இந்தியாவின் வர்ண தர்ம சமூகப் பகுப்பு ஒரு சில முன்னேறிய வகுப்பினருக்கே காலம் காலமாக கல்வி கற்கும் உரிமையை, வாய்ப்புகளை வழங்கி, உழைக்கும் மக்களின் கல்வியை முற்றிலும் புறக்கணித்ததால், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 15% மக்கள் கூட எழுதப் படிக்க தெரிந்தவர்களாக இருக்கவில்லை. கல்வி என்பது 80% மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. இந்த நிலையிலிருந்து அனைத்து மக்களும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்கும் மிகப்பெரிய சவாலை தமிழ்நாட்டு மாநில அரசு எதிர்கொண்டது. அத்தகைய சூழ்நிலையில் அனைத்து மாணவர்கள் மீதும் தேவையற்ற மூன்றா வது மொழி கற்கும் சுமையை ஏற்றுபவர்கள் மனிதாபி மானமற்ற கொடூர மனம் படைத்தவர்களாக மட்டுமே இருக்க முடியும். திராவிட அரசியல் தன் முற்போக்குச் சிந்தனையால் அந்த சுமையை தவிர்த்ததால், கல்வி கற்பது சுலபமாக்கப்பட்டது.
இந்திய மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டால் சுதந்திர இந்தியாவில் தமிழ்நாடு கல்வித்துறையில் நிகழ்த்திய பாய்ச்சல் மிகச் சிறப்பானது. மருத்துவக் கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, வர்த்தகம் சார்ந்த கல்வி ஆகியவற்றில் ஆகச்சிறந்த மனிதவள மேம்பாட்டினை உருவாக்கியுள்ளது என்பதை பல்வேறு பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். ஒப்பீட்டியல் அரசியல் ஆய்வாளர்கள் திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வு உருவாக்கிய எழுச்சியே இந்தக் கல்வித்துறை சாதனைக்குக் காரணம் என்று கருதுகின்றனர்.
இந்தியாவிலிருந்து தனிமைப்பட்டு விட்டதா தமிழ்நாடு?
இந்துத்துவ, பார்ப்பனீய சிந்தனையாளர்கள் செய்யும் மிகப்பெரிய மாய்மாலம் இந்தி படிக்காததால் தமிழ்நாடு தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்துவிட்டது அல்லது பிரிந்துவிடும் என்பதுதான். ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பது இதுதான். எந்தத் துறையில் தமிழ்நாடு தனிமைப்பட்டுள்ளது என்று இவர்களால் கூற முடியுமா?
இந்திய ராணுவத்தில் தமிழ்நாட்டவர் பங்கேற்பு குறைந்துவிட்டதா? இல்லை தேசியப் பாதுகாப்பில் தமிழ்நாட்டினர் ஆர்வம்காட்டுவது குறைந்து விட்டதா? தி.மு.க ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆர்வத்துடன் நிதிதிரட்டி அளிக்கவில்லையா? சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் திரைக்கலைஞர்கள் உணர்ச்சி பொங்க பேசியதை யாரேனும் மறக்க முடியுமா?
எத்தனை ராணுவ தளபதிகள் தமிழ்நாட்டிலிருந்து உருவாகியுள்ளார்கள், எத்தனை தமிழ் ராணுவ வீரர்கள் போர்களில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள் என்பது இவர்களுக்குத் தெரியுமா? ராணுவ வீரர்க ளின் தியாகத்தைப் போற்றும் எத்தனை தமிழ்த் திரைப்படங்கள் உருவாகியுள்ளன, வெற்றி பெற்றுள்ளன என்பதற்கான கணக்கு உண்டா?
அரசியலில் இந்திரா காந்தியின் சோஷலிச திட்டங்களுக்கு தி.மு.க ஆதரவுக் கரம் நீட்ட வில்லையா? அவருடன் 1971 ஆம் ஆண்டு கூட்டணி கண்டு அவர் வெற்றிக்கு பங்காற்றவில்லையா? அவரே நெருக்கடி நிலை அறிவித்தபோது அதனை எதிர்த்து நிற்கவில்லையா? இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. வீரர்கள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையா? ஒன்றிய அரசில் அமைந்த மூன்றாவது அணி கூட்டாட்சிகளில் தி.மு.க. பங்கேற்கவில்லையா? மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்திய வி.பி.சிங்கிற்கு ஆதரவுக் கரம் நீட்டி உறுதுணையாக இருந்து இந்தியாவின் சமூகநீதிப் பயணத்தை வலுப்படுத்தவில்லையா?
ஏன் இந்திய ஒன்றிய ஆட்சி நிலையற்ற சூழ்நிலை யில் தடுமாறியபோது, பா.ஜ.க.வின் தலைவர் வாஜ்பேயியை ஆதரித்து அவர் அமைச்சரவையில் பங்கேற்கவில்லையா? பன்னாட்டு வர்த்தக மாநாட்டில் மூன்றாம் உலக நாடுகளின் ஒப்பற்ற குரலாக முரசொலி மாறன் அவர்கள் இந்திய ஒன்றிய அரசின் சார்பாக ஒலிக்கவில்லையா?
