கும்பமேளா என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ.7,500 கோடி பாழாவதா?
மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் ஒரு மதச்சார்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா?
கும்பமேளா சங்கம நீரில் மல கோலிஃபார்ம் கிருமிகள் விரவியிருப்பதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதே!
மதத்தின் பெயரால் மனித உயிரோடு விளையாடலாமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
கும்பமேளா என்ற பெயரில் ரூ7,500 கோடி அரசு செலவு செய்வதும், மதச்சார்பற்ற அரசின் குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர் உள்பட ஒரு மத விழா கொண்டாடுவது சரியா? திரிவேணி சங்கமத்தில் கோடிக் கணக்கானோர் குளிப்பதால், கிருமிகள் விரவிக் கிடக்கின்றன என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிக்கை கொடுத்துள்ளதைப் புறந்தள்ளலாமா? மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் சரத்து என்னாயிற்று? என்பது உள்பட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கும்பமேளா என்ற ஹிந்துத்துவாவாதிகளின் பண்டிகை வெகு ஆடம்பரமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ‘திரிவேணி சங்கமம்’ என்று கொண்டாடப்படுகிறது. இதில் சரஸ்வதி என்ற நதி மானசீக கற்பனை. அப்படி ஒரு நதி இருந்ததாகக் கூறப்படும் கூற்று – யமுனை – கங்கை கூடும் அப்பகுதி பழைய அலாகாபாத். இப்போது அது பா.ஜ.க. ஆட்சியில் ‘பிரயாக் ராஜ்’ என்ற புதிய பெயரால் அழைக்கப்படுகிறது. அவ்விதம் பல கோடி பேரைத் திரட்டி – அந்தப் பக்தியைப் பரப்பி, அதன்மூலம் மறைமுகமாக தங்களது அரசியலை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு மறைமுகத் திட்டமே ஆகும்.
இதற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற அரசா?
மதச்சார்பற்ற அரசு (Secular) என்றாலும், அதனையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, எப்படி முன்பு அயோத்தியில் இராமன் கோவில் திறப்பு நிகழ்ச்சியை பிரதமர், உ.பி. ஆளுநர், ஆர்.எஸ்.எஸ். தலைவர், உ.பி. முதலமைச்சரான காவிச் சாமியார் ஆதித்யநாத் முதலிய வர்கள் கலந்துகொண்டதற்கு அடுத்தபடி,
ஹிந்து மதத்தின் முக்கிய பண்டிகையாக வட நாட்டவர் கருதும் – 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று கூறி, பல லட்சக்கணக்கணக்கான பாமர மக்களுக்குப் பக்தியைக் காட்டி நடத்துகிறார்கள்.
அம்மதத்தின் தலைவர்கள் – புரோகிதர்கள் நடத்தினால் அதை அவர்களது சொந்த விருப்பம், நம்பிக்கைப்படி நடத்துகிறார்கள் என்று விட்டுவிடலாம்!
ஆனால், ஒன்றிய, மாநில அரசுகளின் நிர்வாக இயந்திரம் முழுவதையும் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள், அரசு அதிகாரிகளில் சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுநர்கள் எல்லாம் அங்கே போய், மூழ்கி எழுந்தால் பாவம் கரையும்; பக்தர்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதை முழு வெளிச்சம் போட்டுக் காட்டி, அரசியல் இயந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமல்லவா?
மக்களின் வரிப் பணம் ரூ.7,500 கோடி பாழாவதா?
அனைத்து மக்களின் வரிப் பணம் – ஏற்பாடுகள், பாதுகாப்புகள் என்ற சாக்கில், 7,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது! இவ்வளவு கூட்டத்தினைக் கட்டுப்படுத்த, மக்களைக் காப்பாற்ற ‘‘அய்–டெக்’’ முறையில் (இதுதான் நவீன ‘‘ஸநாதனம்!’’) கருவிகள் வாங்க, அசம்பாவிதங்களைத் தடுக்க என்று நிதி ஒதுக்க காரணம் சொல்லப்பட்டது!
ஆனால், இதுவரை கூடாரங்களில் தீப்பிடித்து, கூடிய மக்களின் கூட்ட நெரிசலிலும் மாண்டவர்கள் தொகைபற்றி நாடாளுமன்றத்தில் கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பியதற்குத் தெளிவான பதில் இன்றுவரை ஏதுமில்லை.
