காரைக்குடி, பிப்.16 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் கல்லூரியின் மேனாள் மாணவர்கள் அமைத்துள்ள பேராசிரியர் ராமநாதன் அறக்கட்டளையின் இரண்டாவது சொற்பொழிவு 14.2.2025 அன்று நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் நாகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியார் சிந்தனையாளர் எழுத்தாளர் ஓவியா ‘பெரியார் தமிழ்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார்.
அவர் கூறியதாவது:
மொழி நிலைத்திருக்க மொழியில் சிந்தனை வளம் பெருக வேண்டும், பெரியார் பேசிய தமிழே தமிழ்நாட்டின் எதிர்காலத் தமிழாக இருக்கும்; மாற்று வாழ்க்கை முறைகளைத் தமிழ்நாட்டில் முன் வைத்தவர் பெரியார்; மேலும் எதனையும் எவர் சொன்னாலும் கேள்வி கேட்டுத் தெளிந்த பின்பே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பெரியார் சொன்னார்.
முதல் தலை முறைக்கணிணியைக் கண்டு மகிழ்ந்த பெரியார்!
சென்னையில் ஓர் அலுவலகத்தின் ஏழாவது மாடியில் அமைக்கப்பட்டிருந்த முதல் தலை முறைக்கணிணியைக் கண்டு மகிழ்ந்த பெரியார், ‘‘இதனை ஒரு தமிழன் கண்டுபிடித்து இருந்தால் நான் நிறைய மகிழ்ந்து இருப்பேன்’’ என்று கூறியதாகக் குறிப்பிட்டார். பெரியார் தமிழரா என்று விமர்சித்து வரும் சூழலில் பெரியாரின் தமிழ்ப் பற்று உணரத்தக்கது என்று அவர் கூறினார்.
கல்லூரியின் செயலாளர் வீரப்பன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் கீதா வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் அன்பு மெய்யப்பன் நன்றி நவின்றார்.
இந்நிகழ்வில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம், தான் எழுதிய ‘‘வாச்சாத்தி வன்கொடுமை’’ என்னும் நூலின் 100 பிரதிகளை மாணவர்களுக்கு அனுப்பி இருந்தார். அவற்றை எழுத்தாளர் ஓவியா, மாணவர்களுக்கு வழங்கினார்.
புலவர் மாதவன், புலவர் சின்னையா, புலவர் குப்பான்செட்டி, புலவர் தேவதாசு மற்றும் பேராசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.