வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக புகார்

2 Min Read

விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு அழைப்பாணை!
ஈரோடு காவல்துறையினர் வழங்கினர்

சென்னை,பிப்.18- ஈரோடு கிழக்குத் தொகுதி பிரச்சாரத்தில் சீமான் பேசிய பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் அவருக்கு காவல் துறையினர் அழைப்பாணையை வழங்கினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பவானி சாலையில் ரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “பெரியார் பிறந்த மண்ணில் நின்றுதான் அவரை விமர்சிக்கிறேன்; உங்களால் என்ன செய்துவிட முடியும்?
நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் கையில் இருப்பது வெடிகுண்டு. நீங்கள் என் மீது வெங்காயத்தை வீசுங்கள். நான் வெடிகுண்டை வீசுகிறேன்; என்ன நடக்கிறது என பார்ப்போம்” என்று பேசியிருந்தார்.
இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம், மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.

வழக்குப் பதிவு
இது தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார், அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப் படையில் கருங்கல் பாளையம் காவல் துறையினர், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 20ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு நேரில் சென்று ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் அழைப் பாணையை வழங்கினர்.
ஏற்கெனவே பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில் வடலூர் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழைப் பாணை அனுப்பப் பட்டது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய விவகாரத்தில் மூன்றாவது அழைப்பாணை அளிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *