சென்னை, பிப்.17 ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் நாளை (18.2.2025) செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளன. இதில், மோடி அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது முதற்கட்ட கண்டனத்தை தெரிவிக்க உள்ளனர்.
பங்கேற்போர்
இந்த ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பாரபட்சம்
இது குறித்து திமுக தலைமை நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, நிதி நிலை அறிக்கையில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார். பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட – தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
கண்களை உறுத்துகிறதா?
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பது மோடி அரசின் கண்களுக்கு உறுத்துகிறது. அதனால் தான் அரசியல்ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது பாஜக வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
தமிழ்நாடு ஒன்றிணையும்
இவ்வாறு வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.