மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்!
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி!
சிதம்பரம், பிப்.17 சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களின் தனி சொத்து அல்ல – அதை தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். நிரந்தரமாக மூடிக் கிடக்கும் நடராஜர் கோவில் தெற்கு வாசலைத் திறந்துவிடவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
15.2.2025 அன்று காலை சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவைத் தொடர்ந்து செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
அவரது பேட்டி வருமாறு:
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால், இந்த சிதம்பரம் மாநகரில் திராவிடர் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
தலைமைக் கழகம்
அனுமதி கொடுக்கும்!
சிதம்பரம் நகரில், கழகப் பிரச்சாரக் கூட்டங்கள், மாநாடுகள் இவையெல்லாம் எங்கள் கழகத் தோழர்களுடைய ஆர்வத்தின் காரணமாக மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன. ஏறத்தாழ ஒரு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெறுகின்றது. அவரவர்கள் – கழகப் பொறுப்பாளர்கள் பொதுக்குழுவை நடத்த விரும்பி இடத்தைத் தேர்ந்தெடுத்து கேட்பார்கள்; வாய்ப்பு இருக்கின்ற இடத்தில், தலைமைக் கழகம் நடத்திடுமாறு அனுமதி கொடுக்கும்.
அந்த வகையில், மாவட்டத் தலைவர் தோழர் பூ.சி.ளங்கோவன் அவர்களும், மற்ற பொறுப்பாளர்களும், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், அன்பு.சித்தார்த்தன், யாழ்.திலீபன் ஆகியோரும் இணைந்து பொதுக்குழுவை சிதம்பரத்தில் நடத்துவதற்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
திராவிடர் கழகப் பொதுக்குழுவில்
14 தீர்மானங்கள்
பொதுக்குழு உறுப்பினர்களில் இருபாலரும் 550 தோழர்களுக்குமேல் வருகை புரிந்தார்கள். பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த 14 தீர்மானங்களும் தமிழ்நாட்டினுடைய, நம்முடைய நாட்டினுடைய பொதுத் தன்மைக்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமானவையாகும்.
சமூக, அரசியல், இன்றைய பொருளாதார போக்குகள் எப்படியெல்லாம் இருக்குமென முன்நோக்குச் சிந்தனையோடு அவற்றிற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி, தீர்மானங்களாக வடிவெடுத்திருக்கின்றோம்.
அப்படிப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானம் இரங்கல் தீர்மானம்.
எப்பொழுதும் பொதுக்குழுவில் மறைவுற்றவர்களின் பெயர்களைக் தீர்மானமாகக் குறிப்பிட்டு இரங்கல் போடுவது வழக்கம்தான்.
அதைத் தவிர மிக முக்கியமான 13 தீர்மானங்களின் நகல்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அந்தத் தீர்மானங்களின் மிக முக்கியமான கருத்துரைகளை மட்டும் சொல்கிறேன்.
‘மருத்துவ உயர்கல்வியில் இருப்பிடம் சார்ந்த இட ஒதுக்கீடு கூடாது!’ என்று சொன்ன உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பல வகைகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக மாநில உரிமைகளையே அது பாதிக்குக்கும்.
அதைக் கண்டித்து தமிழ்நாட்டில் அனைவரும் குரல் கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சியும், ஆளும்கட்சியும் இணைந்து குரல் கொடுத்திருக்கின்றன.
ஒரு பொது வேண்டுகோளாக….
அதை மறுபரிசீனை செய்யவேண்டும். இது மாநில உரிமைகளைப் பாதிக்கக் கூடிய செயல் என்பதை எடுத்துச் சொல்லி, திராவிடர் கழகம் ஒரு சமூக நலன் சார்ந்த இயக்கம் என்பதால், அதற்கேற்ப அனைவருக்கும் ஒரு பொது வேண்டுகோளாக சொல்லியிருக்கின்றோம்.
அதேபோன்று, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய வகையில், பல்கலைக் கழக துணைவேந்தர்களை ஆளுநர்களே நியமிக்கக்கூடிய அளவிற்கு, யு.ஜி.சி. என்று சொல்லக்கூடிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, அதை மற்றவர்கள்மீது திணிக்கக் கூடிய அளவில் இருப்பது – மாநிலங்களுடைய உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல – மிக முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு எங்கே இருந்து வேண்டுமானாலும் துணைவேந்தர்களாக வருவார்கள்; அவர்களுக்கு மொழி தெரியாது; பண்பாடு தெரியாது. இதைப்பற்றியெல்லாம் மாலையில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் விளக்கிச் சொல்லவிருக்கின்றோம்.
மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை யில் இருக்கக்கூடிய கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையின்கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவரவேண்டும்!
அதேபோன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத் துறையின்கீழ் தமிழ்நாடு அரசு கொண்டுவரவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், இந்து அறநிலையத் துறையின்கீழ் இருந்த சிதம்பரம் கோவில், பிறகு அது தீட்சிதர்களின் கைக ளுக்குப் போய்விட்டது.
அதனால், எப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைப்பற்றி யெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.
தமிழுக்கு இடமில்லாமல்,
தமிழர்களுக்கு இடமில்லாமல்…
தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராகவும், குழந்தை மண தடைச் சட்டத்திற்கும் விரோதமாக, அந்தக் கோவிலில் ஆதிக்கவாதிகளாக இருக்கக்கூடி யவர்கள் – கோவிலை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டிருக்கின்ற பொது தீட்சிதர்கள் என்று சொல்லக்கூடியவர்கள், தமிழுக்கு இடமில்லா மல், தமிழர்களுக்கு இடமில்லாமல் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையெல்லாம் தீர்மானமாக வடித்திருக்கின்றோம்.
அதுபோலவே, கோவில் அர்ச்சகர் உரிமை என்பது உச்சநீதிமன்றம் எல்லோருக்கும் ஆகம பயிற்சி கொடுத்து, எல்லாக் கோவில்களிலும் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்று சொல்லி, அது நடைமுறைக்கு வந்துவிட்டது.
ராமப்பய்யன் என்ற பார்ப்பனர்
ஆனால், அது குறிப்பிட்ட கோவில்களில் மட்டும்தான் இந்த நிலை இருக்கின்றது. பழனி கோவிலைப் பொறுத்தவரையில், முருகன், தமிழ்க்கடவுள், முருகனுக்கு தமிழில்தான் வழிபாடு என்று சொல்லுகின்ற நேரத்தில், ஏற்கெனவே முன்பு அங்கே அர்ச்சகர்களாக புலிப்பாணி பண்டாரம் என்று சொல்லக்கூடியவரை அந்த சமுதாயத்திலிருந்துதான் நியமித்து இருந்தார்கள். அவர்களையெல்லாம் திருமலை நாயக்கர் காலத்தில் இருந்த படைத்தளபதி ராமப்பய்யன் என்ற பார்ப்பனர், அந்தக் கோவிலில் சூத்திரர்கள் அர்ச்சனை செய்தால், நான் வணங்கமாட்டேன் என்று சொல்லி, திரும்பிப் போய், உடனே பாளையக்காரரை அழைத்து, கொங்குநாட்டிலிருந்து பார்ப்பனர்களை வரவழைத்து, பழனி கோவிலில் அர்ச்சகர்களாக்கினார் என்பதுதான் வரலாறு.
‘திராவிட மாடல்’ அரசின்
மிகப்பெரிய புரட்சி!
அதை மீண்டும், தமிழ் அர்ச்சகர்களை இன் றைக்கு இருக்கின்ற ‘திராவிட மாடல்’ அரசு கொண்டு வரவேண்டும். ஏனென்றால், சட்டப்படி நமக்கு வழி தெளிவாக இருக்கிறது. பயிற்சி பெற்றவர்கள் அர்ச்ச கர்களாக வரட்டும்.
தமிழ்க் கடவுள் என்று சொல்லிவிட்டு, தமிழர்கள் உள்ளே போக முடியாது என்று சொல்ல முடியாது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பது ‘திராவிட மாடல்’ அரசின் மிகப்பெரிய புரட்சியாகும்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, ‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்க முடிந்த என்னால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லை’’ என்று சொன்னார்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முடிய வில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்தார். ஆனால், அது இன்னும் பரவலாக வரவேண்டும்.
