சென்னை,பிப்.17- தமிழ்நாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியிட மாறுதல் பெற்றனர்.
கலந்தாய்வு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்பு வதற்காக கடந்த ஜன.5ஆம் தேதி நடந்த தேர்வில், எம்.பி.பி.எஸ். முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிப்பார்ப்பு பணிகள் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
சென்னை தேனாம் பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் அலுவலகத்தில் நடைபெற்று வந்த இந்தப் பணிகள் நிறை வடைந்துள்ளன.
இதில் பங்கேற்க மொத்தம் 4,585 மருத்துவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். பணி நியமனம் செய்யப்படவுள்ள மருத்துவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் சுமார் 4 ஆயிரம் மருத்துவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
4 ஆயிரம் அரசு மருத்துவர்கள்
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் மு.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால், ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை பணி புரிந்து வரும் அரசு மருத்துவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
வெளிப்படை தன்மையுடன் நடந்த இந்த கலந்தாய்வில் சுமார் 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்