இந்திய ஒன்றியத்தின் முதல் நிதியமைச்சராக நேரு தேர்ந்தெடுத்ததே திராவிட இயக்கத்திற்கு நெருக்கமான ஆர்.கே.சண்முகம் அவர்களைத்தானே? அதனைத் தொடர்ந்து எத்தனை தமிழ்நாட்டவர் ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர்? ஒன்றிய அமைச்சர்களான சி.சுப்ரமணி யம், ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.இராசா போன்றவர்களின் பங்களிப்புகள் பாராட்டப்பட்ட தில்லையா?
இந்திய ஆட்சிப் பணியில், அயலுறவுத் துறையில், காவல்துறையில் தமிழ்நாட்டவர்கள் பங்களிப்புகள் என்றாவது குறைந்துள்ளதா? இந்திய வரலாற்றின் தோற்றுவாய் காலத்திலேயே சிந்துநதி நாகரீகம் வைகை நதியை நோக்கி நகர்ந்ததை சிறந்த ஆய்வு நூலாக எழுதியுள்ள ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன், தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றவர், ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தில் சேர்ந்து பணிக்காலம் முடிந்த பின்னும் ஒடிசா முதலமைச்சரால் தனி ஆலோசகராகப் பணி நீடிப்புப் பெறவில்லையா? எந்தப் பள்ளியில் ஹிந்தி பயின்று இந்திய தேர்தல் ஆணையத்தில் அவர் பணியாற்றினார்?
நீதித்துறையில் அரும்பணியாற்றவர்கள் எத்தனை பேர்? ஊடகத்துறையில் பங்காற்றியவர்கள் எத்தனை பேர்? கலைத்துறையில்தான் தமிழ்நாட்டவர் பங்களிப்பின்றி எந்தத் துறையாவது உண்டா? ஹிந்தி சினிமாவில் முன்னணி கேமிராமேன்களாக இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் எந்தப் பள்ளியில் ஹிந்தி படித்தார்கள்? இந்திய வர்த்தக வலைப்பின்னலில் தமிழ்நாட்டின் இடம் என்ன என்பதைப் பார்த்து அறிய முடியாதா?
தங்க நாற்கர சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி நாடெங்கும் செல்லும் பொருட்களின் பட்டியல் என்ன? நாடெங்கிலுமிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பொருள்களின் பட்டியல் என்ன? ராஜஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள ஜெய்சால்மாருக்கு சென்றால், கடைவீதியில் ‘‘தமிழ்நாடா’’ என்று கேட்டு மரியாதை செய்கிறார்களே? அவர்களுக்குத்
தமிழ்நாட்டுடன் உள்ள வர்த்தக உறவுகளைப் பெருமையாகக் கூறுகிறார்களே?
தமிழ்நாட்டு கிராமத்திலிருந்து வேலையாட்களை மேஸ்திரியாகக் கூட்டிச்சென்று மத்தியப் பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் சாலை போட்டுவிட்டு வந்தவர் எந்தப் பள்ளியில் ஹிந்தி படித்தார்? சென்னை யிலிருந்து ராஜஸ்தான் சென்று மொசைக் கற்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வரும் தலித் கட்டடத் தொழிலாளி எந்தப் பள்ளியில் ஹிந்தி படித்தார்? உசிலம்பட்டி சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்தபடி செல்பேசியில் மும்பையில் தன் உறவினரின் நண்பரான வடநாட்டு வணிகருக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொடுக்கும் இன்ஷூரன்ஸ் முனைவர் எந்தப் பள்ளியில் ஹிந்தி படித்தார்?
இந்தியா முன்னேற ஹிந்தி மொழி திணிப்பு ஒழிய வேண்டும்
வட நாட்டின் பெரும்பகுதியில் மக்கள் பேசும் மொழிக்கு அந்நியமான சமஸ்கிருதமயமான ஒரு செயற்கையான ஹிந்தி மொழியில் கல்வி கற்பிக்கத் துவங்கியதுதான் வட நாட்டின் பல பகுதிகளில் மனிதவள மேம்பாடு பின்தங்கியிருக்க முக்கிய காரணம் என்று கூறலாம். இதனை அலோக் ராய் போன்றவர்கள் சுட்டிக்காட்டினாலும், பலரும் பொருட்படுத்துவதில்லை. முதலில் இதனை புரிந்து கொள்ள எளிய மக்களின் அன்றாட வாழ்வில் கல்வி எப்படி உள்நுழைகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
கல்விக் கொள்கைகளை வகுக்கும் மேட்டுக்குடி யினருக்கு ஏழை, எளிய மக்களின் வாழ்வியல் சூழலோ, அதில் கல்வி கற்பது எப்படிப்பட்ட எதிர்நீச்சல் என்பதோ புரிவதில்லை. கல்விப்புல ஆய்வுகளிலேயே எத்தனை பேர் பள்ளி மாணவர்கள் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று அற்புதமான ஆய்வறிக்கைகளை அளித்துள்ளார்கள் என்பதை அறிய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அப்போது பீகார் பள்ளிகளில் மைதிலி, போஜ்பூரி ஆகிய மொழிகளைக் கற்பித்தல் மொழியாக முதலில் மாற்றுவார்களா? வட இந்தியா முழுவதும் மக்கள் பேசும் மொழிகளில் பாட நூல்களை உருவாக்கி அவற்றை கற்பித்தலின் மொழிகளாக மாற்று வார்களா? ஹிந்தியை தொடர்பு மொழியாக மட்டும் மாற்றுவார்களா?