சட்டத் தடைகளை நீக்குவதற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை
உரிய முறையில்…
பயிற்சி நிலையங்கள் தொடரப்படவேண்டும். அதற்குச் சில இடையூறுகள், அல்லது சட்டத் தடைகள் இருந்தால், அந்த சட்டத் தடைகளை நீக்குவதற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை உரிய முறையில், உச்சநீதிமன்றத்தில் சரியான வழக்குரைஞர்களை வைத்து வாதாடி, சிறப்பாக முழுமையடையச் செயல்பட வேண்டும்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஒரு சில தடங்கலும், குறுக்கீடுகளும் வந்தால், அந்தக் குறுக்கீடுகளைத் தாண்டி செய்யப்படவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
அதேபோலத்தான், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்திற்கு விரோதமாக சிதம்பரம் கோவிலில் தெற்கு வாசல் நுழைவுவாயிலேயே மூடி வைத்திருக்கிறார்கள்.
நந்தன் போன வாயில் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். அதை திறந்துவிடவேண்டும். அதற்காக ஏராளமான உள்ளூர்த் தோழர்கள், மற்றவர்களும் கட்சி வேறுபாடில்லாமல் பாடுபடுகின்ற நேரத்தில், அதனை ஒருங்கிணைந்து செய்யவேண்டும்.
இன்றைக்குப் பெரிய அளவில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடுதான் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றது என்று நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு கொடுத்திருக்கின்ற அறிக்கையில்…
கல்வியில், தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. தொழில் வளத்தில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது என்று ஒன்றிய அரசு கொடுத்திருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு அமைச்சர்களும் சொல்கிறார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய நிதியைக் கேட்டால், தர மறுத்து, மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டதற்குப் பேரிடர் என்று அதனை அறிவிக்கக்கூட மறுக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு பைசாகூட தரமால் இருக்கிறார்கள்.
அண்மையில்கூட மெட்ரோ திட்டத்திற்குப் பணமே கொடுக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு சொல்லி யிருக்கிறது. இவ்வளவுப் போக்குவரத்து நெரிசை சமாளிக்க, மெட்ரோ திட்டம் நடைபெற்று வருகிறது. அந்தத் திட்டத்திற்காக ஒன்றிய அரசு நிதியைக் கொடுக்காமல் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும், நிதியை இழுத்துப் பிடிக்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. ‘திராவிட மாடல்’ அரசு, மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று குறை சொல்கிறார்கள். இது பெரிய முரண்பாடு!
தேர்தல் வாக்குறுதிகளை எப்பொழுது நிறைவேற்ற முடியும்? தமிழ்நாடு ஆட்சிக்குரிய நியாயமான நிதித் தொகையைக்கூட கொடுக்காமல் இருக்கிறது ஒன்றியது அரசு.
ஓரளவிற்கு அனுமதிக்கப்பட்ட வரையில், கடன் வாங்கித்தான் திட்டங்களைச் செயல்படுத்தி வருகி றார்கள்.
இந்த வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற நிலை இருக்கக்கூடாது.
“கூட்டுறவு கூட்டாட்சி” என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு…
மக்களுடைய வரிப் பணத்தை அதிகமாக நாம்தான் ஒன்றிய அரசுக்குக் கொடுக்கின்றோம். “கூட்டுறவு கூட்டாட்சி” என்கிற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு நிதியைக் கொடுக்கமாட்டோம்; எங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம் என்று சொல்வதா?
பீகாருக்கு வாரி வழங்குகிறார்கள்; ஆந்திராவிற்கு வாரி வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், ஒன்றியத்தில் உள்ள மைனாரிட்டி பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு கொடுக்கின்றவர்கள் அங்கெல்லாம் ஆட்சியில் இருப்பதால்தான்.
ஓரவஞ்சணையான செயல்பாடுகளை
ஒன்றிய அரசு செய்து வருகிறது!
எனவே, ஒரு பாரபட்சமான, வஞ்சகமான, ஓரவஞ்ச ணையான செயல்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. இதனைக் கண்டிக்க அத்துணைப் பேரும் முன்வரவேண்டும்.
ஏனென்றால், இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், நாளைக்கு எதிர்க்கட்சியாக வருவார்கள். ஜனநாயகத்தில் மாறி மாறி வருவார்கள்.
மாநில உரிமைகள் என்பது நிரந்தரமானவை! மாநில அதிகாரங்களை, உரிமைகளை ஒன்றியத்தில் ஆட்சி செய்யக்கூடியவர்கள் பறித்துவிட்டால், எந்தப் பயனும் கிடையாது.
அதுமட்டுமல்ல, சமூகநீதிக்கு விரோதமாக நிறைய செய்திகளைச் சொல்லுகிறார்கள்.
