டெராடூன், ஜூலை 14 – நீட் தேர்வு விலக்கு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி உள்பட தமிழ்நாடு 14 கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்வைக்க உள் ளார்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இன்று (14.7.2023) நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்கும் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் அந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்.
முன்னதாக, அவர் டேராடூனுக்கு நேற்று (13.7.2023) மாலை சென்றார். அங்கு நடைபெறும் மாநாட்டில் பேசும் அவர், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாகவே ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து மனு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது:
மருத்துவ மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங்கை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தற்போது நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், முழுமையாக அதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை திறப்பு, 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி உள்ளிட்ட 14 கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடம் முன்வைக்க உள்ளோம் என்றார் அவர்.