சென்னை,பிப்.15- திருப்பத்தூரைச் கவிஞர் ம.கவிதா எழுதிய ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ என்னும் கவிதை நூலின் வெளியிட்டு விழா 10. 2. 2025 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்றது.
புதுமை இலக்கியத் தென்றலும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடத்தியது. வி.சி.வில்வமும், வேல்.சோ.நெடுமாறனும் பாடல்கள் பாடினர். வரவேற்று தமிழ்சங்கு பதிப்பகத்தின் உரிமையாளர் வேலூர் மாவட்ட கழகத்தின் தலைவர் வி.இ.சிவக்குமார் உரையாற்றினார். வரவேற்புரையோடு புதுமை இலக்கியத்தென்றலின் செயலாளர் வை.கலையரசன் ஒருங்கிணைத்தார். திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் பா.மணியம்மை, பகுத்தறி வாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தலைமை ஏற்று புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் உரையாற்றினார்.
நூல் வெளியீடு
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலை வெளியிட, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நூலினைப் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது.நூலினைப் பதிப்பித்த வி.இ.சிவகுமாருக்கும், நூலாசிரியர் ம.கவிதாவுக்கும், அவரது இணையர் வி.ஜி.இளங்கோவுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்.
நூலின் ஆய்வுரையை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு நிகழ்த்தினார்.இந்த நூலில் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை,வாசிக்கும் எவரையும் நெகிழ வைக்கும்.’தந்தை பெரியார் தத்துவத்தின் ஈர்ப்புக்குள்ள இணையற்ற ஆற்றலின் வேகம்தான் என்னே! என்னே’ என்று குறிப்பிட்டு தன்னுடைய வாழ்த்துரையையே ஒரு கவிதை போல ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கிறார்.இந்த வாழ்த்துரையை மீண்டும் மீண்டும் வாசித்து நெகிழ்ந்து அழுவதுபோல ஆகிவிட்டேன் என்று தொலைபேசியில் கவிதா என்னிடம் சொன்னார். நூலாசிரியர் கவிதா தனது என்னுரையில் ‘பெரியாரைப் பிசைந்தூட்டினார் பேறுபெற்றது என் வாழ்வு’ என்று ஆசிரியர் அவர்களைக் குறிப்பிடுகிறார். பெரியாரைப் பிசைந்து, ஆசிரியரால் ஊட்டப்பட்டவள்தான் என்று தன்னைக் குழந்தையாகவும் ஆசிரியர் அவர்களைத் தாயாகவும் உருவகப்படுத்தி இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். மிக நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியரைப் பற்றிய கவிதைகள் இந்த நூலில் நிறைய உள்ளன.அதையே தனி நூலாக்கலாம் என்று நூலாசிரியர் கவிதாவையும், பதிப்பித்த வி.இ.சிவகுமாரையும் பாராட்டி, கவிஞர் ம.கவிதா எப்படி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பல்வேறு நிகழ்வுகளில் ஒரு ஆக்க சக்தியாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார். நூல் சிறப்பாக வந்திருக்கிறது என்பதையும் திராவிடர் கழகத்தின் தான் இணைந்ததால் தனக்கு கிடைத்த பெரும் ஆளுமைகளின் தொடர்பையும் சுட்டிக்காட்டி பல கவிதைகளை எடுத்துக்காட்டி நூல் ஆய்வு செய்தார். வாழ்த்துரையை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் பாவலர் சுப முருகானந்தம் நிகழ்த்தினார்.
பெண்ணின் வெற்றிக்குப் பின்னால்
திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் “பொதுவாக ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறார். அவர்தான் வி.ஜி.இளங்கோ.அவரைப் பாராட்டுகிறேன்.பெண்ணுக்குத் திறமைகள் இருக்கின்றன.ஆனால் வெளிப்படுத்தும் வாய்ப்புக்கிடைத்தால் அது வெளிப்படும்.அப்படி கவிதாவின் ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது.பொதுவாக கவிதைக்குப் பொய்யழகு என்பார்கள்.நமக்கும் தொழில்முறைக் கவிஞர்களுக்கும் வேறுபாடு உண்டு.நாம் கண்டிப்பாக கவிதைகளில் பொய்யழகை மேற்கொள்வது கிடையாது. நம் இயக்கத்துக் கவிஞர் புரட்சிக் கவிஞர்.கவிஞர் என்றால் அவர்தான். கவிதை எழுதுவதை விடக் கட்டுரை எழுதுவதுதான் கடினம். கவிதையைவிடக் கட்டுரையை அதிகம் பேர் படிக்கின்றார்கள். கட்டுரையை எழுதுவதற்குப் பல முயற்சிகள் எடுக்கவேண்டும்.கவிதை என்பது மக்களால் வரவேற்கப்படுகின்ற ஒரு வடிவம். இரசனையுள்ளது.இந்தப் புத்தகத்தை நான் முழுவதுமாகப் படித்துவிட்டேன்.” என்று குறிப்பிட்டு நூலில் உள்ள ‘விடுதலை’ என்ற கவிதையின் சிறப்பு பற்றியும்,தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியாருக்கு முன்னால் கவியரங்கத்தில் தான் பாடியதையும் நினைவு கூர்ந்து பாராட்டி உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய சிறப்புரையை ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள் நிகழ்த்தினார். இந்த நூலினைப் பாராட்டியும், கவிதாவையும் அவரது இணையர் வி.ஜி.இளங்கோவனையும் பாராட்டியும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் பற்றியும், புரட்சிக்கவிஞர் பற்றியும் உரையாற்றி, புரட்சிக் கவிஞர் பரம்பரைக் கவிஞர்கள் முடிந்துவிடவில்லை, இன்னும் தொடர்கிறது என்று அறிவித்து, இன்றைய புரட்சிக்கவிஞர் பரம்பரைக் கவிஞர்களின் பட்டியல் விடுதலையில் தொடர்ந்து வெளியிடப்படும் என்று பலத்த கைதட்டலுக்கு இடையே அறிவித்தார்.
வாழ்வியல் சிந்தனைகள்
ஏற்புரையை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத்தலைவர் ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ நூலாசிரியர் கவிஞர் ம.கவிதா நிகழ்த்தினார். தான் கிராமத்தில் வளர்ந்த சூழல், வாழ்வியல் சிந்தனைகளைப் படித்ததால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்,தன்னுடைய பெற்றோர்களின் பகுத்தறிவு மனப்பான்மை, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் இணைந்து பல்வேறு நூல்களைப் பற்றிப் பேசக் கூடிய,கேட்கக்கூடிய வாய்ப்பு, அதன் மூலமாக்க் கிடைத்த மகிழ்ச்சி,முதன்முதலில் விடுதலைக்கு கட்டுரை அனுப்பியபோது வெளியிட்டு ஊக்கப்படுத்திய கவிஞர் கலி.பூங்குன்றன், அதனைப் போல தான் தொடர்ந்து எழுத இசையின்பன் கொடுத்த ஊக்கம், இன்றைக்கு நூல் வெளியீடு, அதில் கிடைத்த மகிழ்ச்சி அதற்குத் தன்னுடைய இணையர் வி.ஜி.இளங்கோ கொடுத்திருக்கக்கூடிய ஒத்துழைப்பு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் நன்றி கூறி ஏற்புரை நிகழ்த்தினார். ம.கவிதாவின் இணையர் வி.ஜி.இளங்கோ மிகச்சிறப்பாக எதார்த்தமாகவும் அருமையாகவும் நன்றியுரைக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலக நிதியாக ரூ.15,000த்தை கவிதா-இளங்கோ இணையர் வழங்கினர்.