ஆகவே, அதைப்பற்றியும் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கி றது. மாலையில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் அதைப்பற்றியும் விளக்கிப் பேச உள்ளோம்.
விவசாயிகளுக்காக மிக முக்கியமான ஒரு தீர்மா னத்தையும் நிறைவேற்றியிருக்கின்றோம்.
நெல் கொள்முதல் விலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது!
நெல் கொள்முதல் விலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது ஒன்றிய அரசு என்று சொல்லியிருக்கின்றோம்.
நெல் கொள்முதல் விலைக்காகத்தான் விவசாயிகள் இன்றைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு முன்வரை அரசுதான் நெல் கொள் முதல் விலையை நிர்ணயம் செய்தது.
அதனை தாரை வார்த்துவிட்டு, தனியாரே அதன் விலையை நிர்ணயம் செய்வார்கள் என்று சொல்கி றார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுடைய ஆதிக்கம்தான் வளரும். இவற்றையெல்லாம் தீர்மானத்தில் சுட்டிக்காட்டி யிருக்கின்றோம்.
இதையெல்லாவற்றையும் விட மிகக் கொடுமை யானது என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய, இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் தனியார் மயமாக ஆக்கிக் கொண்டுவருகிறார்கள்.
அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் சலுகை விலையில்
பொதுத் துறை நிறுவனங்கள்!
பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக ஆக்கும்பொழுது இரண்டு ஆபத்துகள் உண்டு. ஒன்று, மக்கள் உடைமை, முதலாளிகளின் உடைமையாக ஆக்கப்படுகிறது. அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் சலுகை விலையில் அடிமாட்டு விலைகளுக்குக்கூட தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இது பொருளாதாரக் கண்ணோட்டம்பற்றியது.
சமூகநீதி கண்ணோட்டத்தில் மிக முக்கியமானது என்னவென்று சொன்னால், பொதுத் துறையில் இட ஒதுக்கீடு உண்டு. ஆனால், தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை.
ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக பொதுத் துறைகளை தனியார் துறைகளாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இட ஒதுக்கீடும் பாதிப்படுகிறது; தனிப்பட்ட முதலாளிகளும் ஏகபோகமாக வளருகிறார்கள்.
அகில இந்திய அளவில் ஒரு மாநாட்டினை கூட்டவிருக்கின்றோம்
இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்காக, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு வரவேண்டும் என்பதற்காக, அகில இந்திய அளவில் ஒரு மாநாட்டினை கூட்டவிருக்கின்றோம். ஒத்த கருத்துள்ளவர்கள், எல்லா கட்சியினரும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, இவற்றுக்கென ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பது மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாட்டுப் பொதுத் துறை நிறுவனங்களில், தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்புப் பெற முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கவேண்டும். இது சமூகத்தினுடைய அனைத்து அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினையாகும்.
எல்லாவற்றையும்விட, பண்பாட்டுப் படையின் ஆபத்து என்னவென்றால், செம்மொழி தமிழ் நிறுவனம் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அவர்தான் பாடுபட்டு உருவாக்கினார்.
தொல்காப்பியமே தமிழர்களால் இயற்றப்பட்டது அல்லவாம்!
இப்பொழுது அந்த நிறுவனம் என்ன செய்கிறது என்றால், தொல்காப்பியமே தமிழர்களால் இயற்றப்பட்டது அல்ல. அகத்தியர்தான், சமஸ்கிருதத்தில் இயற்றினார் என்று சொல்லி, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை நடத்துகிறார்கள்.
இன்றைக்குக்கூட வெளிவந்த ஒரு நாளேட்டில், தமிழ் வளர்த்த சான்றோர்களில் யார் முக்கியம் என்றால், அகத்தியர்தான் இலக்கணத்தை சமஸ்கிருதத்தில் கொடுத்தார் என்று புராணத்தை வரலாறாக ஆக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
ஆகவே, தமிழ்ப் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பில், அடுத்த மாதம் தமிழறிஞர்களையெல்லாம் அழைத்து நடத்தவிருக்கின்றோம்.
ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது!
ஆகவே, இந்த சிதம்பரம் பொதுக்குழு தீர்மானம் என்பது ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு சிறப்பான தீர்மானங்களாகும்.
இந்தத் தீர்மானங்களை உங்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு அர்ப்பணிக்கின்றோம்.