வட மாநிலங்களிலெல்லாம் மக்கள் மொழிகளைப் புறக்கணித்து செயற்கையான சமஸ்கிருத அடிப்படை யிலான இந்தி மொழியை திணித்ததால் அந்த மாநிலங்கள் அடைந்த பலன் என்ன? மாநில, ஒன்றிய அரசுகளின் ஆட்சிமொழியும் அந்த ஹிந்திதான் என்பதால் ஆங்கிலம் படிப்பதில் அங்கே ஏற்பட்ட சுணக்கம் மனிதவள மேம்பாட்டில் வட நாட்டவர்களை பின் தங்கச் செய்ததற்கு யார் பொறுப்பு?
மொழித்திணிப்பால் நாட்டை
ஒற்றுமைப்படுத்த முடியுமா?
பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களை ஒற்றை மொழி பேசவைத்துவிட்டால், அவர்களை ஒற்றுமைப்படுத்தி விடலாம் என்பதைவிட அபத்தமான சிந்தனை வேறெதுவும் இருக்க முடியாது. இருபதாம் நூற்றாண்டில் நாம் கண்முன் கண்ட சிறந்த உதாரணம் ரஷ்யா. இத்தனைக்கும் யு.எஸ்.எஸ்.ஆர். என்ற சோவியத் ஒன்றியமாக மாறிய ரஷ்யா பொதுவுைடமை அரசமைத்து மிகச்சிறந்த மக்கள்நல ஆட்சியைத்தான் நாடெங்கும் நடத்தியது. ஆனால், அனைத்து மக்களையும் ரஷ்ய மொழியை மட்டும் பேசச் செய்வது என்பது சாத்தியமாகவில்லை.
அதில் மிகக் கொடூரமான உதாரணம் உக்ரைன். பொதுவுைடமை சோவியத் ஒன்றியம் உருவாகும் முன்னமே ரஷ்யப் பேரரசின் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். உக்ரைன் நாட்டு மேட்டுக்குடியினர் ரஷ்ய மொழியைப் பயில்வதும் நெடுநாள் பழக்கம்தான். ரஷ்ய மொழி இலக்கிய முன்னோடிகளில் புகழ்பெற்ற வரான கோகோல் (1809-1852) உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்தான்.
இவ்வளவு இருந்தும் சோவியத் ஒன்றிய காலத்தில் நிகழ்ந்த ரஷ்ய மொழி திணிப்பு, உக்ரேனிய மக்களிடம் எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்து, உக்ரேனிய தேசியத்தை வளர்த்துள்ளது. சோவியத் யூனியன் உடைந்து சிதறிய பிறகு, ரஷ்யாவின் மறைமுக ஆதிக்கத்தை எதிர்ப்பது மக்களின் உளக்கிடக்கையாக மாறியதால், மேற்கத்திய நாடுகளை நெருங்கத் துவங்கியது. இறுதியில் ரஷ்யாவுடன் மிக மோசமான யுத்தமாக, இருபுறமும் கடும் பொருள் இழப்பை, மனித உயிர்கள் அழிவைச் சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தனது நீண்ட கால பண்பாட்டுச் செழுமையால், தொடர்புகளால் ஒரு கூட்டாட்சிக் குடியரசாக உரு வாகிவிட்ட இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தங்களது அபத்தமான ஹிந்தி மொழி அரசியலால் சீர்குலைத்துவிட ஹிந்துத்துவவாதிகள் முனைந்துள்ளார்கள். உண்மையான தமிழ்நாட்டுப் பற்றும், இந்திய தேசப் பற்றும் உள்ளவர்கள் இவர்களது முதிர்ச்சியற்ற தீவிரவாத அரசியலை முறியடித்து இந்தியாவைச் சிறந்த கூட்டாட்சிக் குடியரசாக வடிவமைக்க வேண்டும்.
நன்றி: ‘முரசொலி’, 18.2.2025