அதைவிட, திரும்பத் திரும்ப இரண்டு அல்லது மூன்று முறை தீப்பிடித்துச் சிக்கியவர்கள்; மற்றபடி, அண்மையில் டில்லி ரயில்வே நிலையத்தில் முண்டி யத்து பல்லாயிரம் பேர் திரண்டதால், பெண்கள் உள்பட பலர் அந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்து பலியாகிய சோகம் மிகவும் வேதனைக்கும், துயரத்திற்கும் உரியது! (அவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!)
‘புனித’ நீரில் மலக்கழிவுகள், கிருமிகளின் குத்தகை!
இதுபற்றி ‘ஹிந்து‘ ஆங்கில நாளேடு ‘Mela and Melee‘ உ.பி. என்ற தலைப்பில் தலையங்கத்தில் இன்று (18.2.2025) விரிவாக எழுதியுள்ளது. மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் இலாகாக்கள் தோல்வியை சமாளிக்கத் தெரியாது உயிர்கள் பலியானதைப்பற்றிக் கவலைப்படாமல், ‘கும்ப கர்வ்‘ என்றெல்லாம் மார்தட்டுவதா?
இதையும் தாண்டி, இப்போது வரும் மற்றொரு கொடுமையான செய்தி!
‘‘கும்பமேளா ‘புனித நீரில்’(?) மலக்கழிவு:’’ என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி!
(கும்பகோணத்தில் கடந்த மகாமகத்தின்போது ‘புனித’ நீராடல் என்ற பெயரில் பக்தி மோகத்தில் மகாமகக் குளத்தில் குளித்தார்கள். அந்தக் குளத்து நீரை மாதிரி எடுத்து, அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கிண்டி பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்; அதில் 28 விழுக்காடு மலக் கழிவும், 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவும் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக (Report) அறிவிக்கப்பட்டதையும் இந்த நேரத்தில் எடுத்துக்காட்டவேண்டியது அவசியமாகும்).
பிரயாக்ராஜில் நடக்கும் மகாகும்பமேளாவின்போது மக்கள ‘‘புனித நீராடிய நதி நீரில்’’ அதிக அளவு மல கோலிஃபார்ம் (மனித மற்றும் விலங்குகளின் கழிவு களிலிருந்து வரும் நுண்ணுயிரிகள்) காணப்பட்டதாக ஒன்றிய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (UGPCB- Union Government Pollution Control Board) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT – National Green Tribunal) சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளித்துச் சென்ற பக்தர்களுக்கு – அதன் விளைவாக எவ்வளவு தொற்று நோய், தொல்லைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டா, இல்லையா? மனித உயிரோடு விளையாடலாமா?
கும்பமேளாவில் இறந்தவர்களின் கணக்கைக் கூற
ஒன்றிய அரசு மறுப்பது ஏன்?
டில்லி ரயில் நிலைய நெரிசலில் – ரயில்வே துறையின் ஆளுமைத் திறன் இல்லாமையைக் காட்டுகிறது என்று மேனாள் ஒன்றிய ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் (யாதவ்) அவர்கள் கூறியதோடு, கும்பமேளா பண்டிகையே தேவையற்ற ஒன்று என்று கூறியுள்ளார். (அவர் ஒன்றும் நாத்திகர் அல்ல).
‘‘நாளும் கலந்துகொண்டு, கும்பமோளவில் குளிப்போரின் எண்ணிக்கையை வெளியிட்டுப் பீற்றிக் கொள்ளும் அரசுகளால், இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகத் தெரிவிக்க முடியாதா?’’ என்ற அறிவியல் பூர்வ கேள்விகளை நாடாளுமன்ற அவையில் எழுப்பப்பட்டன!
மவுனம்தான் கிடைத்த பதில்!
அரசமைப்புச் சட்டம் கூறும்
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது என்பது இதுதானா?
பக்தி, பக்தர்கள் என்பதைவிட, இதன்மூலம் காவிக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சி ஏற்பட்டு, வடநாட்டில் பாமரர்களின் ஓட்டுகளைத் தங்கள் கட்சி தக்க வைத்துக்கொள்ள அரசியல் வியூகம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.
எப்படி இருப்பினும், மக்களின் உயிர் என்ன அவ்வளவு மலிவுச் சரக்கா?
அந்தோ, பக்தி மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?
இந்திய அரசமைப்புச் சட்டப்படி, அடிப்படைக் கடமை, அறிவியல் மனப்பாங்குகள் – கும்பமேளாவில் வெள்ள நீரில் எழுதப்பட்ட நீர் எழுத்துகள்தானா?
வெட்கம்! மஹாவெட்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
18.2.2025