மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்!
அன்று நந்தன் உள்ளே விடாமல் தடுக்கப்பட்டார்
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
சிதம்பரம், பிப்.16 சிதம்பரத்தில் நேற்று (15.2.2025) திராவிடர் கழகப் பொதுக்குழு, ஊர்வலம், தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் அனைத்தும் வெகுச் சிறப்புடன் எழுச்சியுடன் நடைபெற்றது.
சிதம்பரம் மாவட்ட கழகம் சார்பில் நேற்று (15.2.2025) மாலை 6 மணியளவில் போல் நாராயணன் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமை யேற்று உரையாற்றினார்.
முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புதுவை மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா.குணசேகரன், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் மருத்துவக் குழுமம் மாநிலத் தலைவர் மருத்துவர் கவுதமன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூர்பாண்டியன், கழக சொற்பொழிவாளர் பிராட்லா என்னாரெசு, விருதுநகர் மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, கடலூர் மாவட்டக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், சிதம்பம் மாவட்டச் செயலாளர் யாழ்.திலீபன், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
கழக சொற்பொழிவாளர் தஞ்சை
இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். முன்னதாக ‘மந்திரமா? தந்திரமா’? நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் காட்டினார் திண்டுக்கல் ஈட்டி கணேசன்.
தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குைரஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேனாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநில மேனாள் தலை வர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணசேகரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் தமிழ் ஒளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் சேகர், இந்திய முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் அப்துல் ரப்பானி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தனது உரையில் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டிவிட்டு, பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மா னங்களில் சிதம்பரம் கோயில் பற்றிய தீர்மானத்தை விளக்கிப் பேசினார். அதில் ‘‘நந்தன் நடராஜன் கோயிலில் நுழைந்தாரா? பார்த்தாரா? நடராஜன் கூட, ‘‘நந்தனே உள்ளே வா’’ என்று அழைக்கவில்லை. ‘‘நந்தியே சற்று விலகு’’ என்று தான் சொன்னார். அதன்பிறகும் நந்தன் கோவிலுக்குள் நுழையவில்லை. நெருப்பில் இறங்கினால் நந்தன் உயர் ஜாதி ஆகிவிடுவார், அதன்பிறகு போகலாம் என்றார்கள். நந்தனும் நெருப்பில் இறங்கினார். எங்கள் நந்தனுக்கு ஏற்பட்ட கதி என்ன? உயிரைத்தான் விட்டார்” எனும் கருத்தில் பேசி, கலைஞர் இதுதொடர்பாக சொன்னதையும் குறிப்பிட்டுக் காட்டினார். ‘‘நந்தனை உள்ளே விட்டது திராவிடர் ஆட்சிதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் மூலமாக” என்று விளக்கினார்.
தொடர்ந்து அவர், “நந்தன் நுழைந்த தெற்கு வாசல் தீட்டு பட்டுவிட்டது என்று இன்றும் அந்த வாசல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டப்படி விதிமீறலாகும். ஆதலால் அந்த நுழைவு வாயிலை திறந்துவைக்க ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தீர்மானத்தை படித்துக்காட்டிவிட்டு மக்களைப் பார்த்து, நீங்கள் முழு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மக்கள் கைதட்டி ஆரவாரித்து அதை ஆதரித்தனர்.
நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் முருகன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
முன்னதாக பொதுக்குழு நடைபெற்ற அரங்கத்தில் இருந்து தொடங்கிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி சிதம்பரம் நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக இருபாலரும் தீச்சட்டி ஏந்தி ஒலி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் கருஞ்சட்டை படையினர் வீறுநடை போட்டனர். நிகழ்வை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடங்கிவைத்து சிறப்பித்தார். கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இருபாலருடன் இணைந்து தீச்சட்டி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.
எழுச்சியுடன் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணியை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடங்கி வைத்தார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், மகளிர் உள்பட தோழர்கள் தீச்சட்டி ஏந்தி மூடநம்பிக்கை ஒழிப்பு ஒலி முழக்க ஊர்வலம்.
காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார் (சிதம்பரம், 15.2.2025)