புதுடில்லி, ஜூலை 14 – திருமணம், விவாகரத்து, வாழ்வூதியம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.
பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து கூறலாம் என்று இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ஆம் தேதி பொது தாக்கீது வெளியிட்டது. கருத்து தெரிவிப்பதற்கு இன்று (14.7.2023) கடைசி நாள் ஆகும். இதுவரை 50 லட்சத்துக்கு மேற்பட்ட கருத்துகள் பெறப்பட்டு இருப்பதாக சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறிய தாவது:- இணையத்தில் மட்டுமின்றி, காகித வடிவத்திலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. எனவே, இறுதி எண் ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். சில அமைப்புகள், நேரில் கருத்து தெரிவிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த அமைப்புகளை அழைப்பது பற்றி சட்ட ஆணையம் முடிவு எடுக்கும் என்று அவர்கள் கூறினர்.