கோலாலம்பூர், பிப். 18- கூட்டரசு பிரதசம் மற்றும் சிலாங்கூர் மாநில பெரியார் தொண்டர்கள், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து பொங்கல் தமிழர் திருநாள் விழாவினை சா அலம் நகரில் கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் தோழர்கள் த.பரமசிவம் சி.மு.விந்தை குமரன், தமிழ் வேந்தன் திராவிட மணி, மு.மணிமாறன், முனைவர் மு.கோவிந் தசாமி, மூர்த்தி, ம.மன்னர் மன்னன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
தந்தை பெரியார் மலேசிய வருகையும் அவரின் தன்மான உணர்வுகள் மிக்க பேருரைகளும் எவ்வாறு இந்த நாட்டில் உள்ள தமிழர்களை முன்னேற்ற பாதைக்கு இட்டு சென்றன என்று இந்தக் கூட்டத்தில் விரிவாக எடுத்து ரைக்கப்பட்டது. பொங்கல் விழாவின் பெருமைகளையும் அதனை தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை மாற்றத்தையும் இந்த நாட்டில் திராவிடர் கழகத்தின் பணிகள் பற்றியும் தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் போது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார் தொண்டர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் மூத்த பெரியார் தொண்டர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழ்கள், ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார் என்ற நூல்களும் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமியால் வழங்கப்பட்டன. பல ஊர்களில் இருந்து திரளாக கலந்து கொண்ட பெரியார் தொண்டர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.