வேறு முக்கிய பிரச்சினையே
இல்லையா தமிழ்நாட்டில்?
செய்தியாளர்: நடிகர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறதே ஒன்றிய அரசு?
தமிழர் தலைவர்: நான் இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னேன் என்றால், இவ்வளவு முக்கியமான தீர்மா னங்கள் பின்னோக்கிப் போய்விடும். இதைத் தவிர வேறு முக்கிய பிரச்சினையே இல்லையா தமிழ்நாட்டில்? இது தேசிய பிரச்சினையா? அல்லது பன்னாட்டுப் பிரச்சினையா இது? அல்லது மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினையா இது? தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள்.
கட்சியைத் தேடுகிறார்கள்; அவர்களுடைய கட்சிக்குப் பலத்தைத் தேடுகிறார்கள். எந்த வகையிலும் அவர்களால் காலூன்ற முடியவில்லை. அதனால் வேரூன்றலாமா? என்று யாரையாவது பிடிக்கலாமா? என்று நினைக்கிறார்கள்.
ஒவ்வொரு கட்சியையும் பி டீமாக, சி டீமாக, டி டீமாக பா.ஜ.க. மாற்றிக் கொண்டிருக்கின்றது. அவர்களுக்குத் தெரிந்த கலை இதுதான். ஏனென்றால், மற்ற மாநிலங்களில் செய்வது போன்று, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்கள் மத்தியில் ஏதாவது செய்தும் அவர்களால் வர முடியாது. முட்டி முட்டிப் பார்த்து விட்டார்கள். மண்டை உடைந்து ரத்தம் வந்ததை தவிர, தோல்வியைத் தவிர வேறு இல்லை. அவர்களுடைய அந்த அனுபவத்தைத் தெரிந்து கொண்டார்கள்.
ஆகவே, யார் யாரையோ கூலிக்குப் பிடித்து, பெரியாரைப்பற்றி பேசச் சொன்னார்கள். அதுவும் அவர்களுக்குப் பயன் தரவில்லை. ‘‘புஸ்வாணம்’’ போன்று போய்விட்டது.
புதிய குதிரை ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். பொய்க்கால் குதிரை ஓடவில்லை; ஜட்கா வண்டி குதிரை ஓடவில்லை. காரணம், அவை ரேஸ் குதிரையோடு போட்டிப் போடவேண்டி இருப்பதால்.
அதனால், எந்தக் குதிரையும் ஓடவில்லை என்ப தால், இதுபோன்று பொய்க்கால் குதிரையையாவது பிடிக்க லாமா? என்று ஏதேதோ தந்திரங்களைச் செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால், ‘ஒய்’ பாதுகாப்பை கொடுத்து ‘தாஜா’ செய்து அதை நிறைவேற்றிக் கொள்ளலாமா என்று பார்க்கிறார்கள்.
நாட்டிற்கு – மொழிக்கு – இனத்திற்குப் பாதுகாப்பு இருக்கிறதா? என்பதுதான் மிகவும் முக்கியம்!
எந்தப் பாதுகாப்பு வேண்டுமானாலும் கொடுக்கட்டும்; அதேநேரத்தில், அவருக்குப் பாதுகாப்பு என்பது முக்கியமல்ல; நாங்கள் பாடுபடுவது, நாட்டிற்குப் பாதுகாப்பு இருக்கிறதா? மொழிக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? இனத்திற்குப் பாதுகாப்பு இருக்கிறதா?
என்பதுதான் மிகவும் முக்கியமானது!
பைத்தியங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்யவேண்டும்!
செய்தியாளர்: சீமான், பெரியார்பற்றி அவதூறு கருத்துகளைக் கூறுவதுபற்றி?
தமிழர் தலைவர்: பைத்தியக்காரர்களுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாது. அவர்களுக்கு வைத்தியம்தான் செய்ய முடியுமே தவிர, வேறு எதுவும் செய்ய முடியாது.
பைத்தியங்கள், கூலிகள், கூலிப் பட்டாளங்களை வைத்துக் கூட்டணியையா நடத்த முடியும்? சட்டம் – ஒழுங்கு அதனுடைய வேலையைச் செய்யும். பைத்தி யங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்யவேண்டும்.
