தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றிய பாஜக அரசு – கனிமொழி
விழுப்புரம்,பிப்.18- 100 நாள் வேலை திட்ட பட்டியலில் இருந்து, பயனாளிகள் பெயரை அகற்றியது தான், ஒன்றிய அரசின் மிகப்பெரிய சாதனை என, கனிமொழி எம்.பி., கூறினார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள், ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பேசியதாவது:
திராவிட ஆட்சிக் காலத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. பெரிய அளவில் பெண்கள் முன்னேற்றம் உள்ளதாக கூறும் நாடுகள், சமீபத்தில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்தனர்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயர் ஓரிடத்தில் கூட உச்சரிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 84 லட்சம் பயனாளிகளின் பெயர்கள், 100 நாள் பணி திட்ட பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது தான் ஒன்றிய அரசின் மிகப்பெரிய சாதனை. பா.ஜ., ஆட்சி ஒவ்வொரு ஆண்டும் நிதியை குறைத்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு கல்விக்குக் கிடைக்க வேண்டிய, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதி, ஹிந்தி பயில ஒப்புக்கொள்ளாததால் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. 100 நாள் திட்டத்திற்கான பணம் தற்போது வரை தர வில்லை.
தமிழ்நாட்டு மக்களை பிடிக்கவில்லை என்பதற்காக தொடர்ந்து ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. தேர்தல் நாடகம் ஆடி, ‘நாங்கள் வேறு, அவர்கள் வேறு’ என அ.தி.மு.க., இங்கு பொய் கூறி கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,பிப்.18- சென்னையில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மகளிர் விடியல் பயணம் அறிமுகம் செய்யப்பட்டு, பெண்கள் கட்டணமின்றி அரசு மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. சமூக, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உயர்த்தும் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், சென்னை மாநகரில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் நாள்தோறும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட 3,232 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளாக 1,500 பேருந்துகள் வரை இயக்கம் செய்யப்படுகின்றன. விடியல் பயணத்திட்டப் பேருந்துகளின் பயணியர் எண்ணிக்கையில பெண் பயணியர் எண்ணிக்கை சராசரியாக 63 விழுக்காடாக உள்ளது. பெண் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,சென்னையில் 174 சிவப்புநிற விரைவு பேருந்துகள் விடியல் பயணத் திட்டப் பேருந்துகளாக மாற்றப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.