பகுத்தறிவுவாதிகளைப்பற்றித்தான் கவ லைப்பட வேண்டுமே தவிர, பகுத்தறிவு இல்லாத வர்களைப்பற்றியோ, அன்றாடம் உளறிக் கொண்டு, சட்டையைக் கழற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
திராவிடர் கழகம் ஆரம்பத்தில் என்ன சொன்னதோ, அதே நிலைக்கு எல்லா பகுத்தறிவாளர்களும் வந்திருக்கிறார்கள்.
கமலாலயத்தின் செங்கல்லுக்குள் அண்ணாமலை இருக்கிறாரா?
செய்தியாளர்: பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை, அறிவாலயத்தின் செங்கல்லை ஒவ்வொன்றாக எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: முதலில் கமலாலயத்தின் செங்கல்லுக்குள் அவர் இருக்கிறாரா? என்று அவர் உறுதிப்படுத்திக் கொள்ளட்டும். பிறகு அறிவால யத்தைப்பற்றி அவர் கவலைப்படட்டும்.
ஏற்கெனவே இருப்பதை இடித்து இடித்துப் பழக்கப்பட்டவர்கள். இடித்துவிட்டு, நாடு முழு வதுமிருந்து ஒவ்வொரு செங்கல்லாகக் கொண்டு போனவர்கள்.
நேற்று செங்கல்லைப்பற்றி சொன்னார்; இன்றைக்கு வேரோடு பிடுங்கப் போகிறேன் என்று சொல்கிறார். நன்றாகப் பிடுங்கட்டும், அதைப்பற்றி கவலையில்லை. முதலில் முடியுமா? என்று பார்க்கட்டும்.
நீதிக்கட்சியினுடைய வரலாற்றைப் பார்த்தீர்களே யானால், எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலத்தில் நடைபெற்ற வரலாற்றையெல்லாம் படிக்கக் கூடாது என்பதில்லை; படிக்கலாம். சத்தியமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் ஏவிவிட்டுப் பார்த்தார்கள். அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், அவரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள், ‘‘கட்சி தொடங்கி, 10 ஆண்டுகளிலேயே நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்களே?”
எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சி!
அண்ணாவினுடைய பெருந்தன்மையும், பேராளுமையும் எப்படிப்பட்டவை என்பதும், திராவிட இயக்கத்திற்கு இருக்கின்ற தெளிவும் எப்படிப்பட்டது என்பதும் அவருடைய பதிலில் தெரிந்தது.
அண்ணா அவர்கள் அழகாக சொன்னார், ‘‘இது எங்கள் சாதனையல்ல. 10 ஆண்டுகளில் நாங்கள் சாதித்துவிட்டோம் என்று நாங்கள் மார்தட்ட மாட்டோம். எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சி – அதனுடைய தொடர்ச்சிதான் இந்தப் பேரனுடைய ஆட்சி” என்றார்.
ஆகவேதான், திராவிட இயக்கத்தை எதிர்த்து யார் யாரோ முயன்று பார்த்தார்கள்; மா.பொ.சி.கூட ‘‘திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டினை” நடத்தியவர்தான். கடைசியாக, மா.பொ.சி.க்கு எல்லா வாய்ப்புகளையும் கொடுத்தது திராவிட மாடல்தான். மா.பொ.சி.க்கு சிலை திறந்ததும் திராவிட மாடல்தான்.
அண்ணாமலைக்கு அவரைப்பற்றியெல்லாம் தெரியாது. வயதும் போதாது; வரலாறும் தெரியாது; அத னால்தான் அவர் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இடித்தே பழக்கப்பட்டவர்கள் அவர்கள்!
அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற திட்டம் ஏதுமில்லை என்பதால்தான், அடுத்தவர் கட்சிக் கட்டடத்தை இடிக்கிறேன் என்று சொல்கிறார்.
ஏனென்றால், இடித்தே பழக்கப்பட்டவர்கள் இவர்கள். வடநாட்டில் வேண்டுமானால், இடித்ததினால் ஆட்சிக்கு வந்திருக்கலாம்; இடிப்பதற்காக கடப்பாரையைத் தூக்குகிறோம் என்பதெல்லாம் வடநாட்டு வேலை.
மசூதியை இடிக்கிறோம்; அந்த இடத்தில் கோவிலைக் கட்டுகிறோம் என்று வடநாட்டில் வேண்டுமானால் சொல்லலாம்; அந்தப் பாச்சா, அந்தப் பருப்பு இங்கே வேகாது.
செய்தியாளர்: அண்மைக்காலமாக திராவிட கட்சி களை எதிர்ப்பதையே ஒரு பாலிசியாகவே வைத்தி ருக்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: நிச்சயமாக! காரணம் என்ன வென்றால், சொந்த சரக்கு அவர்களிடம் இல்லை. பரபரப்பான வியாபாரம் எப்பொழுது வரும்? நாங்கள் இவ்வளவு ஆழமான திட்டங்களைச் சொல்கிறோம்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலரும்கூட…
காலைச் சிற்றுண்டி உணவினை மாணவர்களுக்கு ‘திராவிட மாடல்’ அரசு வழங்குகிறது. அதேபோன்று மற்ற மற்ற திட்டங்களையும் செயல்படுத்துகிறது.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் பலரும்கூட தமிழ்நாட்டில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்களை நோக்கித்தான் வருகிறார்கள்.
‘குஜராத் மாடல்’ என்னாயிற்று? ‘உ.பி. மாடல்’ என்னாயிற்று? போட்டோ பிடித்துப் போடுவதைத் தவிர, ஆக்கப்பூர்வமாக வேறொன்றுமில்லை.
கும்பமேளாவில் 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர, அங்கே சென்றவர்கள் எத்தனைப் பேர் உயிரிழந்தார்கள் என்கிற உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லையே!
திட்டிக் கொண்டிருப்பதோடு, திக்கிக் கொண்டிருக்கிறார்கள்; சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்!
இவ்வளவு பிள்ளைகள் படித்தார்கள்; இவ்வளவு பேர் மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு இன்னின்ன திட்டங்களைச் செய்தி ருக்கிறோம் என்று சொல்வது தமிழ்நாட்டில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி.
திட்டம் இருக்கின்றவர்கள் அந்தத் திட்டங்க ளைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஒன்றுமில்லாதவர்கள், திராவிட இயக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். திட்டிக் கொண்டி ருப்பதோடு, திக்கிக் கொண்டிருக்கிறார்கள்; சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலியல் குறறத்திற்கு தூக்குத் தண்டனை வரைக்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்!
செய்தியாளர்: பாலியல் பிரச்சினைகளில் அய்.பி.எஸ். அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே?
தமிழர் தலைவர்: அதற்காகத்தான், அந்தக் குற்றத்திற்காக தூக்குத் தண்டனை வரைக்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
வேறு எந்த மாநிலத்திலாவது, ‘திராவிட மாடல்’ அரசைத் தவிர, இதுபோன்று ஒரு சட்டத்தை நிறை வேற்றி இருக்கிறார்களா?
இந்த ஆட்சியில் மட்டுமல்ல; கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது, காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ராஜேஷ் என்பவர்மீது வழக்குப் போட்டு, நீதிமன்றம் தண்டனையும் வழங்கியிருக்கிறது.
அதே காவல்துறையைச் சேர்ந்த அய்.பி.எஸ். பெண்மணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததினால் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது என்பதை மறந்துவிடலாமா?
ஆகவேதான், தனிப்பட்ட முறையில் அவர்கள் நடந்ததை வைத்து, அரசை குற்றம் சொல்ல முடியாது.
அந்தக் குற்றத்திற்காக ஓர் அரசாங்கம் கணடிக்க முடியும்; சட்டம் அதனுடைய கடமையைச் செய்ய வேண்டுமே தவிர, அதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது.
சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும், அவர்க ளுக்கும் தண்டனையை பெற்றுத் தருகிறது திராவிட மாடல் அரசு.
கட்சிக்காரர்கள்மீதும்கூட நடவடிக்கை எடுக்கி றார்களா? இல்லையா!
கட்சிக்காரர்கள் என்பதினால், அவர்களை விட்டு விடுகிறார்களா என்றால் இல்லையே!
அப்படியென்றால், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த வர்கள்மீது வரிசையாக பாலியல் குற்றச்சாட்டுகள் வருகின்றனவே!
நம்முடைய நாடும், சமூகமும், ஒழுக்கமும் காப்பாற்றப்படவேண்டும்!
ஒருவர் ஒருவர்மீது குற்றம் சொல்லிக் கொண்டி ருப்பதைவிட, நம்முடைய நாடும், சமூகமும், ஒழுக்க மும் காப்பாற்றப்படவேண்டும் என்கிற பொது அக்